VIDEO: விஜய்யின் 6 மாத ஆட்சியில் எல்லாமே நாசம்.. தவெக அரசியல் பிணி மட்டுமல்ல.. சமூகப் பிணி.. மு.க.ஸ்டாலின் விளாசல்!

By Mathi

|

Published on 22 Nov 2026, 8:21 PM

MK Stalin- Vijay- TVK- Kudi Arasu

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் அனைத்தும் நாசமாகிவிட்டதாகக் குற்றம்சாட்டிய திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், “தவெக என்பது அரசியல் பிணி மட்டுமல்ல; சமூகப் பிணி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

தந்தை பெரியாரின் ‘குடி அரசு’ இதழ்களை அதே வடிவத்தில் கோவை ராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொகுத்துள்ளது. தந்தை பெரியாரின் ‘குடி அரசு’ இதழ் தொகுப்பை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (நவம்பர் 22) நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த குடி அரசு இதழ் தொகுப்பை பெரியாரியல் ஆய்வறிஞர் எஸ்.வி.ராஜதுரை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இன்றைய நாள் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது. நமது தமிழினம் சுயமரியாதை உணர்வோடும், பகுத்தறிவு சிந்தனையோடும், இனமான உணர்வு பெற்று எழுச்சி பெற வேண்டும் என்று நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு ‘குடி அரசு’ இதழைத் தொடங்கினார். 100 ஆண்டுகள் கழித்து அதே இதழ், அதே வடிவத்தோடு 43 தொகுதிகளாக வெளிவருகிறது.

ADVERTISEMENT

இந்த வெளியீட்டு விழா என்பது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் தரக்கூடிய விழாவாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தந்திருக்கக்கூடிய நமது அருமை சகோதரர் கோவை ராமகிருட்டிணன் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பாக நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கோவை ராமகிருட்டிணன் செய்துள்ள சாதனை சாதாரண சாதனை அல்ல; வரலாற்றுச் சாதனை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் வரலாற்றை நம் கண்முன் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தக்கூடிய சாதனை.

ADVERTISEMENT

கோவை ராமகிருட்டிணனுக்குப் பாராட்டு

வரலாற்றை நாம் தொடர்ந்து படித்தும், அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லியும் எதிர்காலத்தில் தடம் மாறிடாமல் புதிய வரலாற்றைப் படைக்க முடியும். அப்படிப்பட்ட வரலாற்றைப் படைப்பதற்குத் தேவையான அறிவுக் களஞ்சியத்தைத்தான் கோவை ராமகிருட்டிணன் அவர்கள் நமக்குக் கொடுத்திருக்கிறார். தந்தை பெரியாரின் கொள்கைகளை விதைகளாக விதைத்து, இயக்க உணர்வை வளர்க்கிற பணியைத் தன்னுடைய வாழ்நாள் கடமையாகச் செய்து கொண்டிருப்பவர்தான் நமது கோவை ராமகிருட்டிணன் அவர்கள்.

மிசா சட்டத்தில் கைதாகி என்னைப் போன்றவர்கள் சென்னை சிறைச்சாலையில் ஓராண்டு இருந்தோம் என்று சொன்னால், கோவை ராமகிருட்டிணன் அவர்கள் கோவை சிறையில் ஓராண்டு காலம் இருந்தார். அதுமட்டுமல்ல, தடா சட்டத்தில் கைதாகி 3 ஆண்டு காலம் சிறைக் கொட்டடியில் இருந்தார். 15 முறைக்கு மேல் சிறை சென்ற வீரர் இவர். இவர் பெற்ற அத்தனை விழுப்புண்களையும் தன்னுடைய கொள்கைப் பணிகளுக்காக உரமாக மாற்றிக்கொண்டு, போராட்ட வேகம் குறையாமல் இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இந்த உழைப்பும் உணர்வும்தான் திராவிட இயக்கத் தீரர்களுக்கான அடையாளம். அண்மையில் அவர் கீழே விழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தார். ஆனாலும் ‘குடி அரசு’ தொகுப்பைக் கொண்டு வர வேண்டும் என்று துடியாத் துடித்து இன்று வெளியீட்டு விழாவைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். கோவை ராமகிருட்டிணன் அவர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு தனித்துவம் இருக்கும். தமிழ்நாட்டுக்கும் தமிழினத்திற்கும் ஒரு ஆபத்து என்று செய்தி வந்துவிட்டால், அதனுடைய தொடர்ச்சியாக கோவையில் ராமகிருட்டிணனின் போராட்டத்தை தொடங்கிவிட்டார் என செய்திகள் வரும். நாள் குறிக்கிறது, போராட்டத்தை அறிவிப்பது என காலம் தாழ்த்தாமல் உடனடியாக அதிரடியான போராட்டங்களை நடத்திடுவார்.

ஈழத் தமிழர் நலனுக்காக அவர் நடத்திய போராட்டங்கள் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது. அவருடைய போராட்ட வழிமுறைகள் மக்களுடைய கவனத்தை ஈர்க்கிற மாதிரி இருக்கும். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது காயக்கட்டு ஊர்வலம் நடத்தினார். தூக்குக் கயிறு அனுப்பும் போராட்டத்தை நடத்தினார். அவர் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தாத நாளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்குக் களப் பணிகளைச் செய்யக்கூடியவர். தந்தை பெரியார் அவர்களுடைய 123-வது பிறந்தநாளில் 123 பேரை பெரியார் வேடத்தில் ஊர்வலமாக அழைத்து வந்தார். தலைவர் கலைஞருடைய நூற்றாண்டு விழாவின்போது கலைஞர் போல வேடமிட்டு 100 பேரை அழைத்து வந்தார்.

இப்படி நமது கோவை ராமகிருட்டிணன் அவர்களுடைய பணிகளைப் பற்றி நிறைய சொல்ல முடியும். அவர் இவ்வளவு ஆற்றலோடு செயல்பட அவருக்குத் தோழர்களாகக் கிடைத்திருக்கக்கூடிய தொண்டர்கள்தான் காரணம். கோவை ராமகிருட்டிணன் அவர்களுடைய சொற்களைக் கட்டளையாக ஏற்றுக்கொண்டு, எவ்வித அடக்குமுறைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல் அதனை நிறைவேற்றக்கூடிய அவருடைய தொண்டர்கள் அத்தனை பேரையும் நான் இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

அரசியல் பணி என்பது ஆக்கப் பணி என்பதை உணர்ந்து, போராட்டக் களங்களுக்குத் தேவையான கருத்தியல் உறுதியை விதைக்கக்கூடிய நூல்களையும் கொண்டு வருகிறார். திராவிட இயக்க நூற்றாண்டு விழாவின்போது 100 புத்தகங்கள், குலக் கல்விப் போராட்டம், அரசியலமைப்புச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், எம்.ஆர். ராதா நாடகங்கள், பெரியார்-அம்பேத்கர் தொகுதிகள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாறு என ஏராளமான கருவூலங்களைத் தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழங்கியிருக்கிறது. இவற்றை உருவாக்கிய உடுமலை கருமலையப்பன், பொள்ளாச்சி பிரகாஷ், இரா. மனோகரன் உள்ளிட்ட தோழர்களுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இந்த வரிசையில்தான் இன்று ‘குடி அரசு’ இதழின் முழுத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார் நமது கோவை ராமகிருட்டிணன் அவர்கள்.

தந்தை பெரியாரின் ’குடி அரசு’ இதழ்

தந்தை பெரியாரின் பேருழைப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லக்கூடிய இந்தக் கருவூலத்தை நாம் வெளியிடுவது எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமையாக நான் கருதுகிறேன். தந்தை பெரியார் நடத்திய இதழை, பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் பணியாற்றிய இதழை, தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய இதழை, தமிழர்களைத் தமிழர்களாக உணர வைத்த இதழை, தமிழர்களுடைய பகுத்தறிவுக் கண்ணைத் திறந்த இதழை, இன்றைக்கு ஆதிக்கத்துக்கு எதிரான எச்சரிக்கையைக் கொண்டு வந்து வெளியிடுவது சாதாரண செயல் அல்ல. 100 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் எழுதியிருந்தது வெறும் எழுத்துக்கள் அல்ல; தமிழினத்தின் பாதையை மாற்றிய சிந்தனைகள்.

1925-ல் தொடங்கப்பட்ட ‘குடி அரசு’ இதழ் 1940-ஆம் ஆண்டு வரைக்கும் வார இதழாக வெளிவந்தது. பிறகு 1943-லிருந்து 1949 வரைக்கும் வெளியானது. ‘குடி அரசு’ இதழ் தடை செய்யப்பட்டபோது அதை ‘புரட்சி’ என்ற பெயரில் பெரியார் நடத்தினார். அதையும் தடை செய்தார்கள். உடனே ‘பகுத்தறிவு’ என்ற பெயரில் தொடர்ந்து தன்னுடைய அறிவுப் பணியைச் செய்தார் தந்தை பெரியார். தடைகளை உடைக்கப் பெயர்களை மாற்றினாரே தவிர ஒருபோதும் தன்னுடைய கொள்கையை மாற்றவில்லை. அதுதான் தந்தை பெரியார். அதனால்தான் இன்று ஒட்டுமொத்த தமிழினமும் தலைநிமிர்ந்து நிற்கிறது.

சுயமரியாதை இயக்கத்தையோ ‘குடி அரசு’ இதழையோ தந்தை பெரியார் தொடங்காமல் இருந்திருந்தால், இன்று தமிழ்நாட்டின் நிலைமை என்னவாக இருக்கும் என்று சிறிது நினைத்துப் பாருங்கள். ஆரிய ஆதிக்கம், சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இழிவுகள், மதவாதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்று இந்த சமுதாயத்தில் புரையோடிப் போன அழுக்குகளுக்கு எதிராகப் பெரியார் கிளர்ந்தெழுந்தார். அதற்காக அவர் தன்னுடைய கையில் ஏந்திய அறிவாயுதம்தான் ‘குடி அரசு’ இதழ். அதனால்்தான் பலரும் நன்றி உணர்வோடு பெரியாரால் அரசியல் தெளிவு பெற்றோம், பெரியாரால் உயர்ந்தோம், பெரியாரால் வாழ்கிறோம், பெரியாரால் வளர்கிறோம் என்று பெருமையோடு சொல்கிறோம்.

பெரியாரியம் என்பது சமத்துவமான எதிர்காலத்துக்கான வழிகாட்டி. ஓர் இனத்தையே உயர்த்திய உயரிய தத்துவம். அந்த இனத்தை உயர்த்திய தலைவர் தந்தை பெரியார். 95 வயதிலும் மூத்திரச் சட்டியைச் சுமந்துகொண்டு தமிழ் சமுதாயத்தின் இனமான விடுதலைக்காக உழைத்தார், பேசினார், எழுதினார், போராடினார். இந்த வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு மிக அழுத்தமாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஒரு நூற்றாண்டு போராட்டத்தின் விளைவாக இன்றைய சமுதாயம் சிறிது மேலே வந்திருக்கிறது. ஆனால் இந்த முன்னேற்றமே நமது கடந்த கால வலியையும் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதை நாம் உணர்ந்து நமது அடுத்த கட்டப் பணிகளை இன்னும் கவனமாக, இன்னும் முனைப்பாக செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நாம் பட்ட துன்பம் நமது பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டாம் என்று ஒரு தலைமுறை நினைத்ததால் அடுத்த தலைமுறை புதிய பிரச்சனைகளைச் சந்தித்துவிடக் கூடாது. வரலாற்றை நாம் சிறிது திரும்பிப் பார்க்க வேண்டும்.

நீதிக்கட்சியும் இடஒதுக்கீடும்

நீதிக்கட்சி இல்லையென்றால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. இடஒதுக்கீடு இல்லையென்றால் பல குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பும் முன்னேற்றமும் இல்லை. குலக்கல்வித் திட்டத்தைப் பெரியாரும் அண்ணாவும் எதிர்க்காமல் போயிருந்தால், கல்வி நமது முன்னேற்றத்துக்கு அடிப்படையாக இருந்திருக்காது; அடிமைத்தனத்துக்கு ஆளாகி இருப்போம். கல்விக்கான அடித்தளம் கிடைத்த காரணத்தால்தான் பெருந்தலைவர் காமராஜர் ஏராளமான பள்ளிகளை உருவாக்கினார். அதனால்தான் அன்றைய ஆனந்த விகடன் பத்திரிகை “காரணம் பெரியார்; காரியம் காமராஜர்” என்று தலையங்கம் எழுதியது.

