திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம்… தடையும் அனுமதியும் : உச்ச நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?

By Kavi

|

Published on 20 Nov 2026, 3:24 PM

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) இடைக்கால தடை விதித்துள்ளது. எனினும், வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று, ஒருமுறை மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக, அந்த சர்வே தூணில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம் பஞ்சோலி அனுமதி வழங்கியுள்ளனர். 

இந்த அனுமதி ஒரே ஒருமுறை மட்டுமே பொருந்தும் என்று தெளிவுபடுத்தியுள்ள நீதிபதிகள், வரும் ஆண்டுகளிலும் சம்பந்தப்பட்ட அந்த தூணில் தீபம் ஏற்றுவதற்கான நிரந்தர உரிமையாக இந்த உத்தரவை கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

மேலும், “சர்ச்சைக்குரிய அந்த தூணில் தீபம் ஏற்றுவது நீண்ட காலமாக இருந்து வரும் வழக்கமான நடைமுறை என்பதற்கான ஆதாரமாக இந்த உத்தரவை எந்த தரப்பினரும் பயன்படுத்த முடியாது.

வரும் நவம்பர் 24ஆம் தேதி தீபம் ஏற்றும் நிகழ்வில் கோயில் நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். 

ADVERTISEMENT

பொதுமக்கள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் அமைந்துள்ள பகுதிக்கு செல்ல அனுமதி கிடையாது. 

அந்தப் பகுதிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படையான சிஐஎஸ்எப் வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தலாம்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

ADVERTISEMENT

தமிழக அரசு வாதம் 

கடந்த 2025 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெயதீப் குப்தா, மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், அறநிலையத்துறை ஆணையர் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசாந்தோ சந்திர சென் ஆகியோர் வாதங்களை முன் வைத்தனர். 

‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது வழக்கமான நடைமுறை அல்ல. அது தீபத்தூண் கிடையாது, சர்வேதூண். 

இங்கு தீபம் ஏற்ற அனுமதித்தால் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சர்வே தூணுக்கும் மதச்சாயம் பூசப்படும். 

ஆகம விதிகளின்படி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள வழக்கமான இடத்தில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது’ என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை முன் வைத்தனர். 

தர்கா தரப்பு வாதம்

சிக்கந்தர் பாதுஷா தர்கா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹுசைபா அஹ்மதி மற்றும் மூத்த வழக்கறிஞர் அமித் திவாரி ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். 

அவர்கள், “இந்த வழக்கில் அதிகம் பாதிக்கப்பட்டது தர்கா தரப்பு தான். தர்காவிற்கு முன்னறிவிப்பு இன்றி தனி நீதிபதி அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். 

புதிய மத வழக்கத்தை உருவாக்க விரும்பினால் அதற்காக உரிய சிவில் வழக்கு தான் தொடர வேண்டுமே தவிர ரிட் மனு மூலமாக அதனை செய்ய முடியாது.

1923 ஆம் ஆண்டு உத்தரவின்படி, அந்த முழு குன்றின் மீதும் தர்காவுக்கு முழு உரிமை உள்ளது. 

நெல்லித்தோப்பு பகுதி, தர்காவை நோக்கி பாறையில் செதுக்கப்பட்ட படிக்கட்டுகள் மற்றும் தர்கா தற்போது அமைந்துள்ள இடம் மட்டுமே தர்காவுக்கு உரிமையுடையது என்ற தனி நீதிபதியின் கருத்து தவறானது” என்று தெரிவித்தனர். 

இந்த வழக்கில் மாநில அரசுக்கு ஆதரவாக ஒரு அர்ச்சகர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆஜராகி வாதங்களை முன் வைத்த மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா, “திருப்பரங்குன்றம் மலையில் சமணர் குகைகள், காசி விஸ்வநாதர் கோயில், தர்கா உள்ளிட்ட பல்வேறு மத அடையாளங்கள் உள்ளன. எனவே இந்த மலை மத நல்லிணக்கம் கொண்ட மதச்சார்பற்ற தன்மை வாய்ந்த பகுதியாகும். 

இதற்கு முன்னதாக மலையில் உள்ள அந்தத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

2024 ஆம் ஆண்டு தர்கா அமைந்துள்ள பகுதிக்குள் ஆடு, கோழி ஆகியவை பலியிட அனுமதி கோரியபோது அதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது” என்று சுட்டிக்காட்டினார்,

தீபம் ஏற்ற கோரியவர்களின் வாதம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கேட்டு ரிட் மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், தர்கா அமைந்துள்ள மலை உச்சியில் தீபத்தூண் இல்லை. தர்காவுக்கு சொந்தமான பகுதி தொடர்பான வாதங்கள் இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சி ஆகும். அந்த தூண் அமைந்துள்ள பகுதி தர்கா அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு மலை உச்சியில் இருக்கின்றன” என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவையும், திருப்பரங்குன்றம் மலை தொடர்பான புகைப்படங்களையும் சமர்ப்பித்தார். 

வழக்கின் பின்னணி 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2025 டிசம்பர் மாதம் சம்பந்தப்பட்ட அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை அப்போதைய திமுக அரசு அமல்படுத்தவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தன. 

இதையடுத்து 2026 ஜனவரி 6ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. 

மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என்றும் கோயில் நிர்வாகம் தனது பாரம்பரிய நடைமுறைகளை பாதுகாக்க வேண்டிய கடமை கொண்டுள்ளது என்றும் தெரிவித்தது. 

அந்த தூண் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட நில அளவை கல் என்ற தமிழக அரசின் வாதத்தையும் இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்தது. 

இந்த உத்தரவுகளை எதிர்த்துதான் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், கார்த்திகை தீபத்தன்று மட்டும் விளக்கேற்ற அனுமதி வழங்கியுள்ளது. 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel