திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள சர்வே கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக காங்கிரஸ் தலைவருமான மாணிக்கம் தாகூர், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் மவுனமாக இருப்பது ஏன்? என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மருதையன் தமது எக்ஸ் பக்கத்தில், “ காணாமல் போனவர்கள்! வக்பு வாரியம், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், TN Minorities Commn தலைவர் Felix Gerald, நிர்மல் குமார், தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர், முதல்வர். இருப்பினும் Confident ஆ இருங்க. நல்லதே நடக்கும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், “ முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வதற்கா வக்க்பு வாரியம்? திருப்பரங்குன்றம் வழக்கில் வக்க்பு வாரியம் சார்பாக, உச்சநீதிமன்றத்தில் யாரும் வாதாடவே இல்லை. நீதிமன்ற உத்தரவிலோ, Livelaw, Bar&Bench, SC observer போன்ற இணையதளங்களிலோ வக்க்பு வாரியத்தின் வாதம் என்று ஒரு வரி கூட இல்லை. நேரில் SC க்கு சென்றவர்களிடமும் விசாரித்து விட்டேன். இது மறுக்கவியலாத உண்மை.
SC-ல் மட்டுமல்ல, HC-ல் நீதிபதி GRS முன்போ Two Judge Bench முன்போ கூட வக்க்பு வாரியம் வாதாடவே இல்லை. தர்கா தரப்புதான் தனியே வக்கீல் வைத்து வாதாடியது. வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி இதற்கு பதில் சொல்லுவாரா?” என்றும் மருதையன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருமாவளவன், வைகோ நிலைப்பாடு என்ன?
திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வியப்பையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக திருமாவளவன் முதலில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், தமிழக அரசு இந்த உத்தரவைச் செயல்படுத்தும்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து நவம்பர் 21-ந் தேதி புதிய அறிக்கை வெளியிட்ட திருமாவளவன், “உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்த முனைந்தால் அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற பொருளில்தான் முதல் அறிக்கையில் குறிப்பிட்டதாகவும், கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற பொருள்படும்படி அறிக்கை அமைந்ததற்கு வருந்துவதாகவும் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
இதேபோல கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மண்டபத்தின் அருகில்தான் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஒருபோதும் மலை உச்சிக்குச் சென்று அந்தத் தூணில் தீபம் ஏற்றியதில்லை. இந்தத் தீர்ப்பு ஒற்றுமையாக வாழும் இந்துக்கள், முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். இது தேவையற்ற நடவடிக்கை. நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தார்.









