செக்கானூரணி காவல் நிலைய மரணம்: இன்னும் எத்தனை நாட்களுக்கு மௌனம்? விஜய்யை விளாசிய கனிமொழி எம்.பி

By Pandeeswari Gurusamy

|

Published on 22 Nov 2026, 11:25 AM

லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், காவல் நிலைய மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்பி வலியுறுத்தி உள்ளார்.

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆர். பாலகிருஷ்ணன், கடந்த நவம்பர் 3-ஆம் தேதி தேவாரத்திலிருந்து மதுரைக்கு ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் வந்தபோது, செக்கானூரணி அருகே எதிர்பாராத விதமாக லாரியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்காகக் கடந்த 13-ஆம் தேதி இரவு மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்குச் சென்ற பாலகிருஷ்ணன், மறுநாள் அதிகாலை காவல் நிலையக் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது கணவரைக் காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துள்ளதாக அவரது மனைவி சுதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தாமதமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது, பாலகிருஷ்ணன் உயிரிழந்த அன்று டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டது, தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் வழக்கில் உரிய புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதது மற்றும் சிசிடிவி காட்சிகள் கசிந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில், “மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு பல்வேறு அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நவம்பர் 4-ஆம் தேதியே அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார், நவம்பர் 13-ஆம் தேதிதான் FIR ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் 14-ஆம் தேதிதான் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் காவல்துறையிடம், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்களும் இல்லை. சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் ஊடகங்களில் கசிந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இத்தனை சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்த இந்த மரணம் குறித்து முதலமைச்சர் விஜய் இன்னும் எத்தனை நாட்களுக்கு மௌனம் காக்கப் போகிறார்? காவல்துறை உண்மையில் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?

இந்த மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிதியுதவியையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel