அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை; 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற பிறகு அரசியல் மாற்றம் வரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மீண்டும் கலகம் வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிக்கையில், ‘என்னை உதாசீனப்படுத்துவதாக எண்ணி 2 கோடி தொண்டர்களில் ஒருவர்தான் எஸ்பி வேலுமணி என எடப்பாடி சொல்லியிருந்தாலும், அதைவிட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது?. அதிமுக தொண்டன் என்பதுதான் தனது முதல் அடையாளம்.கட்சியின் கொடி பிடிக்கும் தொண்டன் என்பதைவிட வேறு எந்தப் பதவியும் எனக்குப் பெரிதல்ல’ என தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நத்தம் விஸ்வநாதனும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பழனியில் இன்று (நவம்பர் 22) செய்தியாளர்களிடம் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது: ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்பவர் அந்தக் கட்சியின் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்துக் கொடுத்த கொள்கைகளையும் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அவருக்குப் பின்னர் கட்சிக்குத் தலைமை ஏற்ற ஜெயலலிதாவும் அதிமுகவை எப்படி வழிநடத்தினார்கள்? கட்சித் தொண்டர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான எழுதப்படாத வழிகாட்டுதல்களை உருவாக்கிக் கொடுத்தார்கள்.
கட்சித் தொண்டர்கள் தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். அதிமுகவின் அரசியல் எதிரியான திமுகவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. திமுகவுடன் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்பதுதான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கையாக இருந்தது.
அந்தக் காலத்தில் திருமண நிகழ்ச்சிகளில்கூட திமுகவினருடன் அதிமுகவினர் நெருங்கிப் பழக மாட்டார்கள். அந்த அளவுக்கு இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் ரீதியான இடைவெளியை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கடைப்பிடித்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இன்று நேரடியாக ஸ்டாலினுடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்கிறார். அந்தப் புகைப்படத்தையும் பெருமையாக வெளியிடுகிறார்.
இதுவரை அதிமுக தலைவர்கள் கடைப்பிடித்து வந்த நடைமுறைகளுக்கு நேர்மாறாகக் கட்சியின் பொதுச்செயலாளரே நடந்துகொண்டால், அதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், எடப்பாடி பழனிசாமிக்கு இப்படிச் செயல்படும் தைரியம் வந்திருக்குமா? இந்நேரம் அவர் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பார். அதுமட்டுமல்லாமல், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஜெயலலிதா அவரை நீக்கியிருப்பார்.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பிறகு அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஏற்கெனவே அவரைப் ‘பத்து தோல்வி பழனிசாமி’ என்று கூறினார்கள். இப்போது அது பதினோரு தோல்விகளாகிவிட்டது. இனிமேல் அவரை ‘பதினோரு தோல்வி பழனிசாமி’ என்று சொல்லலாம்.
இத்தனை தோல்விகளுக்குப் பிறகாவது எடப்பாடி பழனிசாமி தனது தவறுகளை உணர்ந்து வருந்த வேண்டும். ஜெயலலிதாவுடன் பணியாற்றியவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கட்சியில் இருந்தவர்கள் எனப் பலரையும் கட்சியிலிருந்து நீக்கியிருக்கக் கூடாது. அவர்கள் கட்சியில் இருந்தால் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பலரையும் நீக்கியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் தவறு என்பதை அவர் உணர வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுவரை மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளுக்காக வருந்தி, தன்னைத் திருத்திக்கொண்டு, கட்சியின் நலனுக்காக உண்மையாகச் செயல்பட வேண்டும்.
அவ்வாறு தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு கட்சியின் நலனுக்காகச் செயல்பட்டால், அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி திருந்துவதைப் போலத் தெரியவில்லை.
6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்குப் பிறகு அரசியல் மாற்றம் வரும். இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் கூறினார்.









