கம்பு ரவை உப்புமா – கிச்சடி : ரெசிப்பி இதோ!

By Minnambalam Desk

|

Published on 21 Nov 2026, 9:17 AM

தினமும் காலையில் என்ன சமைக்கிறது என்பதே பல வீடுகளில் பெரிய கேள்வி. அப்படிப்பட்டவர்களுக்குச் சிறுதானியங்கள் நல்ல மாற்று. வழக்கமான கோதுமை ரவை, அரிசி உப்புமாவுக்குப் பதிலாகக் கம்பு ரவையில் சுவையான உணவுகளைச் செய்யலாம். காய்கறி, மசாலா, நெய் சேரும்போது கம்பு ரவையின் சுவை இன்னும் கூடும். காலைக்கும் மாலைக்கும் ஏற்ற இரண்டு எளிய ரெசிபிகள் இதோ.

கம்பு ரவை உப்புமா

ADVERTISEMENT

முதலில் இரண்டு கப் கம்பையும் ஒரு கப் பச்சரிசியையும் தனித்தனியாகக் கழுவி உலர்த்திக்கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளியுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்குங்கள். தேவையான உப்புப் போட்டு, 1 : 1.5 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள்.

ADVERTISEMENT

கொதித்ததும் கம்பு ரவையைக் கட்டி விழாமல் கிளறிச் சேர்த்து, மூன்று விசில் வரும் வரை வேகவிடுங்கள். கடைசியில் நெய் சேர்த்தால் மணக்கும் கம்பு ரவை உப்புமா தயார்.

கம்பு ரவை கிச்சடி

ADVERTISEMENT

இதற்கு ஒரு கப் கம்பு ரவை, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு கேரட், கால் கப் பச்சைப் பட்டாணி, இரண்டு பச்சை மிளகாய், கொஞ்சம் இஞ்சி வேண்டும்.

முதலில் கம்பு ரவையை எண்ணெய் இல்லாமல் 3 முதல் 4 நிமிடம் வறுத்து எடுத்து வையுங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளியுங்கள். இஞ்சி, மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி, கேரட், பட்டாணியைப் போடுங்கள்.

10 நிமிடத்தில் தயார்

காய்கறிகள் வதங்கியதும் மூன்று கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். வறுத்த கம்பு ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவிக் கிளறுங்கள்.

மூடி வைத்து மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடம் வேகவிடுங்கள். ஐந்து நிமிடம் கழித்துத் திறந்து கிளறி, நெய் சேர்த்துப் பரிமாறுங்கள். தேங்காய்ச் சட்னி, சாம்பாரோடு இந்த இரண்டுமே நல்ல ஜோடி.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel