திருப்பரங்குன்றம் தீர்ப்பு நியாயமற்றது.. வைகோவுக்கும் எதிர்ப்பு – சிபிஐ வீரபாண்டியன்

By Mathi

|

Published on 22 Nov 2026, 1:39 PM

CPI Veerapandian Press meet

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதித்த உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அதிர்ச்சியளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், தவெக நிர்வாகிகள் அணையைத் திறந்ததை ஆதரித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கருத்து ஏற்புடையதல்ல என்றும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று (நவம்பர் 22) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

காசிமேடு துயரமும் அரசு வேலையும்

காசிமேட்டில் கடலில் பயணித்த ஏறத்தாழ 9 பேர் உயிரிழந்தது பெரும் துயர நிகழ்வு. அது நமது மனங்களை உலுக்கி எடுக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும். முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம்

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் மீனவ மக்களுக்கானவை. கடல் தருகிற நிலப்பரப்பு அனைத்து மக்களுக்குமானது. அந்தக் காற்றைத் தடுக்கிற உரிமை யாருக்கும் இல்லை.

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றுள்ள இந்தக் காலத்தில், அரசு அந்தத் திட்டத்தைக் கைவிட்டு, கடலோடு போராடி உயிரைப் பணையம் வைத்துப் பாடுபடும் மீனவ மக்களின் கல்வி, சுகாதாரம், எதிர்கால வாழ்வுக்குக் கூடுதல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

மீன்பிடித் தடைக்காலத்தை மாற்ற வேண்டும்

கடலின் சூழலியலைக் கடல் நிபுணர்களைக் காட்டிலும் மீனவர்கள்தான் நன்கு அறிந்திருப்பார்கள். அவர்கள்தான் இயற்கையோடு போராடுகிறார்கள். கடல் நுட்பங்களைப் படித்தறிவது வேறு. கடலோடு உயிரைப் பணையம் வைத்துப் பெறுகிற அனுபவம் வேறு. எனவே மீனவ மக்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கும். பொதுநலன் இருக்கும். மீன்பிடித் தடைக்காலத்தை நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை அரசு தனிக் கவனம் செலுத்தி ஏற்க வேண்டும்.

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிப்பதுதான் நீதி. நீண்ட நெடுங்காலமாக இந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினர் ஒற்றுமையாகவும் நட்போடும் வாழ்கிற நாடு தமிழ்நாடு.

சட்டம் தருகிற பாதுகாப்பை விட, நீதிமன்றத் தீர்ப்புகளை விட பெரும்பான்மை இந்து மக்கள் தருகிற பாதுகாப்புதான் சிறுபான்மை மக்களுக்கு. பெரும்பான்மை இந்துக்கள் எப்போதுமே அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகிறார்கள். அவர்கள்தான் சிறுபான்மை மக்களைப் பதற்றங்களில் இருந்து பாதுகாக்கிறார்கள்.

சட்டத்தை விட பெரும் பாதுகாப்பு பெரும்பான்மை இந்துக்கள். நீதிமன்றத் தீர்ப்பை விட பெரும் பாதுகாப்பு பெரும்பான்மை இந்துக்கள். வழிபடுகிற இந்து மக்கள் வேறு. இந்து மதத்தின் பெயரால் பதற்றத்தை உருவாக்குகிற அடிப்படைவாதிகள் வேறு. மத அடிப்படைவாதிகளால்தான் பிரச்சினை. இந்துக்களாலோ, இஸ்லாமியர்களாலோ, கிறிஸ்தவர்களாலோ தமிழ்நாட்டில் எப்போதும் பதற்றமில்லை. நாம் ஒன்றுபட்டு வாழ்கிறோம். இந்த ஒற்றுமை உலகத்திலேயே தலைசிறந்தது. இதைப் பாதுகாக்க வேண்டும். இந்த ஒற்றுமையைச் சிதைக்கிற எந்தத் தீர்ப்பும் நியாயமற்றதாகத்தான் கருதப்படும்.

வைகோவின் கருத்துகளுக்கு எதிர்ப்பு

வைகோ தமிழ்நாட்டின் மூத்த முதுபெரும் தலைவர். நாடாளுமன்ற நாவலர். இன்றைக்கும் வைகோ என்றால் இலங்கைத் தமிழர்களுக்காக அவர் எழுப்பிய குரல் நினைவுக்கு வருகிறது. அவரைக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் மதிக்கிறேன். ஆனால், தேனியில் அணையைத் திறந்த தவெக நிர்வாகிகளின் செயலை ஆதரித்தது உள்ளிட்ட அவருடைய கருத்துகள் அனைத்தும் ஏற்புடையவை அல்ல.

தவெக எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடு கண்டிக்கத்தக்கது

தவெக எம்.எல்.ஏ.க்கள் காவல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு நடத்துவது போன்ற விவகாரங்களில் முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும். தலைமைச் செயலாளர் இருக்கிறார். அவர்தான் சொல்ல வேண்டும். சட்டத்தின்படிதான் ஆட்சி. சட்டத்தின்படிதான் நீதி. சட்டம் எதைச் சொல்கிறதோ அதன்படிதான் எல்லோரும் நடந்துகொள்ள வேண்டும். சட்டத்தை மீறுவது தெரியவந்தால் அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம். சட்ட விதிகளை மீறுகிற எந்தச் செயலும் ஏற்புடையதல்ல. அது கண்டிக்கத்தக்கது.

இடைத்தேர்தலில் போட்டியா?

வரவிருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாநிலக் குழு கூடும். கட்சி முடிவு செய்யும். முடிவு செய்தவுடன் உங்களுக்குத்தான் முதலில் தெரிவிப்போம். இவ்வாறு மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel