எ.வ.வேலு வழக்கு: ஜூனியர் விகடனுக்கு தடை- உயர்நீதிமன்றம் பரபர உத்தரவு!

By Mathi

|

Published on 20 Nov 2026, 8:48 PM

EV Velu High court

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்பாக ஜூனியர் விகடன் இதழில் வெளியான கேலிச்சித்திரத்தை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எ.வ. வேலு ரூ.5,000 கோடி ஊழல் செய்துவிட்டதாகவோ, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் உள்ள வழக்குகளில் அவர் குற்றவாளி என்று உறுதியாகிவிட்டதாகவோ சித்தரிக்கும் செய்திகள், தலைப்புகள், கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்களை வெளியிடுவதற்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி என்ன?

நவம்பர் 22-ந் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், என். பொன்குமரகுருபரன் எழுதிய ‘அன்பிலுக்கு அடுத்து வேலு…’ என்ற தலைப்பிலான கட்டுரை வெளியானது.

ADVERTISEMENT

இந்தக் கட்டுரையில், கடந்த 2025-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைப்புப் பணிகளில் (Patch Work) ரூ.2,200 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக தற்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் குற்றம்சாட்டியிருப்பதாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் சாலை சீரமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் விருப்பம்போல வழங்கப்பட்டதாகவும், பணிகள் நடைபெறாமலேயே பணம் எடுக்கப்பட்டதாகவும், அந்தப் பணத்தில் அதிகாரிகளுக்கும் அப்போது ஆட்சியில் இருந்தவர்களுக்கும் பங்கு பிரிக்கப்பட்டதாகவும் பெயர் குறிப்பிடப்படாத ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறியதாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இவ்வாறு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும், சாலை சீரமைப்புப் பணிகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும், பெயர் குறிப்பிடப்படாத மூத்த அமைச்சர்களை மேற்கோள்காட்டி, அன்பில் மகேஷைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் அடுத்த இலக்கு எ.வ. வேலுதான் என்றும், அவரது இடங்களில் சோதனை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

‘அன்பிலுக்கு அடுத்து வேலு… அடுத்த ரெய்டு ரெடி?’ என்ற துணைத் தலைப்பின் கீழ், எ.வ. வேலுவின் பெயரும் விசாரணை வளையத்துக்குள் வருமா என்ற கேள்வி வலுப்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய கேலிச்சித்திரம் ஜூனியர் விகடன் அட்டைப்படத்திலும், இதழின் 45-வது பக்கத்திலும் இடம்பெற்றிருந்தது.

எ.வ. வேலு தொடர்ந்த வழக்கு

இந்த வெளியீடுகளுக்கு எதிராக எ.வ. வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஆனந்த விகடன் பதிப்பக நிறுவனம், ஆனந்த விகடன் டிஜிட்டல் நிறுவனம், விகடன் டாட் காம் நிறுவனம், நிர்வாக இயக்குநர் பி. சீனிவாசன், ஜூனியர் விகடன் வெளியீட்டாளர் எம். அப்பாஸ் அலி, ஆசிரியர் டி. வெங்கடேஷ், அச்சிடுபவர் இ. ஜெயக்குமார் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

மேலும், சர்ச்சைக்குரிய அட்டைப்படத்தை இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடிய அடையாளம் தெரியாத நபர்களும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கில் எ.வ. வேலு 4 இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்தார்.

முதல் மனுவில் (O.A.No.1297/2026), நவம்பர் 22-ந் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழின் அட்டைப்படம் மற்றும் 45-வது பக்கத்தில் இடம்பெற்றுள்ள படத்தை அச்சிடுவது, வெளியிடுவது, விற்பனை செய்வது, விநியோகிப்பது, காட்சிப்படுத்துவது, இணையதளங்கள், செல்போன் செயலிகள், சமூக வலைதளங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மூலமாகப் பரப்புவது ஆகியவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். அவற்றின் நகல்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வடிவங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

2-வது மனுவில் (O.A.No.1298/2026), தான் ரூ.5,000 கோடி ஊழல் செய்துவிட்டதாகவோ, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வரும் 2 வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவோ செய்திகள், தலைப்புகள், கேலிச்சித்திரங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

மேலும், தன்னை சிறைக் கைதியாகவோ, தண்டனை பெற்ற குற்றவாளியாகவோ, ஊழல் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருப்பவராகவோ சித்தரிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தத் தடை ஜூனியர் விகடனின் குறிப்பிட்ட இதழுக்கு மட்டுமல்லாமல், வேறு இதழ்கள், பதிப்புகள் மற்றும் ஊடகங்களுக்கும் பொருந்த வேண்டும் என்றும் கோரினார்.

அதே நேரத்தில், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைகள் குறித்து உண்மையான, துல்லியமான செய்திகளை வெளியிடுவதற்கு இந்தத் தடை பொருந்தக் கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

3-வது மனுவில் (O.A.No.1299/2026), விகடன் இணையதளம், விகடன் செல்போன் செயலி மற்றும் அந்த நிறுவனம் நடத்தும் அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் சர்ச்சைக்குரிய அட்டைப்படத்தையும் 45-வது பக்கத்தில் உள்ள படத்தையும் நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

மேலும், அந்தப் படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பொருட்களையும் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

4-வது மனுவில் (O.A.No.1300/2026), சர்ச்சைக்குரிய அட்டைப்படம் மற்றும் 45-வது பக்கத்தில் உள்ள படத்தை அடையாளம் தெரியாத நபர்கள், இணையதள உரிமையாளர்கள் மற்றும் இணையதளங்களை இயக்குபவர்கள் உள்ளிட்டோர் அச்சிடுவது, வெளியிடுவது, இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்வது, பொதுமக்களுக்குப் பரப்புவது ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.

எ.வ. வேலு தரப்பு வாதம்

இந்த 4 மனுக்களும் நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தன. எ.வ. வேலு சார்பில் வழக்கறிஞர் ராகுல் பாலாஜி ஆஜராகி வாதிட்டார்.

தற்போதைய அமைச்சர் (ஆதவ் அர்ஜூனா) முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜூனியர் விகடன் இதழின் அட்டைப்படத்தில் எ.வ. வேலுவின் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குற்றச்சாட்டுகளுடன் இணைத்து கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் எ.வ. வேலுவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்று வாதிட்டார்.

கேலிச்சித்திரத்தைத் தொடர்ந்து வெளியிட அனுமதித்தால் எ.வ. வேலுவின் நற்பெயருக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு முடிவடையும் வரை கேலிச்சித்திரத்தை நீக்க உத்தரவிடுவதால் எதிர்மனுதாரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் வாதிட்டார்.

விகடன் தரப்பு வாதம்

விகடன் தரப்பில் வழக்கறிஞர் எம். ஸ்வப்னா சுந்தரி ஆஜரானார். இந்த வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு இன்னும் எண் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எ.வ. வேலு தாக்கல் செய்த மனுக்களுக்குப் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

இதற்கு எ.வ. வேலு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கேலி சித்திரத்தை நீக்குவதில் தாமதம் ஏற்பட்டால், எ.வ. வேலுவின் நற்பெயருக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்ன?

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர், ஜூனியர் விகடன் அட்டைப்படத்தில் எ.வ. வேலு சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தையும், அவர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மையையும் பரிசீலித்தார்.

இதுதொடர்பாக நீதிபதி தனது உத்தரவில்,

“Having regard to the nature of the allegations and the manner in which the plaintiff has been depicted on the cover page of the magazine, this Court is of the prima facie view that the grievance raised by the plaintiff requires consideration.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் ஜூனியர் விகடன் அட்டைப்படத்தில் எ.வ. வேலு சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்க்கும்போது, அவரது புகாரில் முகாந்திரம் இருப்பதாகவும், அது நீதிமன்றத்தின் பரிசீலனைக்குரியது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும்,

“The continued display of the caricature, pending consideration of the matter, may cause prejudice to the plaintiff.”

என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், கேலிச்சித்திரத்தைத் தொடர்ந்து வெளியிடுவது எ.வ. வேலுவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதனால், நீதியின் நலன் கருதி ஜூனியர் விகடன் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள எ.வ. வேலுவின் கேலிச்சித்திரத்தை நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிபதியின் உத்தரவில் இடம்பெற்றுள்ள தடைகள் என்ன?

எ.வ. வேலு தாக்கல் செய்த 4 மனுக்களையும் விசாரித்த நீதிபதி, சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை நீக்க உத்தரவிட்டதுடன், மற்ற 3 மனுக்களின் வேண்டுகோளின் படி அடுத்த விசாரணை நாள் வரை இடைக்காலத் தடை விதித்தார்.

இதன்படி, நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • ஜூனியர் விகடன் இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள எ.வ. வேலுவின் கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும்.
  • சர்ச்சைக்குரிய அட்டைப்படம் மற்றும் இதழின் 45-வது பக்கத்தில் இடம்பெற்றுள்ள படத்தை அச்சிடுவது, வெளியிடுவது, விற்பனை செய்வது, விநியோகிப்பது, காட்சிப்படுத்துவது, இணையதளங்கள், செல்போன் செயலிகள், சமூக வலைதளங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் மூலமாகப் பரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றின் நகல்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வடிவங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.
  • விகடன் இணையதளம், செல்போன் செயலி மற்றும் அந்த நிறுவனம் நடத்தும் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து சர்ச்சைக்குரிய அட்டைப்படத்தையும் படத்தையும் நீக்க வேண்டும். அவற்றைக் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
  • எ.வ. வேலு ரூ.5,000 கோடி ஊழல் செய்துவிட்டதாக உறுதியாகச் சித்தரிக்கும் செய்திகள், தலைப்புகள், அறிக்கைகள், கேலிச்சித்திரங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் உள்ள Crime No.3/2026 மற்றும் Crime No.08/2026 ஆகிய வழக்குகளில் எ.வ. வேலு குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதாகச் சித்தரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • எ.வ. வேலுவை சிறைக் கைதியாகவோ, தண்டனை பெற்ற குற்றவாளியாகவோ, குற்றத்தின் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருப்பவராகவோ சித்தரிப்பதற்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குறிப்பிட்ட சித்தரிப்புகளை ஜூனியர் விகடனின் வேறு இதழ்கள், பதிப்புகள் அல்லது பிற ஊடகங்கள் மூலமாக வெளியிடுவதற்கும் தடை பொருந்தும்.
  • சர்ச்சைக்குரிய அட்டைப்படம் மற்றும் படத்தை அடையாளம் தெரியாத நபர்கள், இணையதள உரிமையாளர்கள் மற்றும் இணையதளங்களை இயக்குபவர்கள் வெளியிடுவதற்கும், பொதுமக்களுக்குப் பரப்புவதற்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அதே நேரத்தில், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைகள் குறித்து உண்மையான, துல்லியமான செய்திகளை வெளியிடுவதற்கு இந்தத் தடை பொருந்தாது என்ற விதிவிலக்கும் உத்தரவின் ஒரு பகுதியாக உள்ளது.

நவம்பர் 26-ந் தேதி மீண்டும் விசாரணை

இந்த வழக்கில் விகடன் தரப்பினருக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்ப எ.வ. வேலு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், சிவில் நடைமுறைச் சட்டம் 1908-ன் Order XXXIX Rule 3(a), 3(b) விதிகளின்படி தேவையான நடைமுறைகளை நிறைவேற்றி, அதற்கான பிரமாணப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களைச் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை 3 மனுக்களில் வழங்கப்பட்ட இடைக்காலத் தடைகள் அமலில் இருக்கும். கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் என்ற உத்தரவு நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை பொருந்தும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel