திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள தூணில் நவம்பர் 24-ந் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை, கடந்த ஜனவரி 6-ந் தேதி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உள்ளிட்ட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு, நவம்பர் 24-ந் தேதி மட்டும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 20-ந் தேதி இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் நவம்பர் 21-ந் தேதி இரவு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.









