’அகல்விளக்கு’ ‘போலி நூல்களை’ பரிந்துரைத்தவரே எழுத்தாளர் பெருமாள் முருகன்- நீதிமன்றத்தில் பரபர வாதம்!

By Mathi

|

Published on 21 Nov 2026, 7:09 AM

Madurai-Books-Perumal Murugan

தமிழக பொது நூலகங்களுக்கு போலியான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள முறைகேடு விவகாரத்தில், சர்ச்சைக்குரிய அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்களை வாங்குவதற்கு எழுத்தாளர் பெருமாள் முருகனும் பரிந்துரை செய்ததாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் முன்வைத்த வாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நவம்பர் 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைத் தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்றிய நூலகர் காமாட்சி உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காமாட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர். ராகவாச்சாரி நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார். அப்போது, நூல் கொள்முதல் முறைகேட்டில் தனக்குத் தொடர்பில்லை என்று காமாட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நூல் கொள்முதல் விவகாரத்தில் கீழ்நிலை நூலகர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன் என்றும், முடிவுகளை எடுத்த உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய அகல்விளக்கு பதிப்பகத்தின் சில நூல்களை வாங்குவதற்கு நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் பெருமாள் முருகனும் பரிந்துரை செய்ததாக வழக்கறிஞர் ராகவாச்சாரி தெரிவித்தார்.

ஆனால் நீதிபதிகளோ, ”அத்தகைய நூல்களை அவர் (பெருமாள் முருகன்) பரிந்துரைத்திருக்க வாய்ப்பில்லை” என்றனர். இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ”பெருமாள் முருகன் அந்த நூல்களைப் பரிந்துரைக்கவில்லை என்றால், அதனை அவர் பிரமாணப் பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார். இந்த வாதங்களால் நூல் கொள்முதல் முறைகேடு வழக்கு விசாரணையில் புதிய விவாதம் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், முன்னாள் பொது நூலக இயக்குநர் ஜெயந்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel