இந்திய ரயில்வேயில் 43 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள RAC முன்பதிவு முறையை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும்போது சிலருக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டுவிடும். அதாவது, அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது பெர்த் (Berth) ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், எல்லோருக்கும் அப்படி உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில்லை. சிலருக்கு RAC என்றும், இன்னும் சிலருக்கு Waiting List (WL) என்றும் டிக்கெட் வழங்கப்படும்.
RAC என்பது Reservation Against Cancellation என்பதன் சுருக்கம். தமிழில் இதை ‘ரத்து செய்யப்படும் முன்பதிவுக்கு எதிரான ஒதுக்கீடு’ என்று கூறலாம். எளிமையாகச் சொன்னால், RAC டிக்கெட் வைத்திருப்பவருக்கு ரயிலில் பயணம் செய்ய அனுமதி உண்டு. ஆனால், தனியாக ஒரு பெர்த் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. உதாரணமாக, சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லும் ரயிலில் ஒருவர் பெர்த் வசதியுடன் கூடிய டிக்கெட் முன்பதிவு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு RAC டிக்கெட் கிடைத்தால், அவர் ரயிலில் ஏறிப் பயணம் செய்யலாம். ஆனால், Side Lower Berth-ஐ இன்னொரு RAC பயணியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். அதேநேரத்தில், ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது ரயிலில் ஏறாமல் இருந்தாலோ, காலியாகும் ’பெர்த்’ RAC பயணிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
RAC முறையின் மிகப்பெரிய பயன், டிக்கெட் முழுமையாக உறுதி செய்யப்படாவிட்டாலும் ரயிலில் பயணம் செய்ய முடியும் என்பதுதான். குறிப்பாக தீபாவளி, பொங்கல், கோடை விடுமுறை போன்ற காலங்களில் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் வேகமாகத் தீர்ந்துவிடும். அத்தகைய நேரங்களில் RAC டிக்கெட் கிடைப்பது பயணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
உதாரணமாக, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய ஒருவர் ரயிலில் முன்பதிவு செய்கிறார். அவருக்கு கன்ஃபார் பெர்த் கிடைக்கவில்லை என்றாலும் RAC டிக்கெட் கிடைத்தால் பயணம் செய்ய முடியும். மேலும், பயணத்துக்கு முன்பு வேறு யாராவது டிக்கெட்டை ரத்து செய்தால் அவருக்கு பெர்த் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் RAC முறை, முழுமையான கன்ஃபார்ம் டிக்கெட்டுக்கும் வெயிட்டிங் லிஸ்ட்டுக்கும் இடைப்பட்ட ஒரு வாய்ப்பாக இருந்து வருகிறது.
RAC முறையில் பயணம் செய்ய அனுமதி கிடைத்தாலும் பயணிகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை முழுமையான பெர்த் கிடைக்காததுதான். ஒரே பெர்த்தை இரண்டு பயணிகள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருப்பதால் இரவு நேரத்தில் இருவரும் வசதியாகப் படுத்துத் தூங்க முடியாது. குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இந்த நடைமுறை சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதில் மற்றொரு முக்கியமான பிரச்சினை கட்டணம். கன்ஃபார்ம் பெர்த்தில் பயணம் செய்பவரும் RAC டிக்கெட்டில் பயணம் செய்பவரும் பொதுவாக ஒரே வகுப்புக்கான முழுக் கட்டணத்தை செலுத்துகின்றனர். ஆனால் ஒருவருக்கு பெர்த் கிடைக்கிறது. இன்னொருவர் அதே கட்டணத்தைச் செலுத்திவிட்டு பாதி பெர்த்தை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இதனால் முழுக் கட்டணம் வசூலித்துவிட்டு பெர்த் வசதி வழங்காதது நியாயமா என்ற கேள்வி நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
43 ஆண்டுகளுக்கு முன்பு RAC அறிமுகமானது ஏன்?
1983–84-ஆம் ஆண்டு அப்போதைய ரயில்வே அமைச்சர் ஏ.பி.ஏ. கனி கான் சவுத்ரி, ரயில்வே பட்ஜெட்டில் RAC முறையை அறிமுகப்படுத்தினார். அப்போது இன்றுபோல கணினி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகள், காலியாக உள்ள படுக்கைகள் ஆகியவற்றை உடனுக்குடன் கண்டறியும் வசதிகள் இல்லை. இதனால் முன்பதிவு செய்த பயணி ரயிலில் ஏறாமல் இருந்தால், அந்த பெர்த்தை யாருக்கு ஒதுக்குவது என்பதை ரயில்வே ஊழியர்கள் முடிவு செய்ய வேண்டியிருந்தது. இந்த நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கவும், வெயிட்டிங் லிஸ்ட்டில் முன்னிலையில் உள்ள பயணிகளுக்கு காலியாகும் பெர்த்களை ஒதுக்கவும் RAC முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
2016-ஆம் ஆண்டு RAC வசதி மேலும் விரிவுபடுத்தப்பட்டது. சாதாரண படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியில் 10 RAC பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 14 ஆக உயர்த்தப்பட்டது. மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் 4 பேராக இருந்த எண்ணிக்கை 8 ஆகவும், இரண்டடுக்கு ஏசி பெட்டிகளில் 4 பேராக இருந்த எண்ணிக்கை 6 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
RAC முறையை ரத்து செய்யும் முடிவின் பின்னணி என்ன?
RAC முறையை ரத்து செய்வது குறித்த ஆலோசனைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது, முழு கட்டணம் செலுத்தும் பயணிகளுக்கு முழுமையான பெர்த் வசதி வழங்கப்படாதது. 2-வது ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம்.
கடந்த பிப்ரவரி 4-ந் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கையில் RAC பயணிகளிடம் முழுக் கட்டணம் வசூலிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முழுக் கட்டணம் செலுத்தியும் தனியாக பெர்த் கிடைக்காமல் RAC நிலையிலேயே பயணம் செய்பவர்களுக்குக் கட்டணத்தில் ஒரு பகுதியைத் திருப்பித் தர வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது.
ஆனால் ஆன்லைன் மூலமாகவும் ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதால், இவ்வாறு கட்டணத்தைத் திருப்பித் தருவதற்கான பொதுவான நடைமுறையை உருவாக்குவது சிக்கலானது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய தொழில்நுட்பம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது?
முன்பெல்லாம் ரயிலில் ஒரு பெர்த் காலியாக இருக்கிறதா என்பதை டிக்கெட் பரிசோதகர் நேரடியாகச் சரிபார்த்து, அதன் பின்னரே வேறொரு பயணிக்கு ஒதுக்க முடியும். ஆனால் தற்போது டிக்கெட் பரிசோதகர்களுக்கு HHT (Hand Held Terminal) என்ற கையடக்க மின்னணு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனம் ரயில்வே முன்பதிவு அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, சென்னையில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் ஒருவர் திருச்சியில் ஏறுவதற்காக பெர்த் முன்பதிவு செய்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். ஆனால் அவர் திருச்சியில் ரயிலில் ஏறவில்லை என்றால், டிக்கெட் பரிசோதகர் தனது கையடக்க சாதனத்தில் அந்தப் பயணி வரவில்லை என்பதைப் பதிவு செய்ய முடியும்.
உடனே அந்த பெர்த் காலியாக இருப்பது ரயில்வே முன்பதிவு அமைப்பில் பதிவாகும். அடுத்த ரயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்ய விரும்பும் மற்றொரு பயணிக்கு அந்த பெர்த் ஒதுக்க முடியும். இதனால் காலியாக உள்ள பெர்த்களை கண்டறியவும், அவற்றை மற்ற பயணிகளுக்கு ஒதுக்கவும் பழைய RAC நடைமுறையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது ரயில்வே அதிகாரிகள் தரப்பு வாதம்.
மேலும், காலியாகும் பெர்த்களை ஒதுக்குவதில் டிக்கெட் பரிசோதகர்களின் தனிப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரத்தைக் குறைப்பதன் மூலம் முறைகேடுகளையும் தடுக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுமா?
RAC முறையை ரத்து செய்வதால் ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு மாற்றப்பட்ட டிக்கெட் ரத்து விதிகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணத்தைத் தவிர்ப்பவர்களுக்குக் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை.
இதனால் முன்பதிவு செய்த பயணி ரயிலில் ஏறாவிட்டாலும், அவர் செலுத்திய கட்டணம் ரயில்வேக்கு கிடைத்துவிடுகிறது. அந்தப் பயணியின் பெர்த்தை மற்றொரு பயணிக்கு ஒதுக்குவதன் மூலமாகவும் ரயில்வேக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் RAC முறையைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
RAC ரத்து செய்யப்பட்டால் பயணிகளுக்கு என்ன பாதிப்பு?
RAC முறையை ரத்து செய்தால், முழுக் கட்டணம் செலுத்திவிட்டு மற்றொருவருடன் பெர்த்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய சிரமம் நீங்கலாம். ஆனால் இதில் மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது. தற்போது முழுமையான பெர்த் கிடைக்காத நிலையிலும் RAC டிக்கெட் மூலம் பயணம் செய்ய முடிகிறது. RAC முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டால், அந்த வாய்ப்பு இல்லாமல் போகலாம். குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் அவசரமாகப் பயணம் செய்ய வேண்டியவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எனவே RAC முறைக்குப் பதிலாக ரயில்வே எந்த நடைமுறையை அறிமுகப்படுத்தப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக உள்ளது. ஏற்கெனவே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் RAC வசதி வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் மற்ற ரயில்களிலும் RAC முறையை ரத்து செய்வது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.









