தன்னிச்சையாக முடிவெடுத்தாரா தலைமை தேர்தல் ஆணையர்? தேர்தல் ஆணையம் விளக்கம்!

Published On:

| By Kavi

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக நடந்து கொண்டதாக மற்ற தேர்தல் ஆணையர்கள் குற்றம்சாட்டி இருந்த நிலையில், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 

ADVERTISEMENT

இதில் கடந்த 10 மாதங்களில் தங்கள் அனுமதி இன்றி பிறப்பிக்கப்பட்ட முடிவுகள் உத்தரவுகளுக்கு தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்துவும், விவேக் ஜோஷியும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்தது. 

இது தொடர்பாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

ADVERTISEMENT

அதில், ”அரசியலமைப்பு 324ஆவது பிரிவு மற்றும் சட்ட ரீதியான விதிகளின் கீழ் செயல்படும் அரசியலமைப்பு அமைப்பாக தேர்தல் ஆணையம் உள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சட்டம் மற்றும் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டது. 

ADVERTISEMENT

ஆணையத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ உத்தரவுகள், முடிவுகள் மற்றும் நிர்வாக வழிகாட்டுதல்கள் முழுமையான சட்ட அங்கீகாரத்தை கொண்டவை. 

கடந்த 10 மாதங்களில் எடுக்கப்பட்ட சில உள் குறிப்புகளை மட்டும் சுட்டிக்காட்டுவது முழுமையான தகவலாகாது. கடந்த ஓராண்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் உட்பட சுமார் 40 புதிய முயற்சிகள் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் ஒருமனதாக எடுக்கப்பட்டன. 

இறுதி முடிவை எடுப்பதற்கு முன் வேறுபட்ட கருத்துக்கள் வருவது ஒரு பொதுவான ஜனநாயக நடைமுறை. அனைத்து அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்க முழு உரிமை உண்டு. 

ஒரு முடிவு எடுக்கும் முன்னர் ஆணைய உறுப்பினர்களால் எழுப்பப்படும் செயல்பாட்டு ரீதியான கேள்விகள் மற்றும் கருத்துகள் வாக்காளர் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாகும் 

பீகார், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் முக்கிய தேர்தல்களை ஆணையம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

நமது ஜனநாயகத்தை முன்னேற்றுவதில் தனது முக்கிய பங்கை உணர்ந்து தேர்தல் ஆணையம் தனது அரசியலமைப்பு கடமைகளை முழுமையாக நேர்மையுடன் நிறைவேற்றுவதில் முழு உறுதியுடன் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share