“அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுவதா?” – காசிமேடு மீனவர்கள் விவகாரத்தில் அமைச்சர் ஸ்ரீநாத்தை விளாசிய சிபிஎம்

By Pandeeswari Gurusamy

|

Published on 22 Nov 2026, 3:37 PM

காசிமேடு மீனவர்கள் போராட்டம் குறித்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு கண்டனத்திற்கு உரியது என சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில கடலோர காவல் படையினர் கடந்த ஜூன் 17-ஆம் தேதி தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 8 மீன்பிடிப் படகுகளைப் பறிமுதல் செய்தனர். இந்தப் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ஆந்திரப் பிரதேச மீன்வள ஆணையர் மற்றும் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தற்போது வரை மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஆந்திரப் பிரதேச கடலோர காவல் படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி சென்னை காசிமேடு பகுதியில் உள்ள மீனவர்கள் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று நான்காவது நாளாகப் போராட்டம் தொடரும் நிலையில், காசிமேடு சந்தை பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. காசிமேட்டில் சுமார் 800 படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து உள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இ முதல்வர் விஜயை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்த பிறகு போராட்டம் முடிவுக்கு வரும் என மீனவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், “காசிமேடு பகுதியில் உள்ள மீனவ மக்கள் கடந்த 19-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் கோரிக்கைகள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இங்கிருந்து ஆந்திரப் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற எட்டு படகுகளை ஆந்திர அரசு கைப்பற்றி உள்ளது. அந்தப் படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆந்திர அரசு வேண்டுமென்றே காலம் கடத்துவதில் எவ்வித நியாயமும் கிடையாது.

நாடு கடந்து இலங்கையில் மீனவர்கள் மற்றும் விசைப்படகுகள் பிடிபடுவதையே நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள்கூட ஒரு வற்புறுத்தலுக்குப் பிறகு படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு அண்டை மாநில அரசு சென்னையில் இருந்து வரும் படகுகளை 6 மாதமாகப் பிடித்து வைத்துள்ளனர். தமிழக அரசு மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும் அவர்கள் காது கொடுத்துக் கேட்காத போக்கு நீடித்து வருகிறது. அந்தப் படகுகள் ஆறு மாதமாகச் சேதமடையும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் படகுகளை மீட்டுத் தர வேண்டும்.

ADVERTISEMENT

அதேபோல் சமீபத்திய முரசு புயலில் ஒன்பது மீனவர்கள் உயிரிழந்தனர். அந்த மீனவர்களுக்கும் 20 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குவதோடு, இறந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்றும் கேட்டு வருகின்றனர். அதேபோல் மீனவர்கள் சென்ற படகு விவகாரத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது; அவர்களுக்கும் நஷ்டஈடு வேண்டும், வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நமது தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று மீனவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பேச்சுவார்த்தையில் நாங்களும் அமைச்சரைச் சந்தித்து மீனவர்களின் கோரிக்கைக்கு உரிய காலத்திற்குள் தீர்வு காண வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளோம். நிதி அமைச்சர் முதலமைச்சர் அவர்களுடன் கலந்து சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மீனவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். அதன் மூலம் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. எங்களது கோரிக்கைகளையும் அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். மீனவர்களின் கோரிக்கைக்கான செலவு என்பது அரசைப் பொறுத்தவரை பெரிய விஷயம் இல்லை; இந்தக் கோரிக்கைகள் நியாயமானது.

4 நாட்களாகப் போராட்டம் நடைபெறும் நிலையில் சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அமைச்சர்கள் உடனடியாக வந்திருக்க வேண்டும். மீனவர்கள் போராடும்போது மீன்வளத்துறை அமைச்சர் இந்தப் பக்கமே வரவில்லை என்று சொல்வது நியாயம் இல்லை. அவருக்குப் பதிலாக இன்று நிதி அமைச்சர் வந்துள்ளார். ஆனால் உண்மையில் மீன்வளத்துறை அமைச்சர் வந்திருந்தால் துறைவாரியாகச் செய்ய வேண்டிய காரியங்களை உடனடியாகச் செய்திருக்கலாம்.”என்றார்.

தீய சக்திகளின் தூண்டுதலால் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேசியது குறித்த கேள்விக்கு, “அதுவெல்லாம் தவறு, அப்படி அமைச்சர் சொல்லக் கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் கோரிக்கை நியாயமா என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர யார் தூண்டுகிறார்கள் என்று பேசுவது சரியல்ல. யாராவது தூண்டிவிட்டால் எல்லோரும் போராட்டத்திற்கு எப்படி வருவார்கள்? கடலுக்குச் செல்பவர்கள் திரும்ப முடியவில்லை, மீனவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அவர்கள் செல்லும் படகுகளுக்குப் பாதுகாப்பு இல்லை; அந்த அச்சுறுத்தலில்தான் போராட்டம் நடைபெறுகிறது. அதுதான் தூண்டுதல்; வேறு யார் தீய சக்திகள் தூண்டிவிட முடியும்? அப்படியெல்லாம் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாங்கள் விரைவில் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மீனவர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. போராடும் மீனவர்கள் பக்கம் நாங்கள் உறுதியாக நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel