இந்தியாவின் முன்னணி இரும்புக் குழாய் தயாரிப்பு நிறுவனமான APL Apollo Tubes-ஐ வாங்குவதில் டாடா ஸ்டீல், சர்வதேச நிறுவனமான ஆர்சலர் மிட்டல் (ArcelorMittal) இரண்டுக்கும் இடையே போட்டி இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
அதில் டாடா ஸ்டீல் ஒப்பந்தத்தை முடிக்கும் இடத்தில் முன்னணியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இது நடந்தால், சமீப ஆண்டுகளில் இந்திய ஸ்டீல் துறையில் நடந்த மிகப்பெரிய நிறுவனக் கையகப்படுத்தல்களில் ஒன்றாகிவிடும்.
முக்கியம்: இது இன்னும் உறுதியாகவில்லை. டாடா ஸ்டீல் தரப்பில் இது வெறும் ஊகம் என்றும், இப்போது அப்படிப்பட்ட பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
28% பங்குகளை விற்கத் திட்டமா?
APL Apollo நிறுவனர் குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் குப்தா தலைமையிலான புரோமோட்டர்கள், தங்களிடம் இருக்கும் 28 சதவீதப் பங்குகளை விற்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. இப்போதைய சந்தை மதிப்பில் இந்தப் பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.16,498 கோடி.
அப்படி விற்பனை நடந்தால், விதிகளின்படி மேலும் 26 சதவீதப் பங்குகளுக்குத் திறந்தநிலைச் சலுகை (Open Offer) வெளியிட வேண்டியிருக்கும். அதையும் சேர்த்தால் மொத்த ஒப்பந்த மதிப்பு ரூ.31,818 கோடி, அதாவது சுமார் 3.42 பில்லியன் டாலர்.
டாடா ஸ்டீல் ஏன் ஆசைப்படுகிறது?
வீடுகள், தொழிற்சாலைகள், கிடங்குகள், வணிகக் கட்டடங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்கள் என்று பலவற்றுக்கும் தேவையான ஸ்டீல் குழாய்களை APL Apollo தயாரிக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 50 லட்சம் டன் திறன் கொண்ட 11 ஆலைகள் அந்த நிறுவனத்துக்கு உள்ளன. 2030-க்குள் இதை 80 லட்சம் டன்னாக உயர்த்தவும் அது இலக்கு வைத்துள்ளது.
டாடா ஸ்டீல் போன்ற மூல இரும்பு உற்பத்தியாளர்கள், இப்படிக் கூடுதல் மதிப்புள்ள தயாரிப்புகளிலிருந்து அதிக லாபம் பார்க்க முடியும். அதுவே இந்தக் கையகப்படுத்தல் முயற்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஆர்சலர் மிட்டலும் ஆர்வமா?
டாடா ஸ்டீலைத் தவிர ஆர்சலர் மிட்டலும் APL Apollo-வை வாங்க ஆர்வம் காட்டுவதாகத் தகவல். ஆனால், APL Apollo பங்குகளின் மதிப்பு ஏற்கெனவே அதிகமாக இருப்பது வாங்க நினைக்கும் நிறுவனங்களுக்குச் சவாலாக இருக்கலாம்.
ரூ.31,818 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் இன்னும் உறுதியாகவில்லை. அடுத்து வரும் அறிவிப்புகள்தான் இந்திய ஸ்டீல் துறையின் எதிர்கால நகர்வுகளுக்கு முக்கியமாக இருக்கும்.









