திருப்பரங்குன்றம் சர்வே தூணில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற அனுமதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் அறிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமது நேற்றைய அறிக்கைக்கு விளக்கம் அளித்து இன்று புதிய அறிக்கை வெளியிட்டுள்ளார் திருமாவளவன்.
திருப்பரங்குன்றம் தீர்ப்பு என்ன?
திருப்பரங்குன்றம் வழக்கில் நேற்று நவம்பர் 20-ந் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு:
- திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்து, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஜனவரி 6-ந் தேதி வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
- தர்கா அருகே உள்ள சர்வே தூணில் நவம்பர் 24-ந் தேதி மட்டும் தீபம் ஏற்றலாம். இதை ஆண்டுதோறும் தீபம் ஏற்றுவதற்கான உரிமையாகக் கருதக்கூடாது.
- கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே சர்வே தூணில் தீபம் ஏற்றச் செல்லலாம். இந்த குழுவில் யார் இடம்பெற வேண்டும், எத்தனை பேர் செல்லலாம், எந்த வழியாகச் செல்ல வேண்டும், எப்போது தீபம் ஏற்ற வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து மதுரை ஆட்சியர் முடிவு செய்வார்.
- சர்வே தூணில் தீபம் ஏற்ற செல்லும் போது அருகிலுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. புதிய கட்டுமானங்கள், அகழ்வுப் பணிகள், கட்டமைப்பு மாற்றங்களுக்கும் அனுமதி இல்லை.
- தர்கா அருகே உள்ள அந்த கல் தூண் வரலாற்று ரீதியாக வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதா, அங்கு தீபம் ஏற்றுவது மத உரிமையா என்பது குறித்து முடிவெடுக்கவில்லை.
- தீபத் திருவிழா முடிந்த 3 நாட்களுக்குள் உத்தரவு செயல்படுத்தப்பட்டது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திருமாவளவன் முதலில் வெளியிட்ட அறிக்கை
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து திருமாவளவன் நேற்று (நவம்பர் 20) வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய ‘கல் தூணின்’ உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது.
எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது. அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை” என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
“ நவம்பர் 24 அன்று, ‘தீபத்தூண்’ என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்”- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
‘தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது’என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறியிருந்தார்.
திருமாவளவன் அறிக்கையில் சர்ச்சை என்ன?
திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என கூறியிருந்ததுதான் சர்ச்சையானது.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மருதையன் தமது எக்ஸ் பக்கத்தில், “தீபத்தூணும் திருமாவின் தீர்ப்பும்!” என்ற தலைப்பில்,
- HC தீர்ப்பின்போது திமுக அரசு காட்டிய உறுதியைத் தீவிரமாகக் காட்டவேண்டும்” என்று சொல்லியிருக்கலாமே! “தீபம் ஏற்றவேண்டும்” என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்கிறார்
- சபரிமலை SC தீர்ப்பை சங்கிகள் தடுத்தார்களே, அதுபோல நாமும் போராடவேண்டும்” என்று திருமா கூறியிருக்கலாமே! அவர் கோபித்துக் கொள்வாரோ?
- இந்தத் தீர்ப்புக்கு எதிராக “விரும்பத்தகாத” போராட்டங்களை செய்துகொண்டு மதசார்பற்ற சக்திகள் செய்யவேண்டும். ஏனென்றால் இது சங்கிகள் கொண்டாடும் தீர்ப்பு. “மதசார்பற்ற போராட்டக்காரர்களைத் தடுப்பதையும் உறுதி செய்யவேண்டும்” என்று ஐடியா கொடுக்கிறார் திருமா” என விமர்சித்திருந்தார்.
இதேபோல திருமாவளவனின் இந்த கருத்தை பலரும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

விளக்கம் தந்த திருமாவளவன்
இதனையடுத்து திருமாவளவன் இன்று (நவம்பர் 21) வெளியிட்ட புதிய அறிக்கை: திருப்பரங்குன்றம் மலையிலுள்ள ‘அளவைக்கல்’ எனப்படும் கல்தூணில் கார்த்திகை தீப நாளன்று ( நவ-24) தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் ‘மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்'( CISF ) உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான அறிவுறுத்தலையும் செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.
அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். எனினும், கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற பொருள்படும்படி அறிக்கை அமைந்ததற்கு வருந்துகிறேன்.
நடைமுறை சாத்தியக் கூறுகளிலிருந்து முன்னுணர்ந்து அவ்வாறு சொல்லப்பட்டதேயன்றி வேறில்லை. குறிப்பாக, இது மதவெறிக்கும்பலின் ‘வெற்றிக் களியாட்ட வன்முறைக்கு’ இடமளித்துவிடக்கூடாதே என்கிற கவலையிலிருந்து சொல்லப்பட்ட கருத்தேயாகும்.
எனவே, இதனை எதிர்மறையாகப் புரிந்துகொள்ள வேண்டாமென, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எமது நலம்விரும்பிகளான தோழமை சக்திகளுக்கும் தெளிவுப்படுத்த விழைகிறேன். வழக்கம்போல நமக்கு எதிராகப் பரப்பப்படும் திரிபுவாதக் கற்பிதங்களைப் பொருட்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புதிய அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.









