சென்னை: காலவரையற்ற மீனவர்கள் போராட்டம்.. வெறிச்சோடிய காசிமேடு சந்தை

By Pandeeswari Gurusamy

|

Published on 22 Nov 2026, 10:54 AM

சென்னையில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர் சங்கத்தினர் நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆந்திராவில் 6 மாதங்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 8 விசைப்படகுகளை உடனடியாக விடுவிப்பதோடு, விடுவிக்கப்பட்ட படகுகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், முரசு புயலால் உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதியுடன் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும், முரசு புயலால் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை விசைப்படகு மரம் விடும் தொழிலாளர் நலச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன. இன்று 4 ஆவது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. சுமார் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

ADVERTISEMENT

தமிழக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காசிமேடு மீன்பிடித் துறைமுக நுழைவு வாயிலில் கருப்புக் கொடி கட்டியும், தங்களது விசைப்படகுகளை நிறுத்தி வைத்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்குவதற்காக காசிமேடு மீன் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக இன்று சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ADVERTISEMENT

அடுத்தகட்டமாக, நாளை அனைத்து மீனவர் சங்கத்தினர் மற்றும் அமைப்பினரை ஒன்று திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிடப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel