திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே தூணில் நவம்பர் 24-ந் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மண்டபத்தின் அருகில்தான் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஒருபோதும் மலை உச்சிக்குச் சென்று தூணில் தீபம் ஏற்றியதில்லை. இந்தத் தீர்ப்பு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்.
திருப்பரங்குன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். அங்கு இப்படியொரு நடவடிக்கை தேவையற்றது. இந்தத் தீர்ப்பு எனக்கு வருத்தமளிக்கிறது. நீதிபதிகள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு வைகோ கூறினார்.
திருப்பரங்குன்றம் தீர்ப்பு என்ன?
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்வே தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் நவம்பர் 20-ந் தேதி இடைக்காலத் தடை விதித்தது. அதேநேரத்தில், நவம்பர் 24-ந் தேதி மட்டும் அந்தத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இந்த அனுமதியை ஆண்டுதோறும் தீபம் ஏற்றுவதற்கான உரிமையாகக் கருதக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.









