மருந்து விலைகளுக்குப் பின்னால் இவ்வளவு பெரிய கொள்ளையா? உச்ச நீதிமன்றத்தில் அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்… நீதிபதிகள் கொந்தளிப்பு!

Published On:

| By Mathi

Drug Price-Supreme Court

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கும் விலைக்கும், அந்த மருந்துகளில் அச்சிடப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கும் (MRP) இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

மருந்துகளின் விலை கட்டுப்பாடு தொடர்பாக கிஷன் சந்த் ஜெயின் மற்றும் டாக்டர் சஞ்சய் குல்ஷ்ரேஷ்த்ரா தாக்கல் செய்த பொது நலன் மனுக்கள், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு முன்பு நேற்று செப்டம்பர் 22-ம் தேதி விசாரணைக்கு வந்தன.

ADVERTISEMENT

பணம் பறிப்பதுதான்

இந்த விசாரணையின்போது மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் Price to Retailer (PTR) எனப்படும் சில்லறை விற்பனையாளருக்கான விலைக்கும் MRP-க்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அப்போது நீதிபதி சந்தீப் மேத்தா, “இது பணம் பறிப்பது இல்லையென்றால் வேறு என்ன? மருந்துகளை வாங்குவதற்காக மக்கள் தங்கள் வீடுகளை விற்கிறார்கள்; நகைகளை விற்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

புற்றுநோய்க்கான அத்தியாவசிய மருந்துகளில் ஒன்றின் MRP ரூ.27,000 ஆக இருக்கும்போது, அதன் சில்லறை விற்பனையாளருக்கான விலை வெறும் ரூ.2,700 மட்டுமே என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்டு கடும் கோபமடைந்த நீதிபதி சந்தீப் மேத்தா, ரூ.2,700-க்கு சில்லறை விற்பனையாளருக்கு மருந்தை தயாரிக்கும் நிறுவனம், அதன் மீது ரூ.27,000 MRP-ஐ எப்படி அச்சிட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

இது 10 மடங்கு விலை வித்தியாசம் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனை “பட்டப்பகல் கொள்ளை” என்றும் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகள் முற்றிலும் அமைதியாக இருப்பது மிகவும் ஆச்சரியமளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இவ்வளவு விலை வித்தியாசம் ஏன்?

இதைத்தொடர்ந்து உச்சநீதிபதிகள் நாட்டின் மருந்துகளுக்கான MRP நிர்ணய முறையையே கேள்விக்குள்ளாக்கினர். மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒரு மருந்தை அதன் MRP-யில் 10 சதவீத விலைக்கே சில்லறை விற்பனையாளருக்கு வழங்கும் போது அந்த மருந்துக்கு இவ்வளவு அதிகமான MRP ஏன் இருக்க வேண்டும்? MRP-க்கும் உற்பத்தியாளர் சில்லறை விற்பனையாளருக்கு விற்கும் விலைக்கும் இடையே இவ்வளவு பெரிய வித்தியாசத்தை ஏன் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி சந்தீப் மேத்தா கேட்டார்.

மருந்துகளின் ஆரம்ப விலைக்கு கட்டுப்பாடு இல்லை?

நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான மனுதாரர் கிஷன் சந்த் ஜெயின், இந்தியாவில் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த Drugs (Prices Control) Order, 2013 (DPCO) என்ற விதிமுறை அமலில் உள்ளது. இதன் Schedule I என்பது விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல். இந்தப் பட்டியலில் இடம்பெறும் மருந்துகளுக்கு, அவற்றை அதிகபட்சமாக எந்த விலைக்கு விற்கலாம் என அரசு அனுமதித்துள்ளது.

ஒரு நிறுவனம் இன்று புதிய மருந்தை அறிமுகப்படுத்தினால் அதன் ஆரம்ப விலையை ஒரு ரூபாயாகவும் நிர்ணயிக்கலாம்; ரூ.1,000 ஆகவும் நிர்ணயிக்கலாம். அந்த ஆரம்ப விலையை நிர்ணயிப்பதற்கான கட்டுப்பாட்டு முறை இல்லை. ஒருமுறை விலை நிர்ணயிக்கப்பட்ட பிறகு, அதை 10 சதவீதத்துக்கு மேல் உயர்த்துவதற்குத்தான் கட்டுப்பாடு உள்ளது என்றார்.

82 சதவீத மருந்துகள் Non-Scheduled

மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருந்துகள் அரசின் நேரடி விலைக் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை என்று ஜெயின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் முன்வைத்த தகவலின்படி, சந்தையில் உள்ள மருந்துகளில் சுமார் 82 சதவீதம் Non-Scheduled வகையைச் சேர்ந்தவை. அதாவது, இந்த மருந்துகளுக்கு அரசு நேரடியாக அதிகபட்ச விலையை நிர்ணயிப்பதில்லை.

இந்திய சந்தையில் சுமார் 60,000 மருந்து பிராண்டுகள் உள்ள நிலையில், அவற்றில் 5,000-க்கும் குறைவான பிராண்டுகளுக்கே விலை நிர்ணயிக்கும் முறை பொருந்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மருந்துகளின் மொத்த விற்பனை மதிப்பை எடுத்துக்கொண்டாலும் இதே நிலைதான். மொத்த மதிப்பில் சுமார் 83 சதவீதம் விலைக் கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள Non-Scheduled மருந்துகள்; 17 சதவீதம் மட்டுமே Scheduled மருந்துகள் என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

இதனால், விலைக் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கும் மருந்துகளுக்கு நிறுவனங்கள் ஆரம்பத்திலேயே அதிக விலையை நிர்ணயிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அதிக லாப விகிதம் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஜெயின் வாதிட்டார்.

ரூ.73 MRP மருந்து சில்லறை விற்பனையாளருக்கு வெறும் ரூ.22.75-க்கு

MRP-க்கும் சில்லறை விற்பனையாளருக்கான விலைக்கும் இடையிலான வித்தியாசத்தைக் காட்டும் ஆவணங்களையும் ஜெயின் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஒரு மருந்தின் MRP ரூ.73. ஆனால் அதன் சில்லறை விற்பனையாளருக்கான விலை ரூ.22.75.

மற்றொரு மருந்தின் MRP ரூ.61. அதன் சில்லறை விற்பனையாளருக்கான விலை ரூ.9.65 மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவசரத்தில் இருக்கும் நோயாளி விலைப்பட்டியலை தேடுவாரா?

இந்த விதிகளின்படி, மருந்து நிறுவனங்கள் தங்களது மருந்துகளின் விலைப்பட்டியலை விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்தகங்களுக்கு வழங்க வேண்டும். மருந்தகங்கள் அந்த விலைப்பட்டியலை பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைத்திருக்க வேண்டும் என்று ஜெயின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்தீப் மேத்தா, அவசரமாக மருந்து தேவைப்படும் ஒரு நோயாளிக்கு இந்த விலைப்பட்டியல் எந்த அளவுக்குப் பயன்படும் என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி விக்ரம் நாத்தும், அவசரமாக மருந்து வாங்க வரும் நோயாளியின் உறவினர், மருந்தின் விலைப்பட்டியலைப் பார்த்து ஒப்பிட்டுக் கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதி சந்தீப் மேத்தா, அவசரமாக மருந்து தேவைப்படும் நோயாளிக்கு இது எந்த அளவுக்கு உதவும் என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி விக்ரம் நாத்தும், அவசரமாக மருந்து வாங்கச் செல்லும் நோயாளியின் உறவினர் விலைப்பட்டியலை வாங்கி MRP-யுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்டார்.

விலை விவரங்கள் வெளிப்படையாக இருந்தால்தான் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது அழுத்தம் ஏற்படும் என்று ஜெயின் தெரிவித்தார். அதேநேரத்தில் இவ்வளவு பெரிய விலை வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான கேள்வி என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

தேசிய மருந்து விலை நிர்ணயம் மீது குற்றச்சாட்டு

மேலும், மருந்துகளின் விலையைக் கண்காணிக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் (NPPA), மருந்துகள் மொத்த விநியோகஸ்தர்களுக்கும் மருந்தகங்களுக்கும் என்ன விலையில் வழங்கப்படுகின்றன என்ற விவரங்கள் உள்ளன. ஆனால், அந்த விலை விவரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் NPPA தனது இணையதளத்தில் வெளியிடவில்லை என்றும் ஜெயின் குற்றம்சாட்டினார்.

மருந்துகளை விலைக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவை, இல்லாதவை எனப் பிரிப்பதற்கான சட்ட அடிப்படையையும் ஜெயின் கேள்வி எழுப்பினார்.

2007-ஆம் ஆண்டு செய்யப்பட்ட சட்டத் திருத்தத்துக்குப் பிறகு மருந்துகள் அத்தியாவசியப் பொருட்களாகக் கருதப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், அப்படியிருக்கும்போது சில மருந்துகளை மட்டும் விலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, மற்ற மருந்துகளை அதற்கு வெளியே வைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அந்த நோயைக் குணப்படுத்தத் தேவையான மருந்து அத்தியாவசியமானதுதான். அந்த நோய் அதிகமான மக்களைப் பாதிக்கிறதா அல்லது குறைவானவர்களைப் பாதிக்கிறதா என்பதை வைத்து அந்த மருந்து அத்தியாவசியமானதா என்பதைத் தீர்மானிக்கக் கூடாது என்றும் அவர் வாதிட்டார்.

ரூ.240 மருந்து… Aspirin சேர்த்தால் ரூ.70

Scheduled மற்றும் non-scheduled வகைப்படுத்தலால் உருவாகும் மற்றொரு முரண்பாட்டை நீதிபதி சந்தீப் மேத்தா சுட்டிக்காட்டினார்.

இதற்கு உதாரணமாக, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் Rasuvas என்ற மருந்தை நீதிபதி சந்தீப் மேத்தா சுட்டிக்காட்டினார்.

இந்த மருந்து அரசின் விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் இல்லாததால், ஒரு அட்டையின் விலை சுமார் ரூ.240 ஆக உள்ளது. ஆனால், இதே மருந்துடன் Aspirin சேர்த்து தயாரிக்கப்படும் கூட்டு மருந்து அரசின் விலைக் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், அதன் விலை சுமார் ரூ.70 மட்டுமே உள்ளது.

“பொதுவாக இரண்டு மருந்துகள் சேர்ந்தால் விலை அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அதற்கு நேர்மாறாக இருக்கிறது” என்று நீதிபதி சந்தீப் மேத்தா இந்த விலை முரண்பாட்டைச் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ உபகரணங்களின் விலைக்கும் கட்டுப்பாடு

மருந்துகளைப் போலவே மருத்துவ உபகரணங்களின் விலையையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கிஷன் சந்த் ஜெயின் வாதிட்டார்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும், 2020 ஏப்ரல் 1 முதல் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் ‘மருந்துகள்’ என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ உபகரணங்களை வாங்கும் விலைக்கும் நோயாளிகளுக்கு விற்கப்படும் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், எனவே அவற்றின் விலையையும் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறை தேவை என்றும் அவர் வாதிட்டார்.

மேலும், அரசின் விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் உள்ள மருந்துகளுக்கு அதிகபட்ச விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் ஜெயின் விளக்கினார்.

சந்தையில் குறைந்தபட்சம் ஒரு சதவீத பங்கைக் கொண்ட நிறுவனங்கள் விற்கும் அந்த மருந்தின் விலைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன. அவற்றின் சராசரி விலை கணக்கிடப்பட்டு, அதனுடன் சில்லறை விற்பனையாளருக்கான 16 சதவீத லாப வரம்பு சேர்த்து அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ரூ.4,196 விலை அச்சிடப்பட்ட மருந்து ரூ.980-க்கு

இதைத்தொடர்ந்து மற்றொரு மனுதாரரான டாக்டர் சஞ்சய் குல்ஷ்ரேஷ்த்ரா தனது வாதங்களை முன்வைத்தார்.

மருந்து விலை கட்டுப்பாட்டு விதிகளின்படி, அசாதாரணமான சூழ்நிலைகளில் பொதுநலன் கருதி எந்த மருந்தின் விலையையும் அரசு நிர்ணயிக்க அதிகாரம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது மருந்துகளில் அச்சிடப்படும் அதிகபட்ச விலைக்கும், அவை உண்மையில் விற்கப்படும் விலைக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசத்தைக் காட்டும் பட்டியல் ஒன்றையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதில், அதிகபட்ச சில்லறை விலை ரூ.4,196 என அச்சிடப்பட்டிருந்த ஒரு மருந்து ரூ.980-க்கே கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், TG-BEX என்ற ஆன்டிபயாடிக் மருந்தின் அச்சிடப்பட்ட விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையேயான வித்தியாசம் 1,500 சதவீதம் வரை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆன்டிபயாடிக் மருந்துகளை விற்பதன் மூலம் அதிக லாபம் கிடைத்தால், அவற்றை அதிகமாக விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உருவாகலாம். ஏற்கெனவே ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கிருமிகள் கட்டுப்படாமல் போகும் பிரச்சினையை நாடு எதிர்கொண்டு வரும் நிலையில், இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் வாதிட்டார். எனவே ஆன்டிபயாடிக் மருந்துகளில் அதிக லாபம் கிடைக்கும் சூழல் கவலைக்குரியது என்றும் அவர் வாதிட்டார்.

கார்ப்பரேட் மருத்துவமனைகளில் என்ன நடக்கிறது?

சாதாரண மருந்தகங்களுக்கும் பெரிய தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் டாக்டர் குல்ஷ்ரேஷ்த்ரா நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

சாதாரண மருந்தகங்கள் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்து, அச்சிடப்பட்ட அதிகபட்ச விலையைவிடக் குறைவாக மருந்துகளை விற்கலாம்.

