நாகர்கோவில் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கடந்த 11-ஆம் தேதி நாகர்கோவில் வந்த பயணிகள் ரயிலில் பழுது ஏற்பட்டதால், ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோட்டயத்திற்கு ரயிலை மீண்டும் இயக்குவதற்காக ரயில் பெட்டியைப் பணியாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது ரயில் பெட்டியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, சந்தேகமடைந்த ஊழியர்கள் சோதனை செயதனர். இதில், ரயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில், அப்பெண்ணின் இடுப்பு மற்றும் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மூலம் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதேசமயம், அவர் உயிரிழந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்ததால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால், அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கொலை குறித்து விசாரிக்க நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ரயில் நிலையத்தின் நான்காவது பிளாட்பார்ம் மற்றும் யார்டு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கடந்த 13-ஆம் தேதி இளைஞர் ஒருவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 14-ஆம் தேதி அந்த இளைஞர் ரயில் பெட்டியிலிருந்து இறங்கிச் சென்ற காட்சியும் பதிவாகியிருந்தது.
காவல்துறையினர் தொடர்ச்சியாக நடத்திய தேடுதல் வேட்டையில், ரயில் நிலையப் பகுதியில் சுற்றித் திரிந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் ஐயப்பனைக் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், ரயில் நிலையப் பகுதிக்கு வந்த பெண்ணை ஐயப்பன் கொடூரமாகத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், பின்னர் உடலை இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு மறுநாள் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது. அதே சமயம் உயிரிழந்த பெண்ணின் விபரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாகத் தமிழக டிஜிபி அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்கவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.









