இந்தியாவுக்கு எதிராக சீனாவின் பயங்கர சதி? வங்கதேசத்துக்கு அனுப்பிய கப்பலில் சிக்கிய 405 டன் ஏவுகணை ‘கெமிக்கல்’!

By Mathi

|

Published on 23 Nov 2026, 8:08 AM

China Bangladesh

சீனாவில் இருந்து வங்கதேசத்துக்கு அனுப்பப்பட்ட சரக்குக் கப்பலில் ஏவுகணைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 405 டன் வேதி பொருட்களும், சுமார் 40 லட்சம் சிம் கார்டுகளும் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் லியான்யுங்காங் துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்தின் மோங்லா துறைமுகத்துக்கு MV Star Line என்ற சரக்குக் கப்பல் புறப்பட்டது. ஆப்பிரிக்காவின் Comoros- கொமொரோஸ் நாட்டின் கொடியுடன் இந்தக் கப்பல் பயணம் செய்தது. இந்தக் கப்பல் கடந்த நவம்பர் 7-ந் தேதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள பெலாவான் கடற்பகுதியில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்றது.

ADVERTISEMENT

அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய கடற்படையின் KRI Sigalu-857 கப்பலில் இருந்த அதிகாரிகளுக்கு MV Star Line கப்பலின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, கப்பல் வழக்கமான கடல்வழிப் பாதையில் செல்லாமல் மாறுபட்ட பாதையில் பயணித்ததும், கடற்படையினரின் தகவல் தொடர்பு அழைப்புகளுக்குச் சரியாகப் பதிலளிக்காததும் சந்தேகத்தை அதிகரித்தது. இதையடுத்து அந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்திய இந்தோனேசிய கடற்படையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

405 டன் ஏவுகணை கெமிக்கல்

MV Star Line கப்பலில் மொத்தம் 36 கண்டெய்னர்கள் இருந்தன. அவற்றில் 15 கண்டெய்னர்களில் மட்டும் 405 டன் சோடியம் பெர்குளோரேட் (Sodium Perchlorate) என்ற ரசாயனப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த ரசாயனம் சாதாரண தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி ராக்கெட்டுகள், ஏவுகணைகளுக்கான வெடிபொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஏவுகணைகளுக்கான உந்துசக்தி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அமோனியம் பெர்குளோரேட் என்ற வேதிப்பொருளைத் தயாரிக்க சோடியம் பெர்குளோரேட் பயன்படுகிறது. இதனால் இந்த ரசாயனம் ராணுவத் தொழில்நுட்பத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

100 ஏவுகணைகள் தயாரிக்க முடியுமா?

இந்தக் கப்பலில் கைப்பற்றப்பட்ட ரசாயனத்தின் அளவு குறித்து இந்தோனேசிய கடற்படையின் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் டெனி செப்டியானா முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

405 டன் சோடியம் பெர்குளோரேட் ரசாயனத்தைப் பயன்படுத்தி சுமார் 100 ஏவுகணைகளுக்குத் தேவையான உந்துசக்திப் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.

கப்பலில் 40 லட்சம் சிம் கார்டுகள்

இந்தக் கப்பலில் ஏவுகணை தயாரிப்புக்குப் பயன்படும் ரசாயனம் மட்டுமின்றி, சுமார் 40 லட்சம் 4G LTE சிம் கார்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவில் சிம் கார்டுகள் வங்கதேசத்துக்கு ஏன் அனுப்பப்பட்டன? அவற்றை வாங்கிய நிறுவனம் எது? என்பதும் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.

கப்பலின் ஆவணங்களிலும் முறைகேடு

கப்பலில் நடத்தப்பட்ட சோதனையில் அதன் பதிவு ஆவணங்களிலும் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆபத்தான ரசாயனப் பொருட்களை சர்வதேச கடல்வழியில் எடுத்துச் செல்வதற்கான உரிய அனுமதிகள் பெறப்பட்டிருந்தனவா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel