புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்காததைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணன் குமார் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநில முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணன் குமார் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.
விழாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்காதது குறித்து அதிருப்தியடைந்த சாய் சரவணன் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரம் குறைந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பினாமிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கான அதிகாரம் புதுச்சேரியில் குறைந்துவிட்டது. அதிகாரம் பறிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் சட்டசபையே செத்துப் போய்விட்டது” எனக் கடும் வார்த்தைகளால் விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், “புதுச்சேரியில் 27-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும், 10-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். ஆனால், ஒருவர் கூட இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்காதது வெட்கக்கேடானது; இது அரசாங்கத்தைக் கேவலப்படுத்தும் செயல். முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் அதிகாரிகளும் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது என்பது எதிர்காலத்தில் ஜனநாயக நடைமுறையையே கேள்விக்குறியாக்கும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “சட்டமன்ற உறுப்பினர்கள் அதானி, அம்பானி அல்லது வேறு யாருடைய பினாமிகளாக இருந்தாலும், முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதிகார மையத்தின் செயல்பாடுகளில் கேள்வி எழுப்பித் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. இனிவரும் காலங்களில் முதலமைச்சர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்” என்றவர், தகாத வார்த்தைகளால் அதிகாரிகளை ஒருமையில் பேசி விமர்சித்துள்ளார்.
அவரது இந்தப் பேச்சு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. “யார் இந்த நபர்? ஓட்டுப் போட்டது என்னமோ ஒரு நபருக்கு; தட்டிக் கேட்க ஆளே இல்லையா?” என்று பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை தவெக சட்டமன்ற உறுப்பினர் தகாத வார்த்தைகளால் விமர்சித்துள்ளது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.









