விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 40 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் போலீசார் பூஜை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வடிவேலுவின் 7 வயது மகள் ஹேமலதா, அக்டோபர் 11-ந் தேதி இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை சிறுமி திடீரென காணாமல் போனார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியைக் கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் அக்டோபர் 21-ந் தேதி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது வரை சிபிசிஐடி விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
காவல் நிலையத்தில் பூஜை
இதனிடையே, சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து சந்தேகத்திற்கிடமான மரணங்களும் விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. வனப்பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. விவசாயக் கிணற்றில் அழுகிய நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். மேலும், விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு ஏற்பாட்டில் நவம்பர் 20-ந் தேதி காலை காவல் நிலைய வளாகத்தில் பூஜைகள் நடத்தப்பட்டன. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற பூஜையில் காவல் ஆய்வாளரின் மனைவி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
காணாமல் போன சிறுமி விரைவில் கிடைக்க வேண்டும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களும் அசம்பாவிதங்களும் குறைய வேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்தில் யாகம் நடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.









