தேர்தல் ஆணையர்கள் நியமனம்.. மோடி அரசின் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கேள்வி- முக்கிய உத்தரவு என்ன?

Published On:

| By Mathi

Election Commissioners Appointment

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்த 2023-ஆம் ஆண்டு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி, Anoop Baranwal v. Union of India வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகிய மூவர் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே நியமனங்கள் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது.

ADVERTISEMENT

ஆனால் மத்திய அரசு, அதே 2023-ஆம் ஆண்டு புதிய சட்டத்தைக் கொண்டுவந்து, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த தேர்வுக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கியது. அவருக்குப் பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய கேபினட் அமைச்சரை தேர்வுக் குழுவில் சேர்த்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தேர்வுக் குழுவில் பிரதமர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சர் என மத்திய அரசுக்கு 2:1 என்ற பெரும்பான்மை கிடைப்பதால், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.

ADVERTISEMENT

நீதிபதி தீபங்கர் தத்தாவின் சந்தேகங்கள்

இம்மனுவை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் போது நீதிபதி தீபங்கர் தத்தா எழுப்பிய கேள்விகள்:

  • 2023-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழு உண்மையிலேயே சுதந்திரமான தேர்வு நடைமுறையை உறுதி செய்கிறதா?
  • பிரதமர், அவர் தேர்வு செய்யும் மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் கொண்ட குழுவில், மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படாதா?
  • சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு உண்மையிலேயே சுதந்திரமான தேர்தல் ஆணையம் அவசியம்; தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருப்பது மட்டும் போதாது; அது சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிய வேண்டும்.
  • பிரதமரால் நியமிக்கப்படும் அமைச்சர், தேர்வுக் குழுவில் பிரதமருக்கு எதிராக வாக்களிப்பார் என்று எதிர்பார்க்க முடியுமா? அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்ற அடிப்படையிலும் பிரதமரை அந்த அமைச்சர் எதிர்க்கக்கூடிய நிலை இருக்காது. இவ்வாறு கேள்வி எழுப்பினார் நீதிபதி தீபங்கர் தத்தா.

கேப்டனே நடுவரை நியமிப்பதா?

மேலும், ”ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஓர் அணியின் கேப்டனே நடுவரைத் தேர்ந்தெடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பின்னர் அந்த அணி வெற்றி பெறுகிறது. அந்த நடுவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியானவையாகவே இருந்தாலும்கூட, அவர் வெற்றி பெற்ற அணியின் கேப்டனால் தேர்வு செய்யப்பட்டவர் என்பதால் அவரது முடிவுகள் மீது சந்தேகத்தின் நிழல் விழும்” என்றும் நீதிபதி தீபங்கர் தத்தா சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT

மத்திய அரசு சொன்னது என்ன?

ஆனால் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர்,

  • அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவு, தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான நடைமுறையை சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது.
  • Anoop Baranwal தீர்ப்பில் ஏற்படுத்தப்பட்ட தேர்வுக் குழு, நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரையிலான இடைக்கால ஏற்பாடு மட்டும்தான்.
  • தேர்வுக் குழுவில் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காகவே பிரதமரோ அல்லது நிர்வாகமோ ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்று முன்கூட்டியே அனுமானிக்க முடியாது. இவ்வாறு மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து

பின்னர் நீதிபதி தீபங்கர் தத்தா, தேர்தல் ஆணையர்களின் நியமனம் அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசனக் கொள்கை, 5 நீதிபதிகள் கொண்ட Anoop Baranwal தீர்ப்பிலேயே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. ஆகையால் இந்த வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

ஆனால் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, அரசியலமைப்புச் சட்டத்தை விளக்குவது தொடர்பான முக்கியமான கேள்வி எழுந்துள்ளதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 145(3)-வது பிரிவின்படி அரசியல் சாசன அமர்வே இந்த விவகாரத்தை தீர்மானிக்க வேண்டும் என்றார்.

நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை முதலில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும் என்று இருவரும் கருதினர். இதனால், வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்புவதற்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க இரு நீதிபதிகளும் உத்தரவிட்டனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share