முதுபெரும் கவிஞரும் திராவிடர் இயக்க பற்றாளருமான ஈரோடு தமிழன்பன் (வயது 92) சென்னையில் இன்று நவம்பர் 22-ந் தேதி காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் ஈரோடு தமிழன்பன் காலமானார்.
1933-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி ஈரோடு சென்னிமலையில் செ.இரா. நடராசன்- வள்ளியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்; இயற்பெயர் ந. ஜெகதீசன்.

சென்னிமலையில் பள்ளிப் படிப்பு; கரந்தைத் தமிழ்க் கல்லூரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார்; “தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தமது வாழ்க்கையை ஆசிரியராக தொடங்கினார் ஈரோடு தமிழன்பன்.
சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அன்றைய சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர் ஈரோடு தமிழன்பன். மரபுக் கவிதைகள் மற்றும் புதுக்கவிதைகள் இரண்டிலும் ஆகப் பெரும் தனி முத்திரையை பதித்தவர் ஈரோடு தமிழன்பன்.
2001-ல் வெளிவந்த ஈரோடு தமிழன்பனின் “ஒரு வண்டி சென்ரியு” தமிழின் முதல் சென்ரியு கவிதை நூல்.
2002-ல் “சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள்” லிமரைக்கூ கவிதை வடிவில் வெளியானது.

“அரிமா நோக்கு” என்ற கலை மற்றும் பண்பாட்டு இதழை நடத்தி வந்தார். ஈரோடு தமிழன்பன் கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நீண்ட நெடுங்காலமாக தமிழக அரசின் பாடநூல்களில் இவரது கவிதைகள் இடம் பெற்று வருகின்றன.
- 1972-ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார்.
- 1973 இல் “தமிழன்பன் கவிதைகள்” என்ற நூலுக்காக தமிழக அரசின் முதல் பரிசை வென்றார்.
- 2004-ல் இவரது “வணக்கம் வள்ளுவ” என்ற கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.
- 2018-ல் ‘கலைஞர் செம்மொழித் தமிழ் விருது’ பெற்றார்.
60க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளையும், 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார் ஈரோடு தமிழன்பன்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று நவம்பர் 22-ந் தேதி ஈரோடு தமிழன்பன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கிய ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