ஆனால் சில பெரிய தனியார் மருத்துவமனைகளில், நோயாளிகள் அந்த மருத்துவமனைக்குள் உள்ள மருந்தகத்திலேயே மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், அங்கு மருந்தில் அச்சிடப்பட்ட முழு அதிகபட்ச விலையும் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக ஏழை நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், வெளியே சென்று குறைந்த விலையில் மருந்துகளை வாங்குவதற்கான வாய்ப்பு நடைமுறையில் இல்லாமல் போகலாம் என்றும் அவர் வாதிட்டார்.

ரூ.200 மருந்துக்கு ரூ.2,000…

இதைக் கேட்ட நீதிபதி சந்தீப் மேத்தா, அரசு நிதியில் செயல்படுத்தப்படும் மருத்துவத் திட்டங்களில் ஏற்படக்கூடிய மற்றொரு பிரச்சினையைச் சுட்டிக்காட்டினார். ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட அரசு மருத்துவத் திட்டங்கள் மூலம் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அத்தகைய சிகிச்சையில் ரூ.200-க்கு வழங்கப்பட வேண்டிய ஒரு மருந்து ரூ.2,000 எனக் கணக்கிடப்பட்டு மருத்துவமனைக்கு அந்தத் தொகை அரசால் திருப்பிச் செலுத்தப்பட்டால், இறுதியில் அந்தப் பணம் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் செல்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

அரசுதான் பணம் செலுத்துகிறது என்றாலும், அரசின் பணம் என்பது இறுதியில் வரி செலுத்தும் மக்களின் பணம்தான் என்று கூறிய நீதிபதி, இதை வெளிப்படையான மோசடி என்று கடுமையாக விமர்சித்தார்.

குறைந்த விலையில் கிடைக்கும் பொதுப்பெயர் மருந்துகளைப் பயன்படுத்துவதை மருத்துவர்கள் ஆதரிப்பதாக டாக்டர் குல்ஷ்ரேஷ்த்ரா தெரிவித்தார். அவை நோயாளிகளின் சிகிச்சைச் செலவைக் குறைக்க உதவும் என்றாலும், அவற்றின் தரம் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பான சந்தேகங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மருத்துவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துப் பெயரை எழுதாமல், மருந்தின் பொதுப்பெயரை மட்டும் மருந்துச் சீட்டில் எழுதினால், எந்த நிறுவனத்தின் மருந்தை நோயாளிக்கு வழங்குவது என்பதை மருந்தகத்தில் இருப்பவர் தீர்மானிக்கும் நிலை ஏற்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நோயாளியைப் பரிசோதிக்காத மருந்தக விற்பனையாளர், தனக்குக் கிடைக்கும் வணிக லாபத்தின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் மருந்தைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்றும் அவர் வாதிட்டார்.

எனவே பொதுப்பெயர் மருந்தா அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்தா என்பதைத் தேர்வு செய்யும் வாய்ப்பு நோயாளிக்கும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி சந்தீப் மேத்தா, மருத்துவர் பரிந்துரைத்த அதே மருந்துக் கலவையைக் கொண்ட குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்தை வேண்டுமென்றால், அதுபற்றி அறிந்த நோயாளி கேட்டு வாங்கிக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

தரமற்ற மற்றும் போலி மருந்துகள்

தரமற்ற மற்றும் போலியான மருந்துகள் குறித்த பிரச்சினையையும் டாக்டர் குல்ஷ்ரேஷ்த்ரா நீதிமன்றத்தில் எழுப்பினார். இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கோரினார்.

அதற்கு, குற்றங்களுக்கு எவ்வளவு தண்டனை விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசு என்ன சொன்னது?

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் மனுதாரர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்ற அணுகுமுறையுடன் மத்திய அரசு செயல்படவில்லை என்றும், தற்போது நடைமுறையில் உள்ள மருந்து விலை அமைப்பில் எந்தெந்த பகுதிகளை மேம்படுத்த முடியும் என்பதை அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறைந்த விலையில் மருந்துகளை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த மக்கள் மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள் தேவைப்படும் நோயாளிகள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பியது.

மருந்து நிறுவனங்கள் தரப்பு என்ன சொன்னது?

இந்திய மருந்து நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்வதில்லை என்றும், சில்லறை விற்பனையாளர்களுக்குத்தான் மிகப்பெரிய லாபம் கிடைப்பதாகவும் அவர் வாதிட்டார்.

அப்போது நீதிபதி சந்தீப் மேத்தா, “மருந்தின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தயாரிப்பு நிறுவனங்கள்தானே?” என்று அவர் கேட்டார்.

செப்டம்பர் 29-ல் மீண்டும் விசாரணை

இதையடுத்து, இந்திய மருந்து நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் மத்திய அரசு தரப்பின் விரிவான வாதங்களைக் கேட்பதற்காக வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share