முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட் என்றும், அவரது ஆட்சியில் பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று கூறிய விஜய்யின் ஆட்சியில், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களிடமிருந்தே பெண்களைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தந்தை பெரியாரின் ‘குடி அரசு’ இதழ்களை அதே வடிவத்தில் கோவை ராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொகுத்துள்ளது. தந்தை பெரியாரின் ‘குடி அரசு’ இதழ் தொகுப்பை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (நவம்பர் 22) நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த குடி அரசு இதழ் தொகுப்பை பெரியாரியல் ஆய்வறிஞர் எஸ்.வி.ராஜதுரை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு என்னை அழைத்தபோது, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் கழக இளைஞரணிச் செயலாளராகவும் உரையாற்ற அழைப்பதாகக் கூறினார்கள். அது எனக்குப் பெருமைதான். குறிப்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று குறிப்பிட்டதும் எனக்குச் சில நினைவுகள் வந்தன. இப்போது இங்கு பேசும்போது சட்டமன்றத்தில் பேசுவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
இங்கு என் முன்னால் அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் பகுத்தறிவு உள்ளவர்கள். உங்களுக்கெல்லாம் மூளை இருக்கிறது. நான் பேசுவது உங்களுக்குப் புரியும். ஆனால் சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். எனவே, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது பெருமை என்பதைவிடப் பொறுமை தேவைப்படும் பதவியாக இருக்கிறது.
நானும் ஒரு பதிப்பாளர். கழகத் தலைவரின் (மு.க.ஸ்டாலின்) வழிகாட்டுதலின்படி, கடந்த 3 ஆண்டுகளாக இளைஞரணி சார்பில் ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, திராவிட இயக்க நூல்களை வெளியிட்டு வருகிறோம். அதைவிடக் கூடுதல் பெருமையாக, கலைஞர் தனது மூத்த பிள்ளை என்று எப்போதும் குறிப்பிடும் ‘முரசொலி’யின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தற்போது பொறுப்பேற்றிருக்கிறேன்.

ஏற்கெனவே 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை முரசொலியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தேன். சட்டமன்ற உறுப்பினராகி, பின்னர் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு ஒரு தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கக்கூடாது என்பதால் அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யுமாறு தலைவர் அறிவுறுத்தினார்.
நான் அமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்ததை நீங்கள் குறிப்பிடலாம். ஆனால் அவற்றைவிட முரசொலியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதையே கூடுதல் பெருமையாகக் கருதுகிறேன். அதைவிடப் பெரிய பெருமை, ஒரு பெரியாரிஸ்டாக இந்த நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதுதான்.
இன்றைக்குச் சிலர் பெரியாரைத் தங்களுடைய கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளலாம். பெரியாரின் படத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் தேர்வுக்குப் படிக்கும்போது கடினமான கேள்விகளை விருப்பத் தேர்வில் விட்டுவிடுவதைப் போல, இங்குள்ள டம்மி முதலமைச்சரும் பெரியாரின் சில கொள்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவற்றை விட்டுவிடுகிறார்.
தன்னைப் பெரியாரின் கொள்கை வாரிசு என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால் அந்தக் கொள்கைகள் என்னவென்று கேட்டால் அவருக்குத் தெரியாது. இதை நான் ஏன் இப்போது குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரமும் போலீஸ் யாகமும்
செஞ்சியில் ஒரு சிறுமியை 40 நாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவரது பெற்றோரும் உறவினர்களும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரே சோகத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அந்தச் சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள். அந்தச் சிறுமியைக் கண்டுபிடிப்பதுதான் காவல்துறையின் கடமை. இதை அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் இதுவரை அந்தச் சிறுமி குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. குழந்தையைக் கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினர் காவல் நிலையத்தில் யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்தான் பெரியாரியவாதி என்று சொல்லிக்கொள்கிறார். இதற்கு முன்பு எந்த ஆட்சியிலும் இப்படியொரு கொடுமை நடந்ததில்லை.
ஜோசியம், ஜாதகம், யாகம் ஆகியவற்றை நம்பித்தான் இந்த ஆட்சியே நடைபெறுகிறது. முதலமைச்சர் எந்த ஊருக்கோ, எந்த மாநிலத்துக்கோ சென்றாலும் முதலில் அங்குள்ள கோயிலுக்குத்தான் செல்கிறார். அதன் பிறகுதான் மற்ற பணிகளைக் கவனிக்கிறார்.

போலி பெரியாரிஸ்ட்.. போலி முதலமைச்சர்
போலிச் சாமியார்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் போலிப் பெரியாரிஸ்டைப் பார்த்திருக்கிறோமா? போலி முதலமைச்சரைப் பார்த்திருக்கிறோமா? ஆனால் இங்கு கூடியிருக்கும் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பகுத்தறிவு, சுயமரியாதை, மூடநம்பிக்கை எதிர்ப்பு உள்ளிட்ட பெரியாரின் அனைத்துக் கொள்கைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்ட பெரியாரிஸ்டுகள் நாம். அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இன்றைய நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் பெரியாரின் கொள்கைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கான நாளிதழ்களும் வார இதழ்களும் திராவிட இயக்கத்திலிருந்து வெளிவந்துள்ளன. அந்தப் பெருமை திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இந்த இயக்கத்திலிருந்து எத்தனையோ பத்திரிகைகள் வெளிவந்திருந்தாலும், அவற்றுக்கெல்லாம் தாயாக இருப்பது இன்று நாம் கொண்டாடும் ‘குடி அரசு’ இதழ்தான். இன்னும் சொல்லப்போனால், முரசொலிக்கும் தாய் இந்த ‘குடி அரசு’தான்.
அப்படிப்பட்ட குடி அரசு இதழின் தொகுப்பை நமது தலைவர் இன்று வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்க்கும்போது 100 ஆண்டுகளுக்கு முன்பு டைம் டிராவல் மேற்கொள்வதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எத்தகைய கொடுமையான காலகட்டத்தில் இருந்தது என்பதை இந்தத் தொகுப்பைப் படிப்பதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.
இந்த முக்கியமான பணியை மேற்கொண்ட அண்ணன் கோவை ராமகிருட்டிணன் அவர்களுக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
100 ஆண்டுகள் பின்னோக்கி போகும் தமிழகம்
இன்றைய சூழலில் இந்த நூலை வெளியிடுவது மிகவும் பொருத்தமானது. ஏனென்றால் தமிழ்நாட்டை மீண்டும் 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பணியை இந்த டம்மி அரசும் டம்மி முதலமைச்சரும் செய்துகொண்டிருக்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு என்னென்ன கொடுமைகள் நடந்தனவோ, அதே சூழலை இந்தச் சோப்ளாங்கி அரசு மீண்டும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
பெரியாரின் கொள்கைகளையும் திராவிட இயக்கத்தின் தொடக்ககாலப் பணிகளையும் இன்றைய தலைமுறையிடம் கொண்டுசேர்க்கும் வகையில் இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குடி அரசு இதழ்தான் பேரறிஞர் அண்ணாவுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் திராவிட இயக்கப் பயிற்சிக் களமாக அமைந்தது. அண்ணாவும் கலைஞரும் ஈரோட்டில் தங்கி குடி அரசு இதழில் தொடர்ந்து எழுதி வந்தனர்.
கருப்பு, சிவப்பு என்றாலே நமக்குத் தனிப் பெருமை இருக்கிறது. நமது கொடியைப் பார்க்கும்போது அந்தப் பெருமையை உணர்கிறோம். அந்தக் கருப்பு, சிவப்பு நிறம் பிறந்ததே குடி அரசு அலுவலகத்தில்தான்.
கலைஞர் ரத்தத்தால் உருவாக்கிய கறுப்பு சிவப்பு
திராவிடர் கழகத்தின் கொடியை உருவாக்கும் பொறுப்பு கலைஞரிடம் வழங்கப்பட்டது. கருப்பு நிறக் கொடியின் நடுவில் சிவப்பு வட்டம் இடம்பெற வேண்டும் என்று கலைஞர் யோசனை தெரிவித்தார். அந்தக் காலத்தில் பத்திரிகை அலுவலகங்களில் கருப்பு மை எளிதாகக் கிடைக்கும். ஆனால் சிவப்பு நிற மை எளிதாகக் கிடைக்காது; விலையும் அதிகம். அப்போது கலைஞர் தனது விரலில் ஊசியால் குத்தி, வெளியேறிய ரத்தத்தைக் கொண்டு கருப்புக் கொடியின் நடுவில் சிவப்பு வட்டத்தை வரைந்தார்.
அந்தக் கொடியைத் தந்தை பெரியார் ஏற்றுக்கொண்டார். அது திராவிடர் கழகத்தின் கொடியாக மாறியது. பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கறுப்பு சிவப்புக் கொடியிலும் இடம்பெற்றன. இன்றைக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொடியிலும் அதே கருப்பு, சிவப்பு நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு திராவிட இயக்கங்களின் கொடிகளில் கருப்பு, சிவப்பு நிறங்கள் இடம்பெறுவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது குடி அரசு அலுவலகம்தான்.
கலைஞரின் கவிதைகளும் தந்தை பெரியாரும்
இன்னொரு சம்பவத்தையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். தந்தை பெரியாருக்குக் கவிதைகள் பிடிக்காது. அவர் நடைமுறைச் சிந்தனை கொண்டவர். எதையும் மிகைப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர். அந்தக் காலத்தில் கவிதைகள் பெரும்பாலும் கற்பனைகளையும் பக்தி, புராணங்களையும் மையமாகக் கொண்டிருந்ததால் கவிதைகளையும் கவிஞர்களையும் பெரியார் விமர்சிப்பார்.
ஆனால் கலைஞருக்குக் கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதுகுறித்துச் சிலர் பெரியாரிடம் புகார் தெரிவித்தனர். உடனே கலைஞரை அழைத்த பெரியார், அவர் எழுதிய கவிதைகளைக் கேட்டுப் பெற்றுப் படித்தார். அந்தக் கவிதைகளில் இடம்பெற்றிருந்த சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைப் பார்த்த பெரியார், 1945-ஆம் ஆண்டு ‘இது கவிதை அல்ல’ என்ற தலைப்பில் கலைஞர் எழுதிய 15 கவிதைகளை குடி அரசு பதிப்பகம் மூலம் தொகுப்பாக வெளியிட்டார். குடி அரசு இதழில் வேறு யாருக்கும் கிடைக்காத அந்தச் சிறப்பு முத்தமிழறிஞர் கலைஞருக்குக் கிடைத்தது.
இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?.. அன்றும் இன்றும்
அதேபோல, குடி அரசு இதழில் ‘இந்த ஆட்சியாளர்கள் ஏன் ஒழிய வேண்டும்?’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியானது. அந்தத் தலையங்கம் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருக்கிறது. அந்தத் தலையங்கம் வெளியானதும் பிரிட்டிஷ் அரசு பெரியாரைக் கைது செய்து சிறைத்தண்டனை விதித்தது. குடி அரசு இதழின் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, இதழை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த அடக்குமுறைகளுக்கெல்லாம் அஞ்சாமல் பெரியாரும் குடி அரசு இதழும் தங்களது பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டனர்.
அன்று நடந்தவை இன்றும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இன்றைய ரீல்ஸ் ஆட்சியைச் சிறிய அளவில் விமர்சித்தால்கூட தொடர்ந்து கைது செய்கிறார்கள். குறிப்பாக, ஜென் Z தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் சிறிய விமர்சனங்களை முன்வைத்தால்கூடக் கைது செய்யப்படுகிறார்கள்.
நயினார் நாகேந்திரன் மோசமாக பேசினாலும்..
தண்ணீர் வரவில்லை என்று கூறியதற்குக்கூட என்னை கைது செய்தார்கள்.. நாங்கள் வாயையே திறக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய டெல்லி எஜமானர்கள், குறிப்பாக நயினார் நாகேந்திரன், எவ்வளவு மோசமாகப் பேசினாலும் முதலமைச்சர் வாயைத் திறப்பதில்லை. அவரைப் பார்த்தால் மட்டும் இந்த டம்மி முதலமைச்சருக்குக் கோபமே வருவதில்லை. அந்த அளவுக்குப் பயம் இருக்கிறது. குத்தினது பாஜகவாலும் கத்தக்கூடாது என்பதுதான் டெல்லியிலிருந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவு.
பெரியார் சொன்னதை செய்த திமுக ஆட்சி
இவர்கள் எங்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அவற்றுக்கெல்லாம் அஞ்சும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல. கலைஞரின் உடன்பிறப்புகளும் அஞ்சமாட்டார்கள். ஏனென்றால் பெரியாரின் கொள்கைகளை உண்மையாக ஏற்றுக்கொண்டு, அவற்றின்படி செயல்பட்டு வருபவர்கள் நாங்கள். அதனால்தான் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது பெரியாரின் கொள்கைகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்திக் காட்டியிருக்கிறது.
சுயமரியாதைத் திருமணங்களின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் தந்தை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தினார். அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கியது. சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கும் அந்த அங்கீகாரம் பொருந்தும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். 1989-ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, இந்தியாவிலேயே முதன்முறையாக 37 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழகத்தில் கொண்டுவந்தார்.
குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பெரியார் குடி அரசு இதழில் எழுதியிருக்கிறார். அந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் வகையில் நமது கழகத் தலைவர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைக் கொண்டுவந்து, ஏறத்தாழ ஒன்றரை கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கினார். இவ்வாறு பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து உழைத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
பெண்களுக்கு.. பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு இருக்கிறதா?
ஆனால் இன்றைய நிலைமை என்ன? இந்த ஆட்சியில் யாருக்காவது பாதுகாப்பு இருக்கிறதா? குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தற்போதைய முதலமைச்சர், பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்.. (மாமாவாக இருப்பேனா) என்று கூறினார். ஆனால் அவர் சொன்னதைச் செய்தாரா? இன்றைக்குப் பெண்களை ஆளுங்கட்சியினரிடமிருந்தும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இரவு நேரத்தில் அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. அது சாதாரணம் மெசேஜ் இல்லை.. தலைவன் எந்த வழியோ தொண்டன் அந்த வழி. இதுக்கு ஒரு கேஸ் போட்டாலும் போடுவாங்க.. இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினோம். ஆனால் அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை என்று ஆளுங்கட்சியினர் மறுத்தனர்.
இந்நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டிருப்பதைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மை; அந்தப் பெண் மாவட்ட ஆட்சியரின் கணவரும் மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். அவர் புகார் அளித்தும் இதுவரை அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதி கேள்வி கேட்டுள்ளார். காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதேபோல, மனு தர சென்ற தொகுதிக்காரர் ஒருவரை துணை சபாநாயகர் தாக்கிய சம்பவமும் நடந்திருக்கிறது. அதுவும் தீபாவளி நாளில் நடந்திருக்கிறது. இனிமேல் சட்டமன்றத்திற்குச் செல்லும்போது அவரைப் பார்த்தாலே எனக்குப் பயமாக இருக்கும். இப்படிச் சட்டம் ஒழுங்கு எல்லா இடங்களிலும் சீர்குலைந்திருக்கிறது.
6 மாதத்தில் 700 படுகொலைகள்
இந்த அரசு ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் 700 படுகொலைகள் நடந்திருக்கின்றன. ஆட்சிக்கு வந்த அடுத்த நாளிலிருந்தே தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடங்கிவிட்டது. எல்லா இடங்களிலும் மின்வெட்டு நிலவுகிறது. முதலமைச்சரின் தொகுதியிலேயே மின்வெட்டு ஏற்படுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநகரங்களில் முதன்மையானதாகச் சென்னையை நமது தலைவர் மாற்றிக் காட்டினார். ஆனால் இந்தக் கேடுகெட்ட, வெட்கங்கெட்ட, தரங்கெட்ட ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டத்தில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் மாநகரமாகச் சென்னையை மாற்றியிருக்கிறார்கள்.
முதலமைச்சருக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. என்ன வேலை தெரியுமா? நமது தலைவர் தொடங்கிவைத்த திட்டங்களைச் சென்று பார்வையிடுவது, அவற்றைத் திறந்துவைப்பது, புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது, ரீல்ஸ் வெளியிடுவது ஆகிய பணிகளிலேயே அடுத்த 5 ஆண்டுகளைக் கழித்துவிடுவார். அந்த அளவுக்கு நமது தலைவர் ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்
நமது ஆட்சிக் காலத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் எழுந்தது. அப்போது நமது தலைவர் முதலமைச்சராக இருந்தார். யாருக்கும் அஞ்சாமல், நீதிமன்றத்தில் ‘We will face the consequences’ என்று தெரிவித்தோம். அப்படிச் சொன்னதோடு மட்டுமல்லாமல், மத நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் பாதுகாத்தோம். அன்று நமது தலைவரும் திராவிட மாடல் அரசும் உறுதியாக இருந்ததால், கலவரத்தை ஏற்படுத்த நினைத்த சங்கி கூட்டத்தின் திட்டத்தை முறியடித்தோம். ஆனால் இன்றைய சோப்ளாங்கி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையாக வாதிடாமல் கோட்டைவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியும் முதலமைச்சரும் பதிலளிக்க வேண்டும் என்று நமது தலைவர் வலியுறுத்தி 2 நாட்களாகிவிட்டன. ஆனால் முதலமைச்சர் இதுவரை வாயைத் திறக்கவில்லை.
எனவே, இப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மற்ற அனைவரையும்விட நமக்கு அதிகமாக இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதனை மனதில் வைத்து நமது பணிகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கு வழிகாட்டியாகத்தான் இன்று ‘குடி அரசு’ இதழின் முழுத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறைக்குக் கிடைத்திருக்கும் அறிவுசார் சொத்து. இந்தச் சொத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும். இந்தத் தொகுப்பின் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் அர்ப்பணிப்பும் கொள்கை உணர்வும் இருக்கின்றன. இந்தத் தொகுப்பை வெளியிடுவதற்குக் காரணமாக இருந்த அண்ணன் கோவை ராமகிருட்டிணன் அவர்களுக்கும், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.









