தொகுதி மறுவரையறை மசோதா: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு தலா ரூ.150 கோடி பேரம் பேசும் பாஜக?

By Mathi

|

Published on 22 Nov 2026, 10:04 AM

Delimitation Bill

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு தலா ரூ.150 கோடி வழங்க பாஜக பேரம் பேசி வருவதாக சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போது 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 850 வரை உயர்த்தும் தொகுதி மறுவரையறை முயற்சியுடன், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 17-ந் தேதி நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு இது மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரூ.150 கோடி பேரம்?

இதுதொடர்பாக சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று (நவம்பர் 21) செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு பாஜக பணம் கொடுத்து பேரம் பேசுகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு எம்.பி.க்கு ரூ.100 கோடி எனப் பேசப்பட்டது. தற்போது அந்தத் தொகை ரூ.150 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் பேரத்தை நடத்துவதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலைவர்கள் சிலருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்டாமல் தாமதப்படுத்தி வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.

ADVERTISEMENT

அமித்ஷா அடிக்கடி மும்பைக்கு வருவது ஏன்?

மேலும், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி மும்பைக்கு வருகிறார். அவர் ஏன் இவ்வளவு முறை மும்பைக்கு வருகிறார்? இங்கு என்ன பேரம் நடைபெறுகிறது? எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் பணம் மும்பை வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது” என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் சஞ்சய் ராவத்.

பாஜக மறுப்பு

ஆனால் சஞ்சய் ராவத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். ”சஞ்சய் ராவத் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு சிறுபிள்ளைத்தனமானது; எம்.பி.க்களுக்கு தலா ரூ.150 கோடி பேரம் பேசப்படுவதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel