தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியபோது எதிர்ப்புத் தெரிவித்த நகை வியாபாரிகள், இப்போது அவரது அறிவுரையால் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பியதாகக் கூறி நன்றி தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த மே 10-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மேற்கு ஆசியப் போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பொதுமக்கள் சில சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். திருமணங்களுக்காக ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்குவதைக் குறைத்து அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும். முடிந்தவரை வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மோடியின் இந்த அறிவுரைக்கு அப்போது நகை வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், தற்போது தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், மோடியின் அன்றைய அறிவுரையால் பெரிய நஷ்டத்தைத் தவிர்க்க முடிந்ததாக டெல்லி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலையில் ரூ.65 லட்சம் சரிவு!
டெல்லி வர்த்தக மற்றும் தொழில் துறை அமைப்பின் (CTI) தலைவர் பிரிஜேஷ் கோயல் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு இன்று (நவம்பர் 22) நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், மோடி தங்கம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியபோது ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.1 கோடியே 90 லட்சமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். தற்போது ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ.1 கோடியே 25 லட்சமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதாவது, ஒரு கிலோ தங்கத்தின் விலையில் ரூ.65 லட்சம் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
அன்று ஒரு கிலோ தங்கத்தை ரூ.1 கோடியே 90 லட்சத்துக்கு வாங்கி வைத்திருந்தால், இன்று அதன் மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சமாகக் குறைந்திருக்கும். இதனால் ஒரு கிலோ தங்கத்துக்கு ரூ.65 லட்சம் மதிப்புச் சரிவைச் சந்தித்திருக்க வேண்டியிருக்கும்.
ஆனால், மோடியின் அறிவுரையை ஏற்று அப்போது அதிக விலைக்கு தங்கம் வாங்காமல் இருந்ததால், இப்போது அதே ஒரு கிலோ தங்கத்தை ரூ.65 லட்சம் குறைவான விலையில் வாங்க முடிகிறது.
இதனால் தங்கம் வாங்காமல் காத்திருந்த நகை வியாபாரிகள் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பியுள்ளதாக CTI அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, சிறிய நகை வியாபாரிகளும் தங்கத்தில் முதலீடு செய்பவர்களும் கடன் சுமையில் சிக்காமல் தப்பியுள்ளதாகக் கூறியுள்ளது.
மோடியின் அறிவுரையை அப்போது விமர்சித்த நகை வியாபாரிகளே, தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதால் அவரைப் பாராட்டுவதாக CTI தெரிவித்துள்ளது.
மேலும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்போது மத்திய அரசு தொடர்ந்து வர்த்தகர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.