கல்லூரி கல்வி உருவாக்கிய கலைஞர்

பள்ளிக் கல்வியை வளர்த்தது கர்மவீரர் காமராஜர் என்றால், கல்லூரிக் கல்வியைப் பரவலாக்கி உயர்கல்விப் படிப்புகளை விரிவாக்கியது தலைவர் கலைஞர் அவர்கள். ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள் என்று உருவாக்கி கல்வியில் சிறந்த தமிழ்நாடாக வளர்த்தெடுத்தவர் நமது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

படிப்பு முடித்த திறமையான நமது இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஏராளமான தொழிற்சாலைகளை, தொழில் நிறுவனங்களை நாம் கொண்டுவந்தோம். இவற்றின் பலனாகத்தான் நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் சமூகக் குறியீடுகளிலும் முதன்மை மாநிலமாக உயர்ந்தது.

இந்தப் பயணத்துக்கு நாம் கொடுத்த உழைப்பை, எதிர்கொண்ட தடைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டிய கடமை நமது எல்லாருக்கும் இருக்கிறது. ஏனென்றால் கடந்து வந்த பாதை, அதைத் தெரியாத தலைமுறைக்கு நாம் தவிர்த்த ஆபத்துகளும் தெரியவில்லை. வரலாற்றை மறந்த தலைமுறை உரிமைகளையும் இழந்துவிடும்.

இப்ப எனக்கு இருக்கக்கூடிய வருத்தம் எல்லாம், இத்தனை ஆண்டு காலம் நாம் பாடுபட்டு உருவாக்கின இவ்வளவு வளர்ச்சியும் ஆறே மாதத்தில் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. கொடுமை என்னவென்றால், இன்றைக்கு ஆளுகிற கூட்டமும் பெரியாரை அவர்களின் கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொள்வதுதான். பெரியாரை எந்தக் கொள்கையைப் பற்றியும் இவர்களின் கட்சிக் கூட்டங்களில் பேசுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த ஆட்சிக்கே ஒரு ஜோசியர்தான் கொள்கைத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

ஃபேஷனுக்காக பெரியாரும் அம்பேத்கரும்..

மூடநம்பிக்கையில் மூழ்கிப் போன இவர்கள், சும்மா ஃபேஷனுக்காகப் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொண்டு, அவர்கள் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயத்தில்கூட உறுதியாக அவர்களால் இருக்க முடியவில்லை; முடியவே முடியாது. அவர்கள் அறிவிக்கிறார்கள், அதை அவர்களே ரத்து செய்கிறார்கள்.. எல்லாவற்றிலும் யூ டர்ன்தான். வெளிப்படத் தன்மை மருந்துக்குக்கூட இல்லை. இவர்களே ஒரு செய்தியை வெளியிடுகிறார்கள், கசிய விடுகிறார்கள். அதற்கு எதிர்ப்பு கிளம்பினால் இவர்களே அது உண்மையில்லை என்று மறுத்துவிடுகிறார்கள். தொழில் துறைக்கு வழிகாட்ட வேண்டிய வழிகாட்டுதல் பிரிவு அமைப்புக்கூட இன்று வழி தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இவர்களால் பக்கத்து மாநிலங்கள் எல்லாம் நம்மை காமெடியனாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எந்தத் துறை எடுத்துக் கொண்டாலும் இந்த ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரே வரியில் நான் சொன்னேன். இந்த ஆட்சியில் ‘மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும்’ இடையேதான் போட்டி. அடுத்த சில நாட்களில் அது அப்கிரேடாகி இப்ப போதைப்பொருள் கடத்தலுக்கும் வன்கொடுமைகளுக்கும் இடையேதான் இப்போது போட்டி. இப்போ அது எந்த அளவுக்கு இருக்கிறது எனில், அரசாங்கத்துல உயர் பொறுப்பில் இருக்கிற அதிகாரிகளுக்குத் தொல்லை கொடுப்பதில், அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ-க்களுக்குத்தான் நடுவுலதான் போட்டி என்ற நிலைமை வந்துவிட்டது. அடுத்து என்ன வரும் என்று தெரியவில்லை.

குட்கா மாஜிக்களும் மெத் பூபாலன்களும்

தவெக அரசின் கிரேம் ரேட்டைப் பார்த்து மக்கள் கிறுகிறுத்துப் போயிருக்கிறார்கள். நடு ரோட்டில் பட்டப்பகலில் இரட்டைக் கொலை, ஆளுங்கட்சிக்காரங்களே பாலியல் வன்கொடுமைகளைச் செய்வது என பெண்கள் சுதந்திரமாக நடமாடவே முடியாத, பயப்படக்கூடிய சூழல் வந்துவிட்டது. இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவிலான போதைக் கடத்தல்கள் தமிழ்நாட்டில்தான் இன்று பிடிபடுகிறது. ஆனால் அதைப் பிடிக்கிறது மாநிலக் காவல்துறை இல்லை, ஒன்றிய அரசினுடைய துறைகள். ஏன் இவர்களால் பிடிக்க முடியவில்லை? குட்கா மாஜிக்களையும், மெத் பூபாலன்களையும் கட்சியில வைத்துக்கொண்டு இருந்தால் எப்படி பிடிக்க முடியும்? எப்படி இவர்களால் போதைப் பொருளைப் பிடிக்க முடியும்?

நமது ஆட்சியில தமிழ்நாட்டு மக்களுக்குப் பணவீக்கத்தின் பாதிப்பே தெரியாத அளவுக்கு இருந்தது. ஆனால் இன்று வெங்காயம், தக்காளி அந்த விலையைக்கூட இன்று வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி ஏறிப் போய்விட்டது. சாப்பிடாமல் இருந்தால்தான் மயக்கம் வரும் என்று நினைத்தால், இன்று அரிசி விலையைக் கேட்டாலே மயக்கம் வருது. இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற மாதிரி முதலமைச்சர் ஏதாவது வாய் திறந்து பேசுகிறாரா? இல்லை.

ஆறே மாதம்.. எல்லாமே நாசம்

இது மட்டுமா? கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கிற மாதிரி மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சவால் விடுகிறார். அதைக் கண்டிக்காத நமது முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா? மாநில உரிமைகளை நிலைநாட்ட நீதியரசர் குரியன் ஜோசப், அசோக் வர்தன் ஷெட்டி ஐ.ஏ.எஸ்., பேராசிரியர் நாகநாதன் ஆகியோரைக் கொண்ட நாம் அமைத்த ஒரு குழுவை அரசியல் காழ்ப்புணர்வோடு கலைச்சிட்டாரு. இந்தியா முழுக்க அதைப் பற்றி ஊடகங்கள் விமர்சிக்கின்றன. அந்தச் செய்திகளெல்லாம் இந்த முதலமைச்சருக்குத் தெரிந்திருக்குமா என்பதுகூட நமக்குத் தெரியவில்லை. ஆறே மாதம் எல்லாமே நாசம் என்று சொல்கிற மாதிரி தவெக ஆட்சி இருக்கிறது.

தவெக அரசியல் பிணி- சமூகப் பிணி

தவெக என்கிற கட்சி அரசியல் பிணி மட்டுமல்ல.. அது ஒரு சமூகப் பிணி. அதை எதிர்த்து அரசியல் களத்தில் நாங்க போராடுவது மாதிரியே, உங்களைப் போன்ற கருஞ்சட்டைப் பிரச்சாரக் களத்தை முன்னின்று மக்களுக்கு இதிலுள்ள தீமைகளைப் புரிய வைக்கணும். நமது முன்னாடி இருக்கிற கடமை எல்லாம் ஏற்கனவே தந்தை பெரியார் சொன்னதுதான். தமிழா! விழிப்புணர்வு கொள்! என்று தட்டி எழுப்ப வேண்டும். தமிழா! இன உணர்வு கொள்! என்று விழித்தெழச் செய்ய வேண்டும். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு! என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். இதை வரலாற்றுக் கடமையாக நினைத்து நாம் செய்ய வேண்டும். மாபெரும் தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் போராடி உருவாக்கியிருக்கக்கூடிய இந்த நவீன தமிழ்நாட்டை யாரும் நாசமாக்கிடாமல் நாம்தான் காக்க வேண்டும்.

அதற்கான அறிவாயுதம்தான் ‘குடி அரசு’ இதழின் தொகுப்பு. அந்த அறிவாயுதத்தை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கக்கூடிய நிகழ்வுதான் இந்த நிகழ்ச்சி. பெரியார் ஏந்திய அறிவாயுதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று பகுத்தறிவை வளர்ப்போம், சுயமரியாதையைக் காப்போம், சமூக நீதியை நிலைநாட்டுவோம், நவீன தமிழ்நாட்டை இன்னும் உயர்த்துவோம்; அதற்கு இந்த விழாவிலே உறுதியேற்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

MK Stalin Speech | பா*லியல் சர்ச்சையில் தவெக தான் முதலிடம் | TVK | CM Vijay | MK Stalin

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel