சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணிக்குத் தொடர்புடைய இடங்களில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி, சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, இந்த விவகாரம் 2025-ஆம் ஆண்டு அக்டோபர்6ம் தேதி தொடங்கியது. சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் ஆர்வலர் ஒருவர், பென்டிரைவ் ஒன்றை காவல்துறையிடம் ஒப்படைத்தார். அதில் முதியவர் ஒருவர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகள் இருந்த நிலையில் அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் அக்டோபர் 7ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆரம்ப விசாரணையில் சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், அந்த வீடியோ 2019-ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, வழக்கை முடித்து வைக்கும் அறிக்கை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 2026 ஆகஸ்ட் 19-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, மேல்விசாரணை நடத்த அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. இதைத்தொடர்ந்து 2026 ஆகஸ்ட் 29-ஆம் தேதி காவல்துறையினர் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய கணேசன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே புகார் அளிக்கப்பட்டதாக அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்தச் சூழலில்தான் வீரமணிக்கு சொந்தமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் அலுவலகம் மற்றும் முட்டுக்காடு பகுதியில் உள்ள வீடு ஆகிய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
