நாடாளுமன்றத்தில் காதலை சொல்லி முத்தமிட்ட எம்.பி : சபாநாயகர் எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா?

By Kavi

|

Published on 21 Nov 2026, 2:07 PM

இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் காரசாரமான விவாதங்கள் நடக்கும். எதிர்க்கட்சிகள் அமளி, ஆளும் கட்சியினரின் சஸ்பெண்ட் நடவடிக்கை என கூட்டத்தொடர் தொடங்கி முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போகும். 

அதேபோன்று நாடாளுமன்ற பணி காலம் நிறைவடையும் சமயத்தில் உறுப்பினர்கள் தங்களது கடைசி உரையின் போது, பெரும்பாலும் அரசியல் பயணம், மக்கள் பணி  ஆகியவை குறித்து பேசுவார்கள். 

ADVERTISEMENT

ஆனால் ஆஸ்திரேலியா எம்.பி. ஒருவர் தனது கடைசி உரையின் போது காதலிக்கு ப்ரோப்போஸ் செய்தது கவனத்தை பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண நாடாளுமன்றத்தில் ரைட்  தொகுதி உறுப்பினராக இருப்பவர் ஜோர்டன் லேன். 32 வயதான இவர், வரும் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று இம்மாத தொடக்கத்தில் அறிவித்தார். 

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த  நவம்பர் 19 அன்று நாடாளுமன்றத்தில் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தினார்.

அப்போது தனது அரசியல் பயணம், குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கையில் அன்பின் முக்கியத்துவம் குறித்து உருக்கமாகப் பேசினார்.

ADVERTISEMENT

தனது பெற்றோர், சகோதரிகள் மற்றும் பாட்டிக்கு நன்றி தெரிவித்த அவர், தனது நீண்டகால காதலியான நடாலி குறித்தும் பேசினார்.

உரையின் இறுதியில் நாடாளுமன்றத்தில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், பப்ளிக் கேலரியில் அமர்ந்திருந்த தனது காதலி நடாலியைப் பார்த்து,

“ரைட் தொகுதியின் உறுப்பினராக நான் கேட்கும் கடைசி கேள்வி என் அன்புக்குரிய நடாலியிடம்…. என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?” என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் நாடாளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதற்கு நடாலியும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.

தொடர்ந்து நடாலியிடம் சென்ற ஜோர்டன் லேன், அவருக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்து முத்தமிட்டார்.

அப்போது,  நடாலி  ’ஆம்’ என்று கூறியதை நாடாளுமன்றப் பதிவில் குறிப்பிட விரும்புகிறேன் என்று நகைச்சுவையாகக் கூறினார் ஜோர்டன் லேன்.

இதை கேட்ட நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற சபாநாயகர் கிரெக் பைப்பர், இந்த 58வது நாடாளுமன்றம் ‘காதலின் நாடாளுமன்றம்’ என்று நினைவுகூரப்படும் என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel