ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2 கோடி அபராதம்- ஏன்?

By Mathi

|

Published on 21 Nov 2026, 8:52 AM

Star Health Insurance

மருத்துவ காப்பீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு உரிய பணத்தை வழங்க மறுத்தது, காப்பீடு விதிகளில் இல்லாத காரணங்களைக் கூறி பணத்தைப் பிடித்தம் செய்தது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, நவம்பர் 20-ந் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை IRDAI அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் 2025-ஆம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி விசாரணையும் நடைபெற்றது.

ADVERTISEMENT

குறிப்பாக, கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் உட்பட பலர், தங்களது மருத்துவ செலவுக்கான காப்பீட்டுத் தொகையைக் கேட்டிருந்தனர். ஆனால், சரியான காரணங்கள் இல்லை என கூறி பலருக்கு பணம் வழங்க ஸ்டார் ஹெல்த் நிறுவனம் மறுத்துள்ளது. மேலும், சிலருக்கு வழங்க வேண்டிய பணத்தில், காப்பீட்டு விதிகளில் இல்லாத காரணங்களைக் கூறி ஒரு பகுதியைப் பிடித்தம் செய்துள்ளது.

ஒருவர் மருத்துவ காப்பீட்டுத் தொகை கேட்டு விண்ணப்பித்தால், அந்தத் தொகையை முழுமையாக வழங்க முடியாததற்கான காரணத்தை நிறுவனம் தெரிவிக்க வேண்டும். உதாரணமாக, மருத்துவமனை செலவு ரூ.1 லட்சம் என்றும், அதில் ரூ.70,000 மட்டுமே காப்பீட்டு நிறுவனம் வழங்குகிறது என்றும் வைத்துக்கொள்வோம். மீதமுள்ள ரூ.30,000 ஏன் வழங்கப்படவில்லை? எந்த விதியின் அடிப்படையில் அந்தப் பணம் பிடித்தம் செய்யப்பட்டது? என்பதை வாடிக்கையாளருக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

ADVERTISEMENT

ஆனால், ஸ்டார் ஹெல்த் நிறுவனம் பலருக்கு இத்தகைய விளக்கங்களை அளிக்கவில்லை என்பதை IRDAI கண்டுபிடித்துள்ளது. இதனால், பணம் வழங்க மறுத்ததை எதிர்த்து வாடிக்கையாளர்கள் முறையிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரூ.2 கோடி அபராதம்

இந்த விதிமீறல்களுக்காக ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டுத் தொகையை நியாயமான காரணமின்றி வழங்க மறுத்ததற்காக ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காப்பீட்டுத் தொகையில் விதிகளை மீறி பணம் பிடித்தம் செய்தது, அதற்கான காரணங்களை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காதது ஆகியவற்றுக்காக மேலும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை தள்ளுபடி என்ன ஆனது?

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு மேலும் சில விவகாரங்களில் IRDAI எச்சரிக்கை விடுத்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள மருத்துவமனைகள் சில சிகிச்சைகளுக்குத் தள்ளுபடி வழங்குகின்றன. அந்தத் தள்ளுபடி மருத்துவக் கட்டணத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், மருத்துவமனைகள் வழங்கிய தள்ளுபடிகள் மருத்துவக் கட்டணத்தில் முறையாகக் கணக்கிடப்படுவதை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் உறுதி செய்யவில்லை என்று IRDAI தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவ காப்பீட்டைப் புதுப்பிப்பதற்கான பிரீமியம் தொகையை 90 நாட்களுக்கு முன்பே வசூலித்ததற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனம் மீது புகார் அளிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, காப்பீட்டு குறைதீர்ப்பாளர் பற்றிய விவரங்களை வழங்காததும் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு உத்தரவு

இனி மருத்துவ காப்பீட்டுத் தொகையை வழங்கும்போது, மருத்துவ செலவில் எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது, எவ்வளவு பணம் பிடித்தம் செய்யப்படுகிறது, அதற்கான காரணம் என்ன என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று IRDAI உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், குறைபாடுகளைச் சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ காப்பீடு எடுத்தவர்களுக்கு உரிய பணம் நியாயமாகவும் வெளிப்படையாகவும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் IRDAI வலியுறுத்தியுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel