தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது சரியா? தவறா? நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பெரும் போராட்டத்தையே உருவாக்கிய இந்தக் கேள்வி இப்போது மீண்டும் விவாதத்துக்கு வந்திருக்கிறது.
சென்னை மயிலாப்பூர் சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் செப்டம்பர் 19-ந் தேதி “தேவநாயகி” முழுநாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் எழுத்தாளர் அ. வெண்ணிலா, எழுத்தாளர் ஜெயமோகன், ஸ்ரீராம், ஆய்வாளர் சாந்தினி பி., பத்திரிகையாளர் கோலப்பன், லட்சுமி பாலகிருஷ்ணன், ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட பலரும் தேவதாசிகள், அவர்களது கலை, கோவில் வாழ்க்கை, சமூக நிலை, அவர்களுக்கு நேர்ந்த சுரண்டல் என பல்வேறு கோணங்களில் பேசியிருக்கிறார்கள்.


அருள்மொழி எழுதியது என்ன?
இந்தக் கருத்தரங்கை முன்வைத்து திராவிடர் கழக பிரசார செயலாளர், மூத்த வழக்கறிஞர் அ. அருள்மொழி தனது முகநூல் பதிவில் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அருள்மொழியின் முகநூல் பதிவு: நீண்ட நாட்களுக்குப் பிறகு முகநூலில் எழுதுகிறேன். நேற்று முன்தினம் சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற தேவதாசிகள் பற்றிய ஆய்வரங்கிற்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். நாயகி என்ற அமைப்பை நடத்தும் எட்டுப் பெண்களின் முயற்சியால் தேர்ந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி. அவர்களுடைய உழைப்பும் திறமையும் வியப்பிற்குரியது.
ஆய்வரங்கில் உரையாற்றிய பேச்சாளர்களில் சிலர், குறிப்பாக எழுத்தாளர் தோழர் அ. வெண்ணிலா, தேவதாசி முறையை ஒழித்ததே தவறு என்ற பார்வையில் பேசினார்கள்.

எழுத்தாளர் அ. வெண்ணிலா அவர்களின் உரை முழுவதும் அந்தப் பார்வையில்தான் அமைந்திருந்தது. அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் அதே கருத்தை கொஞ்சம் முன்னும் பின்னுமாக சுய முரண்பாடுகளுடன் பேசினார். இந்தியாவில் சங்ககாலம் முதல் நடைமுறையில் இருந்த ஒழுக்கத்தில் குறுக்கிட்ட கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் பிரிட்டிஷ் சதி பற்றியும், மன்னர்களால் மணம் செய்து கொள்ளப்பட்ட இரண்டு தேவதாசிகளைப் பற்றியும் பேசினார். அதனால்தான் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது என்றாலும், பழையன கழிதல் என்ற முறையில் அதை புதுப்பிக்க வேண்டியதில்லை என்றும் கூறினார். பிறப்பு சார்ந்த தொழில் எல்லாவற்றிலும் குழந்தைகள் கொஞ்சம் வன்முறையோடுதான் பழக்கப்படுத்தப்படுவார்கள், ஆசாரி வீட்டுக் குழந்தைக்கும் அதுதான் நடக்கும் என்றார்.
ஆசாரித் தொழில் பழகும் சிரமமும் வன்முறையும், தேவதாசி வீட்டுப் பெண் குழந்தைக்குப் பழக்கப்படும் வன்முறையும் ஒன்றுதானா என்ற கேள்வியை அவரிடம் யாரும் கேட்டுப் பார்க்கலாம்.
அ. வெண்ணிலா அவர்கள் தன் உரையில், 1500 ஆண்டுகள் சிறப்புடன் இருந்த அமைப்பை அழித்துவிட்டோம் என்று தொடங்கி, தேவதாசிகள் மிக உயர்ந்த உரிமை வாழ்க்கை நடத்தியதாகவும், கோவில்களில் அவர்களுக்கு மிகுந்த மரியாதை வழங்கப்பட்டதாகவும் நிறைய செய்திகளைக் கூறினார். “நமது நாடு, நமது பண்பாடு, நமது மதம் ஆகியவை பற்றித் தெரியாத பிரிட்டிஷ்காரர்களால்தான் தேவதாசிப் பெண்கள் மீது இழிவான முத்திரை விழுந்தது” என்று அவர் பேசியது அதிர்ச்சி அளித்தது. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்திற்கு எதிராக பெங்களூர் நாகரத்னம்மாவின் தலைமையிலான தேவதாசிகள் சங்கம் நடத்திய போராட்டம் மற்றும் அவர்கள் கொடுத்த முறையீட்டு மனுவைப் பற்றியும் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

அந்த பெங்களூர் நாகரத்னம்மாவின் வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் பேசிய மியூசிக் அகாடமியின் இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீராம் அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார். அவர் உரையின் தொடக்கத்திலேயே “நாகரத்தினம்மா மிகப் பெரிய ஆளுமை வாய்ந்த பெண்மணி. ஆனால் அவர் தேவதாசிகள் அனைவரும் தன்னைப்போலவே உரிமையுடன் இருந்ததாக நினைத்துக் கொண்டார். அதனால் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தின் தேவையை அவர் உணரவே இல்லை” என்று கூறியது அ. வெண்ணிலாவின் உரைக்கு பதிலாக இருந்தது.
ஸ்ரீராம் பேசியதன் தொடர்ச்சியாக ஆய்வாளர் சாந்தினி பி. அவர்கள், நாகரத்னம்மாவின் வாழ்க்கையை மட்டும் தெரிந்து கொண்டால் போதாது; அதே காலத்தில் பெங்களூரில் வாழ்ந்த பாவப்பட்ட சீதம்மாவின் வாழ்வையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று சீதம்மாவின் துயரக் கதையைக் கூறினார்.
மன்னரால் நியமிக்கப்பட்ட தேவதாசிக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை, தன்னைத்தானே விற்றுக்கொண்ட தேவதாசிக்குக் கிடைத்திருக்குமா என்று கேட்டார்.

பத்திரிகையாளர் கோலப்பன் அவர்கள் தேவதாசிகள் பற்றி எழுதப்பட்ட நூல்களைப் பற்றியும், சமூகத்தில் நடைமுறையில் இருந்த தேவதாசிகளைப் பற்றிய வசைமொழிகளைப் பற்றியும் பேசினார்.
தொடக்க உரையாக, கோயிலின் கலைமுகம் என்ற தலைப்பில் பேசிய மருத்துவர் லட்சுமி பாலகிருஷ்ணன் அவர்கள், தேவதாசிகளின் கோயில் பணிகளையும், தேவதாசிகளுக்குள் நடந்த உயர்வு தாழ்வு சண்டைகளையும், அவர்கள் செய்த வேலை நிறுத்தம் பற்றியும் பேசினார்.
லட்சுமி பாலகிருஷ்ணன், கோலப்பன், சாந்தினி பி. ஆகியோர் தேவதாசிகளுக்கு மரியாதையும் இருந்தது, உடலியல் சுரண்டலும் இருந்தது. எனவே அந்தச் சட்டம் தேவைப்பட்டது என்றாலும், அந்தப் பெண்களின் மாற்று வாழ்க்கைக்கு எந்த ஏற்பாடும் செய்யாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டதால் தேவதாசிகளாக வாழ்ந்த பலர் வறுமையில் வீழ்ந்தார்கள் என்கிற பார்வையில் பேசினார்கள்.
முன்னாள் IAS அதிகாரியான ராஜேந்திரன் அவர்கள் தாசிகள் பற்றிய செய்திகள் எந்தெந்தக் காலங்களில் கல்வெட்டுகளில் கிடைத்தன என்கிற செய்திகளை ஆவணங்களில் இருந்து அந்தந்த ஊர்களைப் பற்றிய செய்திகளுடன் எடுத்துக் காட்டினார்.

நடனக்கலைஞரான ஸ்வர்ணமால்யா நல்ல தயாரிப்புடன் வந்திருந்தார். அவருக்கு முன்னால் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஆற்றிய குழப்பமான உரையால் தனது தலைப்பை நேரடியாக அணுக முடியாமல் தவித்தார். இப்பிரச்சினை பற்றிய தனது கருத்தும் பார்வையும் மாற்றத்திற்குள்ளாகி வருகின்றன என்பதையும் வெளிப்படையாகக் கூறினார்.

தேவதாசிகள் கடவுள்களைப் பற்றி மட்டும் பாடவில்லை. பெர்சிய இஸ்லாமியக் கலைகளின் தாக்கம், ஆங்கிலேயர் இசை என அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் இன்று பரதநாட்டிய நிகழ்ச்சி நிரலில் ஆடப்படும் சப்தம் என்ற வகைப்பாட்டில் “சலாம் சப்தம்” என்ற ஒரு வகையை அவர்கள் உருவாக்கி ஆடினார்கள் என்றும், ஆனால் இன்று அந்த சப்தம் ஆடப்படுவதில்லை என்பதோடு ஏன் இதையெல்லாம் ஆடுகிறாய் என்ற கேள்விகள் தனக்கு வருவதாகவும் குறிப்பிட்டார். வரலாறு இன்று பாடப்புத்தகங்களில் எப்படி திரிக்கப்படுகிறது என்பதையும், அந்த வெறுப்பு அரசியல் இசை நடனத்துறையிலும் இருக்கிறது என்பதையும் அழுத்தமாகக் கூறினார்.

சாருலதாமணி என்ற பாடகர், இன்றைய கர்நாடக இசைக்கலைஞர்கள் இந்தக் கலையை தேவதாசிகளிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம் என்ற உண்மையை மறைக்கத்தான் விரும்புகிறார்கள் என்றும், எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையை எடுப்பவர்கள் அவரது வரலாற்றினை மறைக்காமல் எடுக்க வேண்டும் என்றும் கூறினார். பிரிட்டிஷ்காரர்கள் பற்றிய குற்றச்சாட்டும் அவர் உரையில் இருந்தது.

ஸ்வர்ணமால்யாவின் கருத்தை மெய்ப்படுத்தும் விதமாக 90 வயதான பத்மஸ்ரீ விராலிமலை முத்துக் கண்ணம்மாள் அவர்களால் உருவாக்கப்பட்ட சலாம் மற்றும் சல்யூட் எல்லாம் இணைந்த நோட்டுஸ்வரத்தை அவரது பேரன் மணிவண்ணன், நட்டுவனார் சியாமளா, நடனக்கலைஞர் நர்த்தனா ஆகியோர் ஆடியது ஆரவாரமாக இருந்தது.
இப்படிப் பலவகைப் பார்வைகளும் இருந்தாலும், ‘தேவதாசிகள் வாழ்க்கை முற்றுமுழுதாகக் கோயிலும் கலையுமாகத்தான் இருந்தது; அந்தப் பெண்களுக்கு தங்கள் உடல்மீது முழு உரிமை இருந்தது; அப்படி மரியாதையும் உரிமையுமாக வாழ்ந்த தேவதாசிகளை பிரிட்டிஷ்காரன்தான் தவறாக ஒழுக்கக்கேடு என்று முத்திரை குத்திவிட்டான்; ஆரிய சமாஜம் உள்ளிட்ட இந்திய சீர்திருத்தவாதிகள் பிரிட்டிஷ்காரன் பார்வையை அப்படியே ஏற்றுக்கொண்டு இந்தச் சட்டத்தின் மூலம் அப்பெண்கள் வாழ்வை அழித்துவிட்டார்கள்’ என்ற கருத்துதான் நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் பதிவுச் செய்தியாக இருந்தது.
அந்த தேவதாசிகள் சமூகத்தில் பிறக்காத ஆய்வாளர்களெல்லாம் கண்டு அறிந்த இந்த உண்மையை, அந்தச் சமூகத்தில் பிறந்து தேவதாசி முறையை எதிர்த்துப் போராடிய மூவலூர் ராமாமிர்தமும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் அறியாமல் இருந்துவிட்டார்களா? என்ற கேள்விக்கு விடை சொல்ல ஒரு பேச்சாளரைக்கூட அழைக்காமல் நடக்கும் கூட்டம் எப்படி ஒரு நேர்மையான ஆய்வரங்கமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
தேவதாசி முறையைத் தடுக்கக் கூடாது என்று போராடிய பெங்களூர் நாகரத்னம்மாவின் வாழ்வும் பணியும் ஒரு தலைப்பாகப் பேசப்பட்டது போல, “தாசிகளின் மோசவலை” என்ற நூலை எழுதிய மூவலூர் ராமாமிர்தம் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிப் பேச ஒரு அமர்வு வேண்டுமல்லவா? தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்த டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் வாழ்வும் பணியும் ஒரு தலைப்பாகப் பேசப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?
முழுநாள் நிகழ்ச்சியையும் நேரில் சென்று அரங்கில் இருந்து கண்டு கேட்டு முடித்தபோது இந்தக் கேள்விகளும் என்னுடன் புறப்பட்டு வந்துவிட்டன நன்றி உரையைக் கேட்காமல்!
மூத்த வழக்கறிஞர் அ. அருள்மொழியின் இந்த முகநூல் பதிவை முன்வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த விவாதங்களை ஒட்டி, வழக்கறிஞர் அருள்மொழி குறிப்பிட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர் யார்? அவர்களுக்கும் இந்த ‘தேவதாசி முறை’க்கும் என்னதான் தொடர்பு? என்பதை நமது மின்னம்பலம் வாசகர்களுக்குத் தருவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
அந்த இருபெரும் வீராங்கனைகளைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் தேவதாசி, அதாவது சோ கால்ட் ‘தேவநாயகி’ என்பவர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன? என்பதை முன்னோட்டமாகத் தெரிந்துகொள்வோம்.

தேவதாசி முறை என்றால் என்ன?
‘தேவதாசி’ என்பதற்கு ‘தெய்வத்தின் அடியாள்’ அல்லது ‘கடவுளுக்குச் சேவை செய்யும் பெண்’ என்று பொருள். கோவில்களுடன் இணைந்து இசை, நாட்டியம் உள்ளிட்ட பணிகளைச் செய்த பெண்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் தேவரடியார், தேவதாசி போன்ற பெயர்கள் பயன்பாட்டில் இருந்தன.
இந்த முறை ஒரே நாளில் உருவானதல்ல. கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார நிறுவனங்களாகவும் செயல்பட்ட காலத்தில் இசை, நாட்டியம், திருவிழா, ஊர்வலம் உள்ளிட்ட கோவில் நிகழ்வுகளுடன் இந்தப் பெண்களின் பணிகளும் இணைந்திருந்தன.
அதேநேரம் காலப்போக்கில் இந்த அமைப்புக்கு இன்னொரு கொடூரமான முகமும் இருந்தது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை ‘பொட்டுக்கட்டுதல்’ உள்ளிட்ட சடங்குகள் மூலம் கோவிலுடன் இணைக்கும் நடைமுறை இருந்தது. அவ்வாறு அர்ப்பணிக்கப்பட்ட பெண்களுக்கு வழக்கமான திருமண வாழ்க்கை மறுக்கப்பட்டது. கோவில் சேவை என்ற பெயரில் தொடங்கிய இந்த வாழ்க்கை, கோவிலில் செல்வாக்கு செலுத்திய ஆண்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோரின் பாலியல் சுரண்டலுக்கான முறையாகவே மாறிப் போனது. மதம், மரபு, கோவில் சேவை என்ற பெயர்களுக்குப் பின்னால் பெண்களின் உடலும் வாழ்க்கையும் மற்றவர்களால் தீர்மானிக்கப்படும் கொடுமையான முறையாக ‘தேவதாசி’ முறை நிலைபெற்றது.
அப்படிப்பட்ட அந்த ‘நரக’ வாழ்க்கையை மிக அருகில் பார்த்து, பின்னர் அதற்கு எதிராகவே களத்தில் இறங்கியவர் பெயர்தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

யார் இந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்?
1883-ல் கிருஷ்ணசாமி – சின்னம்மாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் இராமாமிர்தம். இசைவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பம். அவருக்கு 5 வயது இருக்கும்போதே வாழ்க்கை தலைகீழாக மாறியது.
குடும்பப் பிரச்சினைகளைத் தொடர்ந்து தந்தை கிருஷ்ணசாமி குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றார். கையில் 5 வயது பெண் குழந்தையுடன் வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்த தாய் சின்னம்மாள், தேவதாசியான ஆச்சிக்கண்ணுவிடம் தனது மகள் இராமாமிர்தத்தை ஒப்படைத்தார்.
10 ரூபாய் பணமும் ஒரு பழைய புடவையும் இதற்காகக் கொடுக்கப்பட்டதாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
அதன்பிறகு இராமாமிர்தத்தின் வாழ்க்கை ஆச்சிக்கண்ணுவின் வீட்டுக்கு மாறியது. ஆச்சிக்கண்ணு அவரை வளர்த்தார். ஆடல், பாடல், இசை என ஒரு தேவதாசிக்கான அனைத்து பயிற்சிகளும் ராமாமிர்தம் அம்மையாருக்குத் தரப்பட்டன. ஆனால் வளர்ந்த பிறகு அந்த வாழ்க்கையைத் தானும் தொடர அவர் தயாராக இல்லை. தன்னை அந்த தேவதாசி மரபுக்குள் கொண்டு செல்ல நடந்த முயற்சியை எதிர்த்தார். வயதான செல்வந்தர் ஒருவருடன் அவரை இணைக்க நடந்த முயற்சியையும் மறுத்தார். இதற்கு எதிராக தனக்கு இசை கற்றுக்கொடுத்த சுயம்புப் பிள்ளையை தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தார்.
தேவதாசி முறையை எதிர்த்த இராமாமிர்தம், தன்னை வளர்த்த ஆச்சிக்கண்ணுவை வெறுக்கவில்லை. பின்னாளிலும் தனது பெயரை ‘ஆ. இராமாமிர்தம்’ என்றே எழுதினார். அந்த ‘ஆ’ ஆச்சிக்கண்ணுவின் நினைவு என்று அவரது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
1917-லேயே தொடங்கிய போராட்டம்
தான் மட்டும் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறினால் போதுமா? அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் மற்ற பெண்கள் என்ன செய்வார்கள்? இந்தக் கேள்வியுடன் களத்தில் இறங்கினார் இராமாமிர்தம்.
1917-லேயே மயிலாடுதுறை பகுதியில் தேவதாசிப் பெண்களைச் சந்தித்துப் பேசத் தொடங்கினார். வீடுகளுக்கே சென்றார். இளம் பெண்களுடன் பேசினார். அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வர விரும்பிய பெண்களுக்கு உதவினார். வெளியே வந்த பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.
தேவதாசி முறையிலிருந்து வெளியே வந்த பெண்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் இறங்கினார். அதன் தொடர்ச்சியாக உருவான அமைப்புகளில் முக்கியமானது ‘நாகபாசத்தர் சங்கம்’. இன்று இதை சமூக சீர்திருத்தம் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆனால் அன்றைக்கு அது அவ்வளவு எளிதான போராட்டம் அல்ல.
கோவில் இருந்தது. மத நம்பிக்கை இருந்தது. இசையும் நாட்டியமும் இருந்தன. நிலம், இனாம் போன்ற பொருளாதாரத் தொடர்புகள் இருந்தன. செல்வந்தர்கள், ஜமீன்தார்கள், புரவலர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இந்த தேவதாசி முறை அவசியமானதாகவும் இருந்தது. அவர்களுக்கு நடுவேதான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் களமாடினார்.
1925 மயிலாடுதுறை மாநாடு
1925-ல் மயிலாடுதுறையில் இசைவேளாளர் மாநாட்டை முன்னின்று நடத்தினார் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். திரு.வி.க., தந்தை பெரியார், எஸ். ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேவதாசிகளுக்காக ‘யுவதி சரணாலயம்’ நடத்திவந்த யமுனா பூரண திலகம்மா தலைமை வகித்தார்.
“பொட்டுக்கட்டும் பழக்கத்திலிருந்து நமது சமூகம் வெளியே வர வேண்டும்” என்பது இந்த இயக்கத்தின் முக்கியமான நோக்கமாக இருந்தது. மாநாட்டுடன் போராட்டம் முடிந்துவிடவில்லை.
அதற்குப் பிறகு ஊர் ஊராக ‘பொட்டறுப்பு சங்கங்கள்’ உருவாக்கப்பட்டன. பொட்டுக்கட்டப்பட்ட பெண்கள் மேடைக்கு வந்து தங்களை அந்த மரபுடன் இணைத்திருந்த பொட்டை அறுத்தெறியும் நிகழ்ச்சிகளும் நடந்தன.
எதிர்ப்புகளும் கடுமையாக இருந்தன. மிரட்டல்கள் வந்தன. கூட்டங்களில் பிரச்சினைகள் நடந்தன. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது கூந்தல் அறுக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியது. அவருக்கு பாலில் நஞ்சு கலந்து கொடுத்து கொலை செய்யவும் முயற்சி நடந்தது. இத்தனை கொடுமைகளையும் தாங்கியபடியே ‘தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

அதற்காக அவர் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. காந்திய இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் செயல்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், பின்னர் தந்தை பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறியபோது சுயமரியாதை இயக்கப் பாதையில் பயணித்தார்.
தேவதாசி முறை மட்டும் அவரது போராட்டத்தின் மையமாக இருக்கவில்லை. குழந்தைத் திருமணம், விதவைகளின் நிலை, சாதி மறுப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம், பெண்களின் உரிமை என அவரது களம் விரிந்தது. தனது போராட்டத்தை எழுத்திலும் பதிவு செய்தார்.

1936-ல் வெளியான மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் மிக முக்கியமான படைப்பு ‘தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’. தேவதாசிப் பெண்களின் வாழ்க்கை, அவர்களைச் சுற்றிய பொருளாதாரம், புரவலர்கள், அந்த அமைப்புக்குள் பெண்கள் எதிர்கொண்ட நிலை ஆகியவற்றை அந்தப் படைப்பில் அம்பலப்படுத்தி இருந்தார். அந்நாளில் அந்த நூல் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இப்படி தேவதாசி ஒழிப்புப் போராட்டத்துடன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பொதுவாழ்க்கை முடிந்துவிடவில்லை. பெண்களின் உரிமை, சாதி ஒழிப்பு, சுயமரியாதைத் திருமணம் எனத் தொடர்ந்து பல்வேறு சமூகப் போராட்டங்களில் இயங்கினார்.
1930-ஆம் ஆண்டில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க மாநாட்டின் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்தான். 1937 முதல் 1940 வரை நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.
1938 ஆகஸ்ட் 1-ல் திருச்சி உறையூரிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட ‘தமிழர் பெரும்படை’க்கு தஞ்சை ஐ. குமாரசாமிப் பிள்ளை தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ‘நகரதூதன்’ மணவை ரெ. திருமலைசாமி உள்ளிட்டோர் முன்னின்ற அந்தப் பெரும்படையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் பங்கேற்று நடைபயணம் மேற்கொண்டார்.
இது சாதாரண நடைபயணம் அல்ல. திருச்சி உறையூரிலிருந்து சென்னை வரை 42 நாட்கள் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தமிழர் பெரும்படை நடந்தே பயணித்தது. இப்பேரணியில் 577 மைல்கள் நடந்தே வந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். இந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 1938-ல் 6 வாரங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
அதன்பிறகும் அவரது போராட்டம் ஓயவில்லை. சென்னையில் பள்ளி முன்பு இந்தித் திணிப்பை எதிர்த்து மறியலில் ஈடுபட்டதற்காக மீண்டும் கைது செய்யப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், இம்முறை 6 மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1949-ல் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது, மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி அண்ணாவுடன் திமுகவில் இணைந்து செயல்பட்டார். முதுமையிலும் அவரது அரசியல் மற்றும் சமூகப் பணி தொடர்ந்தது.
1956-ல் திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 2-வது மாநில மாநாட்டில், அவரது நீண்டகால சுயமரியாதை இயக்கப் பணிகளைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா, “சுயமரியாதை இயக்க வீரர்” விருது வழங்கி சிறப்பித்தார்.
வாழ்நாள் முழுவதும் பெண் விடுதலைக்காகவும் சமூக சீர்திருத்தத்துக்காகவும் களமாடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1962 ஜூன் 27-ஆம் தேதி மறைந்தார்.

கலைஞர் எழுதிய ‘வீரத்தாயை இழந்தோம்’
அப்போது அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கலைஞர் கருணாநிதி முரசொலியில் “வீரத்தாயை இழந்தோம்” என்ற தலைப்பில்,
“வீரத்தாயை இழந்தோம்
பால் நுரைபோல் தலை
தும்பை மலர் போல் உடை!
கம்பீர நடை!
கனல் தெறிக்கும் பேச்சு!
அனல் பறக்கும் வாதத்திறன்!
அநீதியைச் சுட்டெரிக்க சுழலுகின்ற கண்கள்!
அடிமை விலங்கு தகர்த்தெறிய ஆர்ப்பரிக்கும் உள்ளம்!
ஓயாத பணி! ஒழியாத அலைச்சல்!”
எனப் பதிவு செய்தார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மறைந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பெயரை தமிழகத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களிடம் கொண்டு சென்ற இன்னொரு நிகழ்வும் நடந்தது. அதைச் செய்தவர் ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ கலைஞர்.
1989-ல் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, ஏழைப் பெண்களுக்கு உதவும் திருமண நிதி உதவித் திட்டத்துக்கு ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்’ என்று அவரது பெயரைச் சூட்டியது. தொடக்கத்தில் தகுதியுடைய ஏழைப் பெண்களுக்கு ரூ.5,000 திருமண உதவி வழங்கப்பட்டது. பின்னர் 2022-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அதனை ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் – புதுமைப் பெண் திட்டம்’ என்ற உயர்கல்வி உதவித் திட்டமாக மாற்றியமைத்தது.
தலைமுறைகளைத் தாண்டியும் தமிழ்ச் சமூகம் நினைவுகூரும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரைப் பற்றி பேசாமல் தேவதாசி அல்லது சோ கால்ட் தேவநாயகிகளைப் பற்றி ‘கருத்தரங்கமே’ நடத்துகிறார்களே என்பதுதான் அருள்மொழி முன்வைக்கும் ஆதங்கம்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறைக்கு எதிராக வீதிகளில் இறங்கி களமாடிக் கொண்டிருந்த காலத்தில்தான் இன்னொரு அம்மையார் சட்டசபைக்குள் இதே பிரச்சினைக்காகப் போராடிக் கொண்டிருந்தார். அவர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்.

யார் இந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி?
1886 ஜூலை 30-ஆம் தேதி புதுக்கோட்டையில் நாராயணசாமி – சந்திரம்மாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. அவரது தாயார் சந்திரம்மாள் தேவதாசி மரபைச் சேர்ந்தவர். இதனால் தேவதாசி சமூகத்தை வெளியிலிருந்து பார்த்த ஒருவர் அல்ல முத்துலட்சுமி ரெட்டி. அந்த அமைப்பின் சமூக விளைவுகளை தனது குடும்ப வாழ்க்கையிலிருந்தே அறிந்தவர்.
பெண்கள் உயர்கல்வி கற்பதே பெரும் போராட்டமாக இருந்த காலத்தில் கல்லூரிக்குச் சென்றார். புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் ஆண்களுடன் படிப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தபோதும், புதுக்கோட்டை மன்னரின் அனுமதியுடன் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் 1912-ல் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவப் பட்டதாரி ஆனவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்.

சட்டசபைக்குள் நுழைந்த முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்
1927-ல் சென்னை மாகாண சட்ட மேலவைக்கு முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நியமிக்கப்பட்டார். அங்கு துணைத் தலைவராகவும் பணியாற்றினார். சட்டமன்றத்துக்குள் நுழைந்ததும் அவர் கையில் எடுத்த முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றுதான் தேவதாசி முறை ஒழிப்பு.
1927 நவம்பர் 4.
சென்னை மாகாண சட்ட மேலவையில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஒரு முக்கியமான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சாதி, வழக்கம் அல்லது மதம் என்ற பெயரில் இளம் பெண்களையும் சிறுமிகளையும் இந்துக் கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் நடைமுறையை சட்டத்தின் மூலம் விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் நோக்கம்.
அப்போது முத்துலட்சுமி ரெட்டி சட்டசபையில் பேசிய வார்த்தைகள், நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெறும் தேவதாசி விவாதத்திலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
“தேவதாசிகள் நம்மில் ஒருவர்தான்; அவர்கள் நமது சொந்த உறவினர்கள். அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்தவர்களும் அல்ல; வெளிநாடுகளிலிருந்து இந்துக் கோவில்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்களும் அல்ல” என்று சட்டசபையிலேயே அழுத்தமாகக் கூறினார்.
தேவதாசியாக்கப்படும் சிறுமிகளுக்கு இசையும் நடனமும் கற்றுக் கொடுக்கப்பட்ட பிறகு, கத்தி அல்லது கடவுள் சிலையுடன் அடையாளத் திருமணம் நடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக அவர்கள் சட்டபூர்வமான திருமண வாழ்க்கைக்குள் செல்ல முடியாத நிலை உருவாக்கப்படுவதாகவும் முத்துலட்சுமி சுட்டிக்காட்டினார்.
அதிலும் மிக முக்கியமாக, ஒரு குடும்பத்திலிருந்து எந்தக் குழந்தைகள் இந்த முறைக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதையும் அவர் சட்டசபையில் பதிவு செய்தார். “அழகான, புத்திசாலியான குழந்தைகள்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்” என்றார்.
தேவதாசி முறை பழமையானது, மதத்துடன் தொடர்புடையது என்பதையும் முத்துலட்சுமி நிராகரிக்கவில்லை. பழங்காலத்தில் கோவில்களுடன் இணைந்த பெண்களின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கலாம் என்பதற்காக அன்னி பெசன்ட்டின் கருத்துகளையும் அவர் தனது உரையில் மேற்கோள் காட்டினார். ஆனால் தனது காலத்தில் நடைமுறையில் இருந்த அர்ப்பணிப்பு முறை பெண்களை எந்த நிலைக்குத் தள்ளுகிறது என்பதுதான் சட்டம் பார்க்க வேண்டிய விஷயம் என்று வாதிட்டார்.
1927 நவம்பர் 5-ஆம் தேதியும் விவாதம் தொடர்ந்தது. வயது வரம்பு விதிப்பதாலோ, ஏற்கெனவே இருந்த இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளாலோ மட்டும் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது; கோவில், மதம், மரபு ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் நடைபெறும் அர்ப்பணிப்பையே சட்டம் தடுக்க வேண்டும் என்று முத்துலட்சுமி வலியுறுத்தினார்.
விவாதங்களுக்குப் பிறகு முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்த தீர்மானம் ஒரு முக்கியமான திருத்தத்துடன் சென்னை மாகாண சட்ட மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் முதலில் கொண்டு வந்த தீர்மானத்தில், “ஒழுக்கக்கேடான நோக்கங்களுக்காக இளம் பெண்களையும் சிறுமிகளையும் கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் நடைமுறையைத் தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பி. அஞ்சநேயுலு ஒரு திருத்தத்தை முன்வைத்தார். “ஒழுக்கக்கேடான நோக்கங்களுக்காக” என்று நேரடியாகக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, “பொதுவாக அவர்களை ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்கு ஆளாக்கிவரும்” அர்ப்பணிப்பு நடைமுறையைத் தடுக்க வேண்டும் என்று மாற்றினார். அந்தத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முத்துலட்சுமி ரெட்டியின் தீர்மானமும் சட்ட மேலவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இதுவே தேவதாசி முறையை ஒழித்த சட்டம் அல்ல. சிறுமிகளையும் இளம் பெண்களையும் கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் நடைமுறையைத் தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்த தீர்மானம்தான் அது.

சத்தியமூர்த்தி ஐயர் உட்பட தேவதாசி ஆதரவாளர்களுக்கு ‘குடி அரசு’ பதிலடி
அன்றைய சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கடுமையான விவாதங்கள் நடந்துகொண்டிருந்ததை தந்தை பெரியாரின் ‘குடி அரசு’ ஏட்டின் பதிவுகளிலும் பார்க்க முடிகிறது.
1927 நவம்பர் 6-ஆம் தேதி ‘குடி அரசு’ ஏட்டில், “திராவிடன்” என்ற பெயரில் “தாசிகளும் சத்தியமூர்த்திகளும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது.
தேவதாசி முறையை மதத்தின் பெயரால் நியாயப்படுத்துவோரைக் கடுமையாக விமர்சித்து,
“மடங்களைச் சீர்திருத்த வேண்டுமென்றால் அது கூடாது, விபசாரத்தை ஒழித்து நாட்டை மேம்பாடுறச் செய்ய வேண்டுமென்றால் அதுவும் கூடாது, எல்லாம் மதசம்பந்தமுடையன என்று ஆபாசங்களின் பேரால் வயிறு வளர்த்துவரும் சத்தியமூர்த்தி கூட்டத்தார் கூறுவார்களாயின், நாம் இப்பார்ப்பன மதத்தை அடியோடு கொன்று, நம் நாட்டைச் சீர்படுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
விபசாரம் மதசம்பந்தமுடையதென்றால், குடிப்பது, திருடுவது, கொலை செய்வது கூட மதசம்பந்தமுடையதென்றுதான் நம் நாட்டுப் புராணங்களும் வேதங்களும் கூறுகின்றன. நம் நாட்டில் மதசம்பந்தமில்லாதது என்ன இருக்கின்றது?” என்று எழுதப்பட்டிருந்தது.
இதே 1927 நவம்பர் 6 குடி அரசு இதழில் இடம்பெற்ற “ஊர்வம்பு” பகுதியில், திருச்சிராப்பள்ளியில் செயல்பட்ட இந்திய சங்கீத கிளப் நிறைவேற்றிய தீர்மானமும் விமர்சிக்கப்பட்டிருந்தது.
“நடன மாதர்கள் நடனமாடுவது அசுவமேத யாகத்தின் ஒரு பகுதி; இந்து சங்கீதம் பாவம், ராகம், தாளம் ஆகியவற்றை உள்ளடக்கியது; ஆகமங்களில் பத்து உபசாரங்களில் ஒன்றாக நாட்டியம் குறிப்பிடப்பட்டுள்ளது; குறவஞ்சிக் கூத்து வரலாற்றுப்பூர்வமானது” ஆகிய காரணங்களை முன்வைத்து, கோவில் ஆராதனை முறையிலிருந்து நாட்டியத்தை நீக்கக்கூடாது என்று அந்தச் சங்கீத கிளப் தீர்மானித்ததாக குடி அரசு பதிவு செய்தது.
அதற்குப் பதிலடியாக குடி அரசு எழுதிய வரிகள்தான் மிகக் கூர்மையானவை:
“நல்லது, காரணங்களுடன் நாம் சண்டை போட இப்போது தயாராயில்லை. ஒன்று மட்டுமே கூறுகிறோம். சங்கீதத்திலும், மதத்திலும் அவ்வளவு தீவிர அபிமானமுள்ளவர்கள் பிறரைவிட்டு ஆழம் பார்க்க வேண்டுவதில்லை.
தங்கள் தங்கள் மனைவிமார்களுக்கு ராக தாளங்களுடன் நாட்டியம் பயில்வித்துக் கோயில்களில் பக்தி பரவசத்துடன் நடனமாடச் செய்து ஆனந்திக்கலாம்.
இதற்குச் சம்மதியாதவர்கள் கோயில்களில் நாட்டியம் நடக்கவேண்டுமென்று சொன்னால் அவர்களுடைய பக்தியிலும், சங்கீதாபிமானத்திலும் நமக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை.”
அதாவது, கோவிலில் இந்த நாட்டியம் தொடர வேண்டும்; அது மதத்தின் ஒரு பகுதி என்று வாதிடுபவர்கள், பிற சமூகத்துப் பெண்கள் அதைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதற்குப் பதிலாக தங்கள் மனைவிமார்களையே அதற்காக அனுப்பத் தயாரா? என்ற கேள்வியை குடி அரசு எழுப்பியது.
அதே கூட்டத்தில் ஒரு பெண்,
“நாங்கள் விபசாரிகள் அல்லோம். நாங்கள் தேவரடியார்கள். ஆண்டவனுக்குத் தொண்டு செய்து காலங்கழிக்கிறோம்”
என்று கூறியதாகவும் குடி அரசு பதிவு செய்தது.
அதற்கு,
“இத்தகைய தேவதாசிகள் இல்லவே இல்லை என்று நாம் சொல்லவில்லை. ஆனால் மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்த எல்லாரும் அத்தகையவர்கள் அல்லவென்று தோன்றுகிறது. ஏனெனில் பலர் ‘எங்கள் பெண்களுக்குப் பொட்டுக்கட்டியே தீரவேண்டும்’ என்று வாதிட்டிருக்கின்றனர்”
என்று பதிலளித்தது.
இதன் தொடர்ச்சியாக பொட்டுக்கட்டுதல் மதம் சார்ந்த நடைமுறை என்ற வாதமும் எழுந்தது. அப்போது சத்தியமூர்த்தி ஐயர் பேசியதாக குடி அரசு பதிவு செய்த வரிகளும் முக்கியமானவை:
“இன்றைய தினம் பொட்டுக்கட்டுதல் கூடாதென்கிறார்கள். நாளைக்குக் குருக்கள்மாரை நீக்கிவிட வேண்டுமென்று சொல்லலாம்?”
இதற்கும் குடி அரசு தனது பாணியிலேயே பதிலடி கொடுத்தது:
“தீண்டாமையும், பாலிய வைதவ்யமே ஹிந்து மதம் என்று கும்பகோணம் வைதீகர்கள் சொன்னார்கள். இப்போது பொட்டுக்கட்டுதல்தான் ஹிந்து மதம் என்று சென்னையில் சிலர் சொல்கிறார்கள்.
மதுபானம் மத சம்பந்தமானதென்றும், அதில் யாரும் தலையிடக்கூடாதென்றும் குடிகாரர்கள் கிளர்ச்சி செய்யக் காலம் வந்துவிட்டதென்று கருதுகிறோம். சென்னையிலுள்ள ஐரோப்பிய மது வியாபாரிகள் கூடிய விரைவில் குடிகாரர்கள் கூட்டமொன்றைக் கூட்டுவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
அவர்களுக்கும் போதிய காரணங்கள் இருக்கின்றன. வேதங்களில் சொல்லப்படும் சோமபானத்தை அவர்கள் எடுத்துக்காட்டலாம். அத்துடன் தற்காலத்தில் காளியம்மன், காட்டேரி தெய்வங்களுக்குக் கள் நைவேதனம் செய்யப்படுவதால், மதுவிலக்குச் செய்தல் மதத்தில் தலையிடுவதாகும் என்று வற்புறுத்திச் சொல்லலாம்.அந்தோ! மதமே! உன் பெயரால் எத்தனை எத்தனை பாதகங்கள் செய்யப்படுகின்றன?”
இப்படி குடி அரசு ஏட்டில் எழுதப்பட்டிருந்தது. இது ஒரு பதிவு மட்டுமே. தேவதாசி முறையைச் சுற்றி அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தீவிரமான சமூக, மத, அரசியல் விவாதம் நடந்தது என்பதைக் காட்டும் ஆவணங்களில் இதுவும் ஒன்று.
தேவதாசிகளின் நிலத்தையும் தொட்ட போராட்டம்
இதோடு முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நிற்கவில்லை. தேவதாசிகளின் கோவில் சேவையுடன் நிலம், இனாம், வருவாய் உரிமைகள் போன்ற பொருளாதாரக் கட்டமைப்புகளும் பின்னிப் பிணைந்திருந்தன. எனவே அந்தக் கட்டமைப்பையும் மாற்றாமல் அர்ப்பணிப்பு முறையை ஒழிக்க முடியாது என்று அவர் கருதினார்.

1928 செப்டம்பர் 5-ஆம் தேதி Madras Hindu Religious Endowments Act, 1926-ஐத் திருத்துவதற்கான மசோதாவை சட்ட மேலவையில் அறிமுகப்படுத்த அனுமதி கோரினார். அனுமதி கிடைத்து மசோதா அறிமுகமானது. அந்த மசோதாவின் முக்கியமான கட்டம் 1929 பிப்ரவரி 1-ஆம் தேதி வந்தது.
அன்று சட்டசபையில் பேசிய முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறையை மதத்தின் பெயரால் பாதுகாப்பதையே நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கினார்.
தேவதாசிகளாக வளர்க்கப்படும் பெண்கள் “ஆரோக்கியமற்ற மதக் கருத்துகளின் கீழ் வளர்க்கப்படுகிறார்கள்” என்றும், விபச்சாரமே தங்களது சாதிக்குரிய கடமை, தர்மம் என்று அவர்களுக்குக் கற்பிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் நிற்கவில்லை முத்துலட்சுமி ரெட்டி. “Dedication has become identical with an evil profession” — அர்ப்பணிப்பு என்பது ஒரு தீய தொழிலுடன் ஒன்றிப்போய்விட்டது என்று கூறிய அவர், சிறு குழந்தைகளை வாங்குவது, தத்தெடுப்பது, பின்னர் அவர்களை ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்குப் பயிற்றுவிப்பது ஆகியவற்றையும் சட்டசபையில் பதிவு செய்தார்.
“மதம், மரபு, வழக்கம் என்ற பெயரில் நடைபெறும் இந்த அநீதியை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்பதுதான் அவரது வாதத்தின் மையம்.
அதற்காக இன்னும் ஒரு படி மேலே சென்றார் முத்துலட்சுமி.
தேவதாசிகளுக்கு கோவிலுக்குள் சென்று மற்ற இந்துக்களைப் போல வழிபடும் உரிமை இருக்கட்டும். ஆனால் தேவதாசி என்ற முறையில் கோவில்களில் பாடுவதும் ஆடுவதும் தொடரக் கூடாது என்று அவர் ஒரு திருத்தத்தை முன்வைத்தார்.

சத்தியமூர்த்தி ஐயர் எதிர்த்தது என்ன?
முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் இந்தத் திருத்தத்திற்கு சத்தியமூர்த்தி ஐயர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
தனது பேச்சின் தொடக்கத்திலேயே, இப்படிப்பட்ட விவாதத்தில் குறுக்கிடும்போது தேவதாசி முறையைத் தொடர்ந்து ஆதரிப்பவர் என்று தன்னைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும் என்றார். இருந்தாலும் முத்துலட்சுமி ரெட்டி கொண்டுவந்த திருத்தம் மிகவும் தீவிரமானது; பலரது சொத்து மற்றும் தனிப்பட்ட உரிமைகளைப் பாதிக்கக்கூடியது என்பதால் எதிர்ப்பதாகக் கூறினார்.
முத்துலட்சுமியின் திருத்தத்தில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாகவும் சத்தியமூர்த்தி வாதிட்டார். ஒரு குறிப்பிட்ட கோவிலுடன் இணைக்கப்பட்ட தேவதாசி அந்தக் கோவிலில் சேவை செய்ய முடியாது; ஆனால் வேறொரு கோவிலில் சேவை செய்வதை அந்தத் திருத்தம் தடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
அடுத்து மத உரிமை தொடர்பான வாதத்தையும் முன்வைத்தார்.
தேவதாசிகள் கோவிலில் சேவை செய்யக்கூடாது என்று சட்டமன்றம் முடிவு செய்யுமானால், நாளை பிராமணர்கள் அர்ச்சகர்களாக இருக்கக்கூடாது என்றும் சட்டமன்றம் சொல்லுமா என்ற கேள்வியை அவர் எழுப்பினார். மக்களின் மத நம்பிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு விஷயத்தில், பொதுமக்கள் முழுமையாக விவாதிப்பதற்கான வாய்ப்பைக் கொடுக்காமல் சட்டமன்றம் முடிவு செய்யக்கூடாது என்பதே அவரது வாதமாக இருந்தது.
மேலும், தண்டனை விதிகள் இல்லாமல் இப்படிப்பட்ட தடை கொண்டு வருவது நடைமுறையில் பயனளிக்காது என்றும் சத்தியமூர்த்தி கூறினார்.
எனவே இந்தத் திருத்தத்தை இப்போது கொண்டுவராமல், தனி மசோதாவாக பின்னர் கொண்டுவருமாறு முத்துலட்சுமியிடம் கேட்டுக்கொண்டார்.
அதற்கு முத்துலட்சுமி ரெட்டி,
“I will abide by the opinion of the House and bring in another Bill. I will now withdraw this amendment.”
என்று கூறினார்.
அதாவது,
“அவையின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக தனியாக இன்னொரு மசோதாவைக் கொண்டு வருகிறேன். இப்போது இந்தத் திருத்தத்தைத் திரும்பப் பெறுகிறேன்”
என்று கூறி அந்தத் திருத்தத்தைத் திரும்பப் பெற்றார்.
இங்கே ஒரு விஷயம் முக்கியம். சத்தியமூர்த்தி ஐயரின் எதிர்ப்புக்குப் பிறகு முத்துலட்சுமி ரெட்டி இந்தக் குறிப்பிட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற்றார். ஆனால் அதோடு அவரது தேவதாசி ஒழிப்புப் போராட்டம் முடிந்துவிடவில்லை.

போராட்டம் தொடர்ந்தது
ஒரு திருத்தத்தைத் திரும்பப் பெற்றதால் முத்துலட்சுமியின் போராட்டம் முடிந்துவிடவில்லை. சிறுமிகளை கோவில்களுக்கு அர்ப்பணிப்பதைத் தடுக்க வேண்டும்; தேவதாசி என்ற பெயரில் பெண்களின் வாழ்க்கையை மதம் அல்லது மரபு தீர்மானிக்கக்கூடாது என்பதில் அவர் தொடர்ந்து உறுதியாக இருந்தார்.
இந்த நீண்ட போராட்டத்தின் பின்னணியில்தான் இறுதியில் Madras Devadasis (Prevention of Dedication) Act, 1947 உருவானது.
அந்தச் சட்டத்தின் முன்னுரையே ஒரு முக்கியமான உண்மையைப் பதிவு செய்தது: பெண்களை தேவதாசிகளாக அர்ப்பணிக்கும் நடைமுறை இன்னும் தொடர்கிறது; அவ்வாறு அர்ப்பணிக்கப்படும் பெண்களில் பலர் விபச்சாரத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்; எனவே அந்த நடைமுறைக்கு முடிவு கட்டுவது அவசியம் என்று சட்டமே கூறியது.
சட்டம் ‘பொட்டுக்கட்டுதல்’, ‘கஜ்ஜே பூஜை’, ‘முத்ரி’ உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நடைபெற்ற அர்ப்பணிப்புகளையும் தனது வரம்புக்குள் கொண்டு வந்தது. தேவதாசியாக ஒரு பெண்ணை அர்ப்பணிப்பது சட்டவிரோதம்; அத்தகைய அர்ப்பணிப்பு செல்லாது என்றும் அறிவித்தது. சட்டத்தை மீறுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.500 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டது. இப்படித்தான் தேவதாசி அர்ப்பணிப்பு முறைக்கு சட்டரீதியாகத் தடை விதிக்கப்பட்டது.
முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பெண்கள் நலப் பணி வேறு தளங்களிலும் தொடர்ந்தது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக 1930-ல் அவ்வை இல்லம் உருவானது. பின்னர் புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் முன்னின்று உருவாக்கிய அடையாறு Cancer Institute 1954-ல் தொடங்கப்பட்டது. 1956-ல் அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. 1968 ஜூலை 22-ஆம் தேதி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மறைந்தார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரைப் போலவே, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பெயரையும் தமிழக அரசின் முக்கியமான பெண்கள் நலத் திட்டத்துடன் இணைத்தவர் கலைஞர்.
1989-ல் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவும் திட்டத்துக்கு ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டம்’ என்று பெயரிட்டு செயல்படுத்தியது. 1989 மே 31-ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, ஜூன் 3 முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.200 மகப்பேறு உதவி வழங்கப்பட்டது.
பின்னர் காலப்போக்கில் உதவித்தொகை பல கட்டங்களாக உயர்த்தப்பட்டது. இன்றும் தமிழ்நாடு அரசின் மகப்பேறு நலத் திட்டமாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயர் தொடர்கிறது. தமிழ்நாடு அரசின் தற்போதைய PICME தளத்திலும் இது “Dr Muthulakshmi Reddy Maternity Benefit Scheme” என்ற பெயரிலேயே செயல்படுகிறது.
நூறாண்டுகளுக்குப் பிறகும் தொடரும் கேள்வி
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறைக்கு எதிராக மக்களிடம் சென்று போராடினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அதே பிரச்சினையை சட்டசபைக்குள் கொண்டு சென்று போராடினார்.
ஒருவர் அந்தச் சமூகத்தின் வாழ்க்கையை மிக அருகிலிருந்து பார்த்தவர். இன்னொருவர் தேவதாசி மரபைச் சேர்ந்த தாயின் மகளாகப் பிறந்து, மருத்துவராகவும் சட்ட மேலவை உறுப்பினராகவும் உயர்ந்து, அதே நடைமுறைக்கு எதிராக சட்டசபைக்குள் குரல் கொடுத்தவர்.
நூறாண்டுகளுக்குப் பிறகு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது சரியா, தவறா என்ற விவாதம் மீண்டும் எழலாம். தேவதாசிகள் வளர்த்த இசை, நாட்டியம், அவர்களது கலைப் பங்களிப்பு, அவர்களில் சிலர் பெற்றிருந்த செல்வாக்கு ஆகியவை பற்றியும் வரலாறு பேசலாம்.
ஆனால் அந்த வரலாற்றைப் பேசும்போது, தேவதாசி சமூகத்திலிருந்தே அந்த முறைக்கு எதிராக எழுந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் குரலையும், சட்டசபைக்குள் அதை எதிர்த்துப் போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் குரலையும் தவிர்த்துவிட்டு அந்த வரலாற்றை முழுமையாகப் பேச முடியுமா?
ஒரு பெண் எந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை மதமா தீர்மானிக்க வேண்டும்? மரபா தீர்மானிக்க வேண்டும்? சமூகமா தீர்மானிக்க வேண்டும்? அல்லது அந்தப் பெண்ணே தீர்மானிக்க வேண்டுமா?
நூறாண்டுகளுக்கு முன்பு மூவலூர் இராமாமிர்தமும் முத்துலட்சுமி ரெட்டியும் தங்கள் போராட்டங்களின் வழியே எழுப்பிய அந்தக் கேள்விதான், இன்று மீண்டும் நடைபெறும் தேவதாசி விவாதத்தின் மையத்திலும் வந்து நிற்கிறது.
