தேர்தல் ஆணையர்களிடையே மோதல்: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்த வலுக்கும் கோரிக்கை!

Published On:

| By Mathi

Election Commission Row

இந்திய தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

இந்த விவகாரத்தை முன்வைத்து, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கெனவே நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ADVERTISEMENT

தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே என்ன மோதல்?

இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – SIR உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த 10 மாதங்களில் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்திருப்பதாக The Indian Express செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது மற்றும் மீண்டும் சேர்ப்பது, வாக்காளர் பட்டியல் தரவுகளைக் கையாள்வது உள்ளிட்ட தேர்தல் நடைமுறையின் முக்கியமான அம்சங்கள் தொடர்பாக இந்த ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முடிவுகள் தங்களுக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்டதாகவும் இரு தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபித்ததாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, மகாராஷ்டிராவுக்கு மறுதேர்தல் நடத்துக

இந்த தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனா (UBT) தலைவருமான உத்தவ் தாக்கரே இன்று செப்டம்பர் 23-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய உத்தவ் தாக்கரே, அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

அத்துடன் இந்த விவகாரத்தை நீதிமன்றமும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, SIR நடவடிக்கைக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஏற்கெனவே நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்; அந்த மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

ஞானேஷ் குமாரை கைது செய்க; மறுதேர்தல் நடத்துக- மமதா

இதற்கிடையே மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

“இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் முறைகேடு. இதுபோன்ற ஒன்றை எங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை. ஞானேஷ் குமாரை கைது செய்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் தொடர்வதற்கான தார்மீக உரிமை அவருக்கு இல்லை” என்று மமதா தெரிவித்துள்ளார்.

மேலும், SIR நடவடிக்கைக்கு முந்தைய பழைய வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மேற்கு வங்கத்தில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவும் ஞானேஷ் குமாரும் இணைந்து மேற்கு வங்க தேர்தலை முறைகேடாக கையாண்டதாகவும் மமதா குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை; SIR உள்ளிட்ட இறுதி முடிவுகள் மூன்று தேர்தல் ஆணையர்களாலும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை என்பதே தேர்தல் ஆணையத்தின் விளக்கமாக உள்ளது.

ஞானேஷ் குமாரை உடனடியாக நீக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின்

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

“SIR-க்குப் பின்பு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகவும், ரகசியமாகவும் செயல்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது” என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கடந்த 10 மாதங்களில் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்தும் அவை புறக்கணிக்கப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையே சீர்குலைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இனியும் ஞானேஷ் குமார் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். SIR நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

இதற்கிடையே தேர்தல் ஆணையம், தங்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ளது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தில் ஆலோசனைகளின்போது உறுப்பினர்கள் வெவ்வேறு கருத்துகள், ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பது இயல்பான நடைமுறை என்றும், ஆனால் SIR உட்பட இறுதியாக எடுக்கப்பட்ட முடிவுகள் மூன்று தேர்தல் ஆணையர்களாலும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share