காவிரியில் உரிமையான நீரைப் பெற வக்கற்ற தவெக அரசு – ஈபிஎஸ் காட்டம்

By Pandeeswari Gurusamy

|

Published on 22 Nov 2026, 1:37 PM

EPS Attacks Vijay Govt Over Inaction

காவிரி விவகாரம் தொடர்பான 2 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் இந்த அவமானம் வெற்றி மாடல் புத்தகத்தின் எந்த பக்கத்தில் வரபோகிறது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

ADVERTISEMENT

அதுவும், இந்த இரண்டு மனுக்களை ஒரே வார்த்தையில் “Dismissed” எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதே இன்றைய முதல்வருக்கு தெரியாது என்பதால், Judgement-ல் இருந்து சில பக்கங்களை இணைத்துள்ளேன்.

ADVERTISEMENT

இந்த அவமானம் “வெற்றி” மாடல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வரப் போகிறது?

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மாட்டீர்கள். காங்கிரஸ் கட்சியோடு காவிரி குறித்து பேசமாட்டீர்கள்.
சட்டப் போராட்டத்தையும் ஒழுங்காக நடத்த மாட்டீர்கள்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டிற்கு நேரெதிராக பேசிவரும் கர்நாடக முதல்வரை ஒரு வார்த்தை கூட கண்டிக்க வக்கில்லாமல், டெல்லியில் அவரோடு போட்டோவுக்கு Pose கொடுக்கிறீர்கள்.

ஜூன்-12 அன்று மேட்டூர் அணையை திறக்க முடியாமல் ஏற்கனவே குறுவை சாகுபடி வீணாகிப் போனது. தற்போதும் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்காமல் இருப்பதாலும், நமக்கு உரிமையான நீரைப் பெற வக்கற்ற இங்குள்ள தவெக கூட்டணி அரசாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேராமல், இந்த கையாலாகாத அரசால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளது .

டெல்லிக்கு போய் சோனியா காந்தி அவர்களின் குடும்பக் கதையை கேட்டு சிரிக்க இருந்த நேரம், தமிழக விவசாயிகளைப் பற்றி பேச கொஞ்சம் கூட இல்லையா நடிகர் விஜய் அவர்களே?

எப்போது பார்த்தாலும் “எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்” என்று நீலிக்கண்ணீர் வடிப்பீர்களே- உங்கள் ஆச்சரியக்குறி ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு கொடுத்து வரும் அவமானங்களை எல்லாம் பார்த்தால், “உங்கள் சுயநலத்திற்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களோ?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

முதல்வரே தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடு, விவசாய மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா நான் என தொடர்ந்து அதிமுக கடுமையான, போராட்டங்களுக்கு பிறகு பெற்ற உரிமை இது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி நமது உரிமையை நிலைநாட்டினோம்.

நீர் இன்றி நெல் இல்லை.
நெல் இன்றி குடி இல்லை.
குடி இல்லையேல் கோன் எதற்கு?
என்று கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்!” என பதிவிட்டுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel