மேகதாது அணை: உதயநிதி திருத்தத்தை ஏற்ற முதல்வர் விஜய்… எதிர்த்த அதிமுக மனு டிஸ்மிஸ்!

Published On:

| By Mathi

Mekedatu-AIADMK-High Court

மேகதாது அணை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த திருத்தத்தை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டு சட்டப்பேரவைத் தீர்மானத்தில் சேர்த்ததை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவின் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், ஜூன் 18-ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட மேகதாது அணைக்கு எதிரான சட்டசபை தீர்மானத்தில், கர்நாடக அரசின் அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்ற கோரிக்கை மட்டுமே இடம்பெற்றிருந்தது.

ADVERTISEMENT

ஆனால் ஜூன் 19-ஆம் தேதி இந்த தீர்மானம் சட்டசபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது அணை விவகாரத்தை விசாரிக்க தனியாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

உதயநிதி முன்வைத்த இந்தக் கோரிக்கை திருத்தமாக தனியாக முன்மொழியப்படவில்லை; மற்றொரு உறுப்பினரால் வழிமொழியப்படவில்லை; அதன் மீது தனியாக விவாதம் நடத்தப்படவில்லை; தனியாக வாக்கெடுப்புக்கும் விடப்படவில்லை. இருப்பினும், தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இப்படி ஒரு திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்த்தது தமிழ்நாடு சட்டப்பேரவை நடைமுறை விதி 104-க்கு முரணானது என்று அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது. சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை என்றும், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட இறுதித் தீர்மானத்தின் அதிகாரப்பூர்வத்தன்மையைத்தான் கேள்வி எழுப்புவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, சட்டப்பேரவையில் திருத்தம் சேர்க்கப்பட்டபோது அதற்கு அங்கேயே எதிர்ப்பு தெரிவிக்க உறுப்பினர்களுக்கு வாய்ப்பு இருந்ததாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அப்போது எதிர்க்காமல், பின்னர் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் ‘Aye’ என்று வாக்களித்திருந்தாலோ அல்லது அமைதியாக இருந்திருந்தாலோ, சில வாரங்கள் கழித்து நீதிமன்றத்திற்கு வந்து தங்களது அப்போதைய அமைதியை செல்லாததாகக் கருத வேண்டும் என்று கோர முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ஒரு செயல் நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டே இருந்து, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அது நடைபெற அனுமதித்த ஒருவர், பின்னர் அதுகுறித்து புகார் எழுப்ப முடியாது என்ற கோட்பாடு சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், திருத்தம் சேர்க்கப்பட்ட பிறகு சட்டப்பேரவையிலேயே அதிமுக தலைவர் இது தொடர்பாகப் பிரச்சினையை எழுப்பியதாகவும், அதற்கு எந்த விதிமீறலும் இல்லை என்று சபாநாயகர் தீர்ப்பளித்ததாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், இது சட்டப்பேரவையின் நடைமுறை தொடர்பான புகார் என்று கூறிய உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 212(1)-வது பிரிவின்படி சட்டப்பேரவையின் நடைமுறைக் குறைபாடுகளை மட்டும் அடிப்படையாக வைத்து நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் அடிப்படையான சட்டவிரோதம், உள்நோக்கம் அல்லது அரசியலமைப்பு வரம்பு மீறல் எதுவும் இல்லை என்று கூறி, அதிமுகவின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share