தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் மதகுப்பகுதியில் இருந்து முன் அனுமதி இன்றி கடந்த 17-ந்தேதி புதிய ஆயக்கட்டு விவசாய பாசனத்துக்காக த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் திறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
மதகை திறந்தது தொடர்பான வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தவெகவினரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த மதகின் பூட்டுக்கு 2 சாவிகள் இருந்தன. ஒரு சாவி நீர் வளத்துறை அதிகாரிகளிடமும், மற்றொரு சாவி ஆயக்கட்டு விவசாயிகளிடமும் இருந்தது.
இந்தநிலையில் நேற்று சோத்துப்பாறை அணை உதவி பொறியாளர் மனோஜ்குமார் பழைய பூட்டை அகற்றிவிட்டு புதிய பூட்டு போட்டார். மேலும் 2 சாவிகளையும் அவரே எடுத்து சென்றார்.
தொடர்ந்து தேனியில் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட சோத்துப்பாறை அணை பாசன நீரை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மற்றும் தேனி மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது தொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில் அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு முன் அனுமதி இன்றி சட்டவிரோதமாக தண்ணீர் திறந்து வட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, “சோத்துப்பாறை அணையின் மதகு பகுதியில் இருந்து சட்ட விரோதமாக நீரை திறந்து விட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் நீரை திறந்து விட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்ய ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து அணைகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில், அணையை திறந்த கும்பலை கைது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால், பூட்டுகளை வாங்கி பூட்டி இருக்கிறார்கள். அறுபது ஆண்டுகளாக தேவைப்படாத பாதுகாப்பு ஆறே மாத ஆட்சியில் அணைக்குக் கூட தேவைப்படுகிறது என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.









