முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
இந்த சூழலில் அண்மைக்காலமாக ஆந்திராவுக்கு அதிக தொழில் நிறுவனங்கள் வருகின்றன.
தமிழகத்துக்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த சூழலில் தமிழ்நாடு முதலீடு தொடர்பான ரகசிய தகவல்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாக சர்ச்சை எழுந்தது.
இதனால் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து 15 பேர் நீக்கப்பட்டதாகவும் அப்படி நீக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ஆந்திர தொழில் துறையில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வந்தன.
ஆனால் இதற்கு கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.
இது குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஊழியர்கள் பணி விலகுவது என்பது எந்த ஒரு நிறுவனத்திலும் சாதாரணமாக நிகழக்கூடியது.
கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் சிறந்த பணி வாய்ப்புகள், உயர்கல்வி, இடமாற்றம் அல்லது குடும்ப பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட மற்றும் தொழில் காரணங்களுக்கு ஊழியர்கள் விலகுகின்றனர்.
வேறொரு இடத்தில் வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள் உட்பட தனது ஊழியர்களின் தொழில் முறை லட்சியங்களை கைடன்ஸ் தமிழ்நாடு எப்போதும் மதித்து வருகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு எப்போதும் ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான போட்டியை பேணி வருகிறது என்று தெரிவித்திருந்தது.
இப்படி தமிழக தொழில் முதலீட்டு ரகசியங்கள் அண்டை மாநிலத்துக்கு கசிய விட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் கிண்டல் செய்யும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில், “ஆந்திர பிரதேசத்தின் மிக ரகசியமான முதலீட்டு உத்தி கசிந்துள்ளது. அது என்னவென்றால், “முதலீட்டாளர்களுக்கு அன்றே பதில் அளிப்பது”. தாராளமாக நீங்களும் இதை காப்பி அடித்துக் கொள்ளலாம்” என்று தமிழ்நாட்டை கிண்டல் அடிக்கும் விதமாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.
வெற்றி முதலீடு மற்றும் இரண்டாவது மாநாட்டுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது.
முதலீட்டு உறுதிமொழிகள், அவற்றை செயல்படுத்துவதற்கான இலக்குகள், களத்தில் தொடங்கப்படும் திட்டங்கள் மற்றும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.
முதல்வர் விஜய் தலைமையில் முதலீட்டு உறுதி மொழிகளை நடைமுறை சாத்தியமான திட்டங்களாக மாற்றி, களத்தில் முடிவுகளை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இன்னும் நான்கு நாட்களே உள்ளன ” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் நவம்பர் 25ஆம் தேதி தமிழ்நாட்டில் இரண்டாவது முதலீட்டு மாநாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.









