நா.மணி
கவிஞர் ஈரோடு தமிழன்பனின் ஒற்றை வரிப் பதிலுக்குள் ஒளிந்திருக்கும் வாழ்க்கைத் தத்துவம்.
1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி சென்னிமலையில் பிறந்த கவிஞர் ‘ஈரோடு தமிழன்பன்‘ 22/11/2025 அன்று மறைந்தார். அவரது படைப்புகளுக்கு 1973 ஆம் ஆண்டு முதலே விருதுகள் கிடைக்கத் தொடங்கியது. இதில் சாகித்திய அகாடமி விருதும் அடங்கும்.
ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஒரு இலட்சம் பண முடிப்போடு இணைந்த விருதை வழங்கியது. விருதைப் பெற்றுக் கொண்டு பணம் ஒரு இலட்சத்தை அந்தக் கல்லூரி மாணவர்களுக்கு செலவு செய்து கொள்ளும் படி கல்லூரி நிர்வாகத்திடமே கொடுத்து விட்டார். தனது எழுத்து ஆளுமை வழியாக தமிழ் எழுத்து உலகில் கோலோச்சிய ஈரோடு தமிழன்பனுக்கு நவம்பர் 22 ஆம் தேதி முதலாம் ஆண்டு நினைவு தினம்.
4/10/2026 ஈரோட்டில் பாவலர் அறிவுமதி அவர்களின் நூல் பாரி நூல் வெளியீட்டு விழா. அதில் ஒருவரின் ஆதங்கம், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் கேட்ட அதே ஆதங்கம். “சென்னிமலை தமிழன்பன் ஏன் தன் பெயரை ஈரோடு தமிழன்பன் என்று பெயரிட்டுக் கொண்டார்” என்ற ஆதங்கம் . சென்னிமலை மக்களின் ஆதங்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால், அந்த ஆதங்கத்திற்கான பதிலைத் தமிழன்பன் அன்றே மிக அழகாகச் சொல்லிவிட்டார்.
சென்னிமலையை ஏன் சேர்த்துக்கொள்ளவில்லை?

1990-களின் தொடக்கத்தில் கவிஞர் தமிழன்பன் முனைவர் பட்டம் பெற்றதையொட்டி, ஈரோட்டில் அவர் பணியாற்றிய மதார்சாபள்ளியின் சார்பில் ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகள் அவருக்கு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது நான் பணியில் புதிதாகச் சேர்ந்திருந்த காலம். அந்த விழாவில் பார்வையாளராகக் கலந்துகொண்டேன்.
விழாவில் வாழ்த்துரைகளும் பாராட்டுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு கேள்வி விவாதமாக முன்னுக்கு வந்தது. சென்னிமலையைச் சேர்ந்த தமிழன்பன் ஏன் தனது பெயருக்கு முன்னால் ‘சென்னிமலை’ என்பதைச் சேர்த்துக்கொள்ளாமல் ‘ஈரோடு’ தமிழன்பன் என்று வைத்துக்கொண்டார் என்பதுதான் அந்தக் கேள்வி.
சென்னிமலை மண்ணில் பிறந்த ஒருவர், தமிழ் உலகம் போற்றும் அளவுக்கு மிகப்பெரிய கவிஞராக உயர்ந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் தனது பெயரில் சென்னிமலையை முன்னிறுத்தியிருக்க வேண்டாமா? இவ்வளவு பெரிய கவிஞர் இனி எப்போது சென்னிமலையில் உருவாகப் போகிறார்? அவரால் சென்னிமலைக்குக் கிடைக்க வேண்டிய புகழும் பெருமையும் கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் அங்கிருந்த சிலரிடம் வெளிப்பட்டது.
இந்தக் கேள்வியில் சென்னிமலை மக்களின் ஊர்ப்பற்றும், தங்கள் மண்ணின் மைந்தர் மீதான பெருமிதமும் வெளிப்பட்டன. அந்த ஆதங்கத்தில் நியாயம் இருப்பதாகவே பலருக்கும் தோன்றியிருக்கலாம்.
ஆனால், கவிஞர் தமிழன்பன் தனது ஏற்புரையில் இதற்கு அளித்த பதில் அற்புதமானது.
“சென்னிமலை நண்பர்களின் ஆதங்கம் சரிதான். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன்; ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், எனக்குச் சென்னிமலை மெக்கா என்றால், ஈரோடு மெதினா ஆயிற்றே!” என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த ஒரு வாக்கியத்தில் அவரது வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான உண்மை பொதிந்திருந்தது.
தமிழன்பன் ஈரோட்டில் பணியாற்றியது ஓர் இஸ்லாமிய அரசு உதவிபெறும் பள்ளியில். பின்னர் சென்னையில் புதுக்கல்லூரி தொடங்கப்பட்டபோது, அந்தப் பள்ளியின் நிர்வாகமே தமிழன்பனின் திறமையை அடையாளம் கண்டு, அவரைச் சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்ற அனுப்பி வைத்தது.
ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த தமிழன்பனுக்கு, கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது அந்தப் பள்ளி நிர்வாகம். அவரது அறிவாற்றலையும் படைப்புத் திறனையும் அடையாளம் கண்டு, அவருக்குப் புதியதொரு அறிவுலகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டது.
சென்னைக்குச் சென்றதும் புதுக்கல்லூரியில் பணியாற்றியதும் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. கற்பதற்கும் கற்பிப்பதற்கும், புதிய அறிவுலகத் தொடர்புகளைப் பெறுவதற்கும், சிந்தனையை விரிவுபடுத்துவதற்கும், படைப்புலகில் தொடர்ந்து இயங்குவதற்கும் அந்தச் சூழல் பெரும் வாய்ப்புகளை வழங்கியது. அதன் விளைவாக அவரது படைப்புகள் பரந்த தமிழ் உலகத்தைச் சென்றடைந்தன. தமிழ்ச் சமூகம் அவரை மகாகவிஞராக அடையாளம் கண்டுகொண்டது. இப்போது அவரது பதிலுக்குள் ஒளிந்திருக்கும் உண்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மெக்கா என்பது இஸ்லாமியர்களின் புனிதத் தலமாகவும், மெதினா என்பது அவர்களின் வரலாற்றிலும் ஆன்மிக வாழ்விலும் தனிச்சிறப்புப் பெற்ற புனித நகரமாகவும் விளங்குகின்றன. இந்த இரு நகரங்களையும் உவமையாகக் கொண்டு தமிழன்பன் தனது வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மண்ணைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
சென்னிமலை அவரது பிறப்பிடமாகவும், ஈரோடு அவரது வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் அறிவுப் பயணத்திற்கும் அடித்தளமிட்ட இடமாகவும் இருந்திருக்கிறது. தன்னை உருவாக்கிய பிறந்த மண்ணை அவர் மறக்கவில்லை. அதே நேரத்தில், தனது திறமையை அடையாளம் கண்டு, புதிய வாய்ப்புகளை வழங்கி, தனது வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய ஈரோட்டையும் அவர் மறக்கவில்லை.
இது வெறும் ஊர்ப்பற்றின் வெளிப்பாடு அல்ல; நன்றியுணர்வின் வெளிப்பாடு.
ஒரு மனிதனின் ஆளுமை அவர் பிறந்த மண்ணால் மட்டுமே உருவாகிவிடுவதில்லை. அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகள், அவரை அடையாளம் காணும் மனிதர்கள், அவரை வளர்த்தெடுக்கும் நிறுவனங்கள், அவருடைய திறமையை வெளிக்கொணரும் சமூகச் சூழல்கள் எனப் பலவற்றின் பங்களிப்பால் அவரது ஆளுமை உருவாகிறது. தமிழன்பனின் வாழ்க்கையில் ஓர் இஸ்லாமியக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் ஆற்றிய பங்கை இங்கே நாம் குறிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழன்பனின் பதிலை புரிந்துகொள்ள வேண்டும்

ஒரு பள்ளி நிர்வாகம் தனது ஆசிரியரின் திறமையை அடையாளம் கண்டு, அவர் மேலும் உயர வேண்டும் என்பதற்காகக் கல்லூரிப் பணிக்கு அனுப்பி வைக்கிறது. ஒருவருடைய வளர்ச்சியைத் தனது நிறுவனத்தின் எல்லைக்குள் மட்டும் சுருக்கிப் பார்க்காமல், அவரது திறமையின் விரிவான எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்திருக்கிறது. இது கல்வி நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டிய உயர்ந்த பண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.சென்னிமலை மக்களின் ஆதங்கத்தை நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. தங்கள் மண்ணில் பிறந்த ஒருவர் உலகம் போற்றும் கவிஞராக உயர்ந்திருக்கிறார் என்ற பெருமிதம் அவர்களுக்கு இயல்பானது. அதேவேளையில், தமிழன்பனின் பதிலுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை அனுபவத்தையும் நன்றியுணர்வையும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு ஊரின் பெருமையை இன்னொரு ஊரின் பெருமைக்கு எதிராக நிறுத்த வேண்டிய அவசியமில்லை. சென்னிமலை தமிழன்பனைப் பெற்றெடுத்தது என்ற பெருமையும், ஈரோடு அவரது திறமையை வளர்த்தெடுக்கவும் படைப்புலகில் உயர்த்தவும் வாய்ப்பளித்தது என்ற பெருமையும் ஒன்றுக்கொன்று துணையானவை.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்வையாளராகக் கலந்துகொண்ட அந்த விழாவில் கேட்ட பதில், இன்றும் பொருத்தமான வாழ்க்கைப் பாடத்தைச் சொல்கிறது.
பிறந்த மண்ணை நேசிப்பது இயல்பு; நம்மை வளர்த்தெடுத்த மண்ணுக்கு நன்றி செலுத்துவது உயர்ந்த பண்பு. சென்னிமலை நண்பர்கள் தங்களது ஆதங்கத்திலிருந்து விடுபட்டு, கவிஞர் தமிழன்பனின் பதிலில் பொதிந்திருக்கும் இந்த நன்றியுணர்வையும் பெருந்தன்மையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்.
சென்னிமலையும் ஈரோடும் தமிழன்பனின் வாழ்க்கையில் தனித்தனியான இடங்களைப் பெற்றிருக்கலாம். ஆனால், இரண்டும் இணைந்துதான் அவரது வாழ்க்கைப் பயணத்தின் முழுமையை உருவாக்கியிருக்கின்றன.









