என்விடியா (Nvidia) நிறுவனத்தைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை, இந்தியத் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோருக்குப் புது வாய்ப்பைத் திறந்துவிடக்கூடும் என்று பொருளாதார வட்டாரங்கள் கருதுகின்றன.
அமெரிக்கா கொண்டுவந்த புதிய கட்டுப்பாடுகளால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஏஐ டேட்டா சென்டர் சந்தையில் நெருக்கடி வந்திருக்கும் நிலையில், இந்தியா அதற்கு மாற்று மையமாக உருவெடுக்கலாம் என்பது அந்தக் கணிப்பு.
அமெரிக்கா ஏன் கட்டுப்பாடு போட்டது?
என்விடியா தலைமை தொடர்பான சர்ச்சை, அந்நிறுவனத்தின் சிங்கப்பூர் கூட்டாளி நிறுவனத்தைச் சுற்றிய உளவுத்துறை குற்றச்சாட்டுகள் ஆகியவை அமெரிக்காவில் புதிய பாதுகாப்புக் கவலைகளை உண்டாக்கியுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, சீனாவுக்கு மறைமுகமாக ஏஐ கணினித் திறன் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கான மேம்பட்ட சிப் ஏற்றுமதியில் அமெரிக்கா கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளது.
சீனத் தொடர்புடைய நிறுவனங்கள் கணினித் திறனை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைக் கண்காணிப்பதும் இப்போது முக்கியமாகியுள்ளது.
அம்பானியின் ரூ.10 லட்சம் கோடி பந்தயம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அடுத்த ஏழு ஆண்டுகளில் ஏஐ, டிஜிட்டல் உள்கட்டமைப்புக்காக ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். ஜாம்நகரில் மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டர்களை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும். மெட்டா நிறுவனத்தோடு சேர்ந்து 168 மெகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டரையும் அவர் உருவாக்கி வருகிறார்.
அதானியின் ரூ.8.3 லட்சம் கோடித் திட்டம்
கவுதம் அதானியின் குழுமம், 2035-க்குள் 100 பில்லியன் டாலர் முதலீட்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயங்கும் ஏஐ டேட்டா சென்டர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
கூகுளோடு சேர்ந்து விசாகப்பட்டினத்தில் அமையும் திட்டம் இதன் முக்கியப் பகுதி. மின்சாரம், மின் பரிமாற்றக் கட்டமைப்புகளில் அதானி குழுமத்துக்கு இருக்கும் வலிமை இந்த முயற்சிக்குக் கூடுதல் பலம்.
இந்தியாவுக்கு வாய்ப்பு, ஆனால் சவால்களும் உண்டு
அமெரிக்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் நிறுவனங்கள் பாதுகாப்பான மாற்று இடங்களைத் தேடலாம். அப்படியொரு பட்டியலில் இந்தியாவுக்கு முன்னுரிமை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், இங்கே உருவாகும் டேட்டா சென்டர்களின் முழுத் திறனையும் பயன்படுத்தும் அளவுக்கு உள்நாட்டுத் தேவை இன்னும் வளரவில்லை.
முதலீடுகளைச் செயல்படுத்துவது, வாடிக்கையாளர்களைப் பிடிப்பது, அமெரிக்காவின் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது ஆகியவை அம்பானி, அதானி குழுமங்களுக்கு முக்கிய சவால்களாக இருக்கும்.









