வனக் குற்றவாளியைப் போல அமைச்சரை பார்க்க வேண்டுமா?

By Pandeeswari Gurusamy

|

Published on 21 Nov 2026, 7:05 AM

அண்மையில் பாதுகாக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் வனத்துறையுடன் சென்ற அமைச்சர் வன்னியரசு, அது குறித்த வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், வனப்பகுதிக்குள் இருந்து புலி ஒன்று நடந்து சென்றது; அதைப் பார்த்ததும் அமைச்சர் விரட்டிச் செல்வது போன்று ஓடுகிறார். மேலும், கர்நாடகா பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் காட்டு யானை ஒன்றை அவர் நெருங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இதனிடையே, வனத்துறையினர் அமைச்சரைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று ரீல்ஸ் எடுக்க அனுமதித்தது யார் என இயற்கை மற்றும் வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் தேசியப் புலிகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமைச்சரின் வீடியோ விவகாரம் கடும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் அமைச்சர் வன்னி அரசுவின் நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்குக் கர்நாடகா வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதே சமயம், யார் எந்தப் பதவியில் இருந்தாலும் வனத்துறை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு, “நான் எந்தவித விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை; என்னைப் போன்றவர்கள் சனாதனத்திற்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும் செயல்படுவதால் பொறுக்க முடியாதவர்கள் அற்ப அரசியலுக்காக இதைச் செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்துச் சூழல் ஆர்வலர் ‘ஓசை’ காளிதாஸிடம் மின்னம்பலம் சார்பில் நாம் கேட்டபோது: அமைச்சர் வன்னி அரசு இது தொடர்பாக விளக்கம் சொல்லும்போது, “நான் ஒரு பெரிய இயற்கை ஆர்வலன்; நான் கடந்த 15 ஆண்டுகளாகக் காடுகளுக்கு ட்ரெக்கிங் சென்று வருகிறேன்” என்கிறார்.

அடிப்படையில் ட்ரெக்கிங் செல்வது என்பதே ஒரு இயற்கை பாதுகாப்பு விஷயமாகக் கருதுவதா என்பதே ஒரு கேள்விக்குறிதான். ஒரு மலையேற்றம் என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தரும்; ஆனால் அந்தக் காட்டுக்கும் மலைக்கும் அது பெரிய அளவில் பயனைத் தராது.

அதேசமயம், ஒரு அமைச்சருக்குக் காட்டிற்குள் சென்று வருவதற்கு அனுமதி உள்ளது; அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இந்த வீடியோவில் அவர் சொல்வது ஒரு சாகசப் பயணமாகத்தான் காட்டுகிறார். புலி, யானைகள் பின் செல்வதை அவரே ரீல்ஸாக எடுத்துப் போட்டுள்ளார்.

பெரும்பாலானவர்களுக்கு நாம் தொடர்ந்து வலியுறுத்தும் விஷயம், காடு என்பது சாகசத்திற்கும் பொழுதுபோக்கிற்குமான இடம் அல்ல. காட்டுயிர்களைப் பார்ப்பது என்பது, அதனுடைய போக்கில் அது செல்லும்போது அதை நாம் அமைதியாகப் பார்ப்பதுதான். அதனைப் பின்தொடர்ந்து போவது என்பதே, வன விலங்குகளுக்கு ஒரு வகையில் துன்புறுத்தலைத்தான் தரும். வனவிலங்குகள் போகும் போக்கில் நாம் செல்லும்போது வழியில் தென்பட்டால், அதைப் போகவிட்டு நாம் பார்க்க வேண்டும்.

ஒரு புலியைப் புகைப்படம் எடுத்துவிட்டால், நாம் பெருமிதம் கொள்ளும் விஷயம் என்பது நமக்குத்தான் பெருமிதம்; அந்தப் புலிக்கு அதில் எந்தப் பெருமிதமும் கிடையாது. “என்னைப் புகைப்படம் எடுத்துவிட்டார்கள்” என்று எந்தப் புலியோ, யானையோ பெருமிதம் அடைவதில்லை. இந்தப் புரிதல் மிகவும் முக்கியமானது.

அவர் காட்டிற்குள் சென்று காட்டைப் பார்ப்பது, விலங்குகளைப் பார்ப்பது எனத் தனது இயற்கை ஆர்வத்தை வெளிப்படுத்த எல்லா உரிமையும் உண்டு. ஆனால், “நான் யானை பின்னால் போனேன், புலி பின்னால் போனேன்” என்று சாகச உணர்வோடு வெளிப்படுத்தியதுதான் தவறு.

ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகத்திற்குள் சுற்றுலாப் பயணத்தையே தடை செய்து வைத்திருந்தது. புகைப்படக் கலைஞர்களும் வீடியோகிராபர்களும் புலிகளைப் பின்தொடர்வதால் அவை இறந்து போன சம்பவங்களும் உண்டு. அதற்குக் காரணம் இதுபோன்ற ஆர்வம்தான். “நான் ஒரு புலியைப் புகைப்படம் எடுக்க வேண்டும், அதைப் பின்தொடர வேண்டும்” என்ற மனநிலையே தவறானது.

காட்டுக்குள் சென்றால் புலியைப் பார்த்துவிட்டோம் என்ற பெருமிதமே தவறு. நாம் புலியைப் பார்த்துவிட்டால் அது நமக்கு ஒரு வாய்ப்பு, அவ்வளவுதான். “புலியைப் பார்த்துத்தான் ஆக வேண்டும்” என்ற மனநிலையே பெரிய தவறு. அதுதான் பல புலிகள் காப்பகங்களில் சுற்றுலா என்ற பெயரில் ஒரு பெரிய அழுத்தம் அங்கிருக்கும் காட்டுயிர்களுக்கும் காட்டுக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தத்திற்கு இது மாதிரியான மிக மிஞ்சிய ஆர்வம்தான் காரணம். இந்த இடத்தில் அக்கறை என்பது வேறு, ஆர்வம் என்பது வேறு. நம்மை முதன்மைப்படுத்துவதுதான் இது; ஆனால் அங்கு முதன்மைப்படுத்த வேண்டியது காடும் காட்டுயிர்களும் தான்.

சூழல் சுற்றுலாவிற்கும் சாதாரண சுற்றுலாவிற்கும் இடையில் உள்ள வித்தியாசமே இதுதான். சாதாரணமாக ஒரு சுற்றுலா சென்றால் நம்மை முதன்மைப்படுத்தலாம்; நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், என்ன உடை வேண்டுமானாலும் அணியலாம், எவ்வளவு வேண்டுமானாலும் சத்தம் போடலாம். ஆனால், சூழல் சுற்றுலா என்பது நாம் அமைதியாக இருந்துகொண்டு இயற்கையை கவனிப்பது. இந்த இடைவெளியைப் புரிந்து கொள்ளாததன் விளைவுதான் இது. நாம் அமைச்சரைக் குற்றம் சாட்டவில்லை; ஆனால் அவர் போன்றவர்கள் இனிமேல் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை ஆர்வம் என்கின்ற பெயரில் புலிகளையோ, யானைகளையோ பின்தொடர்ந்து போவதே சரியானது அல்ல. அப்படிப் போனாலும், அதைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது என்பது மிக மிகத் தவறானது. ஒரு அமைச்சரே இதைப் பகிர்வது என்பது மிகப்பெரிய தவறு.

முதுமலை புலிகள் காப்பகத்தில் பல இடங்களில் நெடுஞ்சாலைகளில், “வாகனங்களை நிறுத்தக்கூடாது, புகைப்படங்கள் எடுக்கக்கூடாது” என எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளோம். காரணம், அதற்கு நாம் தொல்லை கொடுத்துவிடுவோம் என்பதால்தான். நெடுஞ்சாலைகளிலேயே எச்சரிக்கை பலகைகள் வைக்கும் சூழல் உள்ள நிலையில், அமைச்சர் காட்டுக்குள்ளேயே சென்று இதுபோல் வீடியோ எடுத்துள்ளார். இதை அமைச்சரே புரியாமல்தான் செய்துள்ளார். எல்லோரும் செய்யும் சாகசத்தையே தானும் செய்வதாக அவர் நினைத்துள்ளார். இந்த மாதிரி சாகச உணர்வோடு காட்டிற்குள் செல்வது சரியானது அல்ல. இந்தப் புரிதல் பொது சமூகத்திற்கு இல்லை; இதைத்தான் அமைச்சரும் வெளிப்படுத்தியுள்ளார். இதைத்தான் பொது சமூகம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக நாம் பார்க்கிறோம். அதேசமயம், ஒரு வனக் குற்றவாளியைப் போல அமைச்சரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், காடுகளுக்குப் போவது என்கின்ற புரிதல் என்னவென்றால், “காட்டின் பாதுகாவலர் யார்?” என்று கேட்டால், “நான் பெரிய அளவில் இயற்கை ஆர்வலன், வாரந்தோறும் காட்டிற்குச் செல்கிறேன்” என்று ஒருவர் சொல்கிறார்; மற்றொருவர் “நான் இதுவரை காட்டிற்கே போனதில்லை” என்று சொல்கிறார் என்றால், “இதுவரை நான் காட்டிற்கே போனதில்லை” என்று சொல்பவர்தான் காட்டிற்கான மிகப்பெரிய பாதுகாவலர்.

அதேசமயம், பழங்குடி மக்களைத் தவிர்த்து வெளி உலகத்திலிருந்து மனிதர்கள் காட்டிற்குள் செல்லும்போது ஒரு அழுத்தம் ஏற்படும். நாம் காட்டுக்குள் செல்லும் மனநிலை என்பது எப்படிச் சென்றாலும் அழுத்தத்தை உருவாக்கும். அதனால், காட்டிற்குள் போகாமலேயே நாம் இருக்க வேண்டியது இல்லை. ஆதியில் நாமும் காடுகளில் இருந்தவர்கள்தான். இன்றும் மரங்களிலிருந்து நாம் கீழே விழுவது போன்று கனவுகள் வருவதற்கு ஆதி கானக வாழ்க்கைதான் காரணம். ஆனால், போகிற மனநிலைதான் மிகவும் முக்கியம். நாம் காதுகளையும் வாய்களையும் மூடிக்கொண்டு, கண்களை மட்டும் திறந்து வைத்துக்கொண்டு காடுகளுக்குள் செல்ல வேண்டும். காட்டின் ஒவ்வொரு அசைவையும் கண்டு ரசிக்க வேண்டும்; நமது எந்தச் செயல்பாடும் காட்டுயிர்களுக்குச் சிறு இடையூறு கூடக் கொடுக்கக் கூடாது.

ஆனால், “நான் போய் யானையைப் பின்தொடர்ந்தேன், புலியைப் பின்தொடர்ந்தேன்” என்று சாகசமாகப் பேசுவது தவறில் போய் முடிகிறது. அதுதான் அமைச்சர் விஷயத்தில் நடந்துள்ளது. இதை அமைச்சர் ஒரு உள்நோக்கத்தோடு தெரிந்து செய்தார் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை; அவர் தெரியாமல்தான் செய்துள்ளார். ஆனால், இப்படிச் செய்வதும் தவறானது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதும் தவறானது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் நாம் கோரிக்கையாக வைக்கின்றோம் என்று கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel