தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது
கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் பலவும் போலியாக உருவாக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. ஏஐ மூலம் இந்த நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ராமசுப்பு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த 2024 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவை கடைபிடிக்காததால் தான் தற்போது இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் எம்.டி சுமதி அமர்வு விசாரித்து வருகிறது.
அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்திலும் பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என அதன் விவரம் குறித்து நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு விசாரணையை நீதிபதி லட்சுமி நாராயணன் கண்காணிப்பில் நடத்தலாம். இந்த தவறு நிகழ முக்கிய காரணம்? அதற்கு பொறுப்பான நபர் ஒருவர் இருப்பாரே?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு சார்பில், ”பொது நூலகத்துறை இயக்குனராக இருந்தவர் ஜெயந்தி. அவர் உயர்மட்ட குழு உறுப்பினர் செயலாளராகவும் செயல்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ”பொது நூலகத்துறை இயக்குனர் ஜெயந்திக்காக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம்” என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் நூலகர் காமாட்சி தரப்பில், “அகல் விளக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களை பெருமாள் முருகனே பரிந்துரைத்திருக்கிறார். தேர்வு குழுவை ஒருங்கிணைப்பதுதான் எனது பணி” என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிபதிகள், ”எத்தனை ஆண்டுகளாக நூலகராக வேலை செய்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு காமாட்சி சார்பில் 19 ஆண்டுகள் என்று பதிலளிக்கப்பட்டது.
மேலும், பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறிய முடியும் போது உங்களால் முடியாதா என்றும் தவறு நடந்திருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறீர்கள். அதற்கு பொறுப்பானவர்கள் யார்? என்றும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு காமாட்சி சார்பில், அகல் விளக்கு பதிப்பக புத்தகங்கள் பரிந்துரை குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உயர் மட்ட குழுவுக்கு தான் நான் அனுப்பினேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. பரிந்துரை செய்யப்பட்ட மின்னஞ்சல் குறித்த விவரத்தை தாக்கல் செய்தால் தவறு செய்தவர்கள் யார் என்பதை கண்டறியலாம் என்று வாதிடப்பட்டது.
தொடர்ந்து அரசு சார்பில், 26 ஆயிரம் புத்தகங்கள் பரிந்துரை குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று பரிந்துரை செய்யப்படாத புத்தகங்கள் ஒருங்கிணைப்பு குழுவால் இணைக்கப்பட்டு உயர்மட்ட குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதல் தொடர்பாக மட்டுமே தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகனுடைய மேலும் ஒரு வங்கி கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பில் இருக்கும் நீதிபதி லட்சுமி நாராயணன் இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைக்கிறோம்” என்று கூறினர்.
மேலும் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், நூலகத்துறை இயக்குனராக இருந்த ஜெயந்தி, உயர் மட்டக் குழு உறுப்பினர் ஆர்த்தி ஆகியோர் புத்தகக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தனர்.
புத்தகம் கொள்முதல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயணன் ஒரு வழக்கு விசாரணையின் போது, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அரசு அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவி இன்றி எப்படி அரசியல்வாதிகளால் லஞ்சம் பெற முடியும்? பெயர் தெரியாத பதிப்பகங்களுக்கு புத்தகங்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டது யார்?
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்றால் மட்டும் காவல்துறை வேகமாக செயல்படுகிறது என்று காட்டமாக கூறியுள்ளார்.
இதற்கு காவல்துறை சார்பில் புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வரும் நவம்பர் 23ஆம் தேதி இது குறித்த பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.









