சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 80 வயது தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி தொடர்பாக, அவருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கூறப்படும் சாந்தி ஏற்கனவே வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சாந்தியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சாந்தி கூறியிருப்பதாவது: ஜெம் குழும நிறுவனங்களின் தலைவரான ஆர். வீரமணி மற்றும் அவரது மகன் கீர்த்திராஜ் வீரமணி ஆகியோரால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் நான் இருந்து வருகிறேன்.
சிறு வயது முதலே வீரமணியை எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பராக நான் அறிந்திருந்தேன். தொழில் தொடர்பான விஷயங்களில் எங்களுக்கு உதவுவதாகக் கூறி, அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்.
அப்போது எனக்கு சுமார் 13 வயது மட்டுமே. மிகவும் சிறிய வயதாக இருந்ததால், அவரது தவறான நோக்கத்தை என்னால் முன்கூட்டியே புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால், அவரது தவறான பாலியல் அணுகுமுறைகளுக்கு நான் அறியாமலேயே இரையாகிவிட்டேன்.
பின்னர், எனக்கு ஒரு பாதுகாவலரைப் போல நடந்துகொண்டு, எதிர்காலத்தில் என் வாழ்க்கையை அமைத்துத் தருவதாகப் பல்வேறு நம்பிக்கைகளை அளித்து, தனது சொந்த நலன்களுக்காக என்னைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
நான் அவரை நூறு சதவீதம் நம்பினேன். அவர் என்னிடம் கேட்ட அனைத்தையும் அவருக்காகச் செய்து வந்தேன். அவருடைய நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, எனக்குக் கிடைத்த கடன் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவருக்குப் பணம் ஏற்பாடு செய்து கொடுத்ததும் இதில் அடங்கும்.
என் தந்தையின் சொத்திலிருந்து எனக்குக் கிடைத்த முழுத் தொகையைக்கூட, அவர் எனக்கு நல்லவர் என்ற நம்பிக்கையில் அவரிடம் கொடுத்துவிட்டேன். இவ்வாறு சாந்தி கூறியுள்ளார். ஆனால் இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டு எப்படி வெளியானது? என்பது தெரியவில்லை.
