8 ஆண்டுகளாக தகரக் கொட்டகை வாழ்க்கை.. உக்கடம் புதிய பேருந்து நிலையம் அமைக்க அப்புறப்படுத்தப்பட்ட மக்களின் மறுவாழ்வு எப்போது?

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை உக்கடம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், எட்டு ஆண்டுகளாகியும் நிரந்தர வீடுகள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது புல்லுக்காடு ஷெட், குப்பைமேடு பகுதியில் தகரத் தகடுகளால் அமைக்கப்பட்டுள்ள சிறிய தற்காலிகக் குடியிருப்புகளில் வசித்து வரும் தங்களுக்கு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உரிய வகையில் செய்து தரவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL – People’s Union for Civil Liberties) கோயம்புத்தூர் பிரிவு கள ஆய்வு மேற்கொண்டது. இதுகுறித்து வெளியாகி உள்ள அறிக்கையில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மறுவாழ்வு கேள்விக்குறியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

18 மாதங்களில் வீடு என்ற வாக்குறுதி

PUCL கள ஆய்வுக் குழுவின் உறுப்பினரும் சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவருமான அப்துல் அகத், கோவை நகரில் இடம் பெயர்ந்த மக்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் கூறுகையில், “PUCL குழு வி.எச். ரோடு, சிவானந்தா காலனி மற்றும் உக்கடம் குப்பைமேடு – புல்லுக்காடு பகுதி ஆகிய மூன்று இடங்களில் ஆய்வுளை மேற்கொண்டோம். அதில் கோவை மாநகரத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக இடம்பெயர்க்கப்பட்ட மக்கள், தற்காலிகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வீடுகள் கட்டித் தரப்படும் வரை காத்திருக்கும் மாநகராட்சி தொழிலாளர்கள் ஆகியோரின் நிலை குறித்து ஆய்வு செய்தோம்

உக்கடம் பகுதியில் வசித்த 450-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2018ஆம் ஆண்டு தற்போதைய புல்லுக்காடு பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். அப்போது 18 மாதங்களுக்குள் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால், எட்டு ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் நாள்தோளும் பெரும் போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.

தகரக் கொட்டகை வாழ்க்கை

தற்போதைய குடியிருப்புகள் தகரச் சுவர்கள் மற்றும் தகரக் கூரையால் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் கொட்டகைக்குள் கடும் வெப்பம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.” என்றார்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண் கூறுகையில், “வெயில் வந்தால் இங்கு இருக்க முடியவில்லை. தகரம் மிகவும் சூடாகிறது. வீடு கட்டித் தருவதாகச் சொன்னார்கள். பாதி பேருக்கு வீடு கிடைத்துள்ளது. இன்னும் பாதி பேருக்கு கிடைக்கவில்லை” என்றார்.

மற்றொரு பெண், “வீட்டை இடித்துவிட்டு எங்களை இந்தப் பக்கம் தள்ளிவிட்டார்கள். வெயிலில் வேகும் நிலையில் இங்கு வாழ்கிறோம்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

250 குடும்பங்களுக்கு ஆறு கழிப்பறைகள்

PUCL அறிக்கையில் கழிப்பறை குறித்த மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் 250 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் ஆறு பொது கழிப்பறைகள் மட்டுமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிப்பறை வசதி போதுமானதாக இல்லாததால், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ளும் அவலம் நிலவுகிறது.

ஒரு குடியிருப்பாளர், தங்களது சிறிய அறைக்குள்ளேயே உணவு சமைப்பது, சாப்பிடுவது மற்றும் குளிப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகத் தெரிவித்தார்.

“எங்களது வீடு சுமார் 10க்கு 10 அடி அளவுதான். பீரோ வைக்கக்கூட இடமில்லை. வீட்டுக்குள்ளேயே குளிக்கவும் வேண்டியுள்ளது. வேறு வழியில்லை” என அவர் கூறினார்.

குடிநீர் குறித்தும் புகார்

குடிநீர் விநியோகமும் முறையாக இல்லை . சிலர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நல்ல தண்ணீர் வருவதாகவும், உப்பு தண்ணீர் தொடர்ந்து கிடைப்பதாகவும் கூறுகின்றனர். சில குடியிருப்பாளர்கள் குடிநீர் விநியோகத்தில் நீண்ட இடைவெளி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

PUCL அறிக்கையில், 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் தண்ணீர் தொட்டிகள் முறையாகச் சுத்தம் செய்யப்படவில்லை என்ற மக்களின் புகாரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் தரம் மற்றும் கழிவுநீர் கலப்பது தொடர்பாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பு, பூச்சிகளால் அச்சம்

குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைகள் மற்றும் புதர்கள் காணப்படுவதால், இரவு நேரங்களில் பாம்புகள் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் வீடுகளுக்குள் வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

“எங்கள் வீட்டுக்குள்ளேயே பாம்பு வந்திருக்கிறது. நாகப்பாம்பும் வந்தது. இரவு நேரங்களில் அச்சமாக இருக்கிறது” என ஒரு பெண் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் நுழைவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளின் உடல்நிலை குறித்து கவலை

தகரக் கொட்டகைகளில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் கொசுக்கள் காரணமாக குழந்தைகளுக்கு தோல் பாதிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.

கள ஆய்வின்போது குழந்தைகளின் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்ததாகவும், குழந்தைகளின் உடல்நிலை குறித்து குடும்பங்கள் கவலை தெரிவித்ததாகவும் PUCL குழு கூறியுள்ளது.

அப்பகுதியில் பள்ளிகள் மற்றும் மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், குழந்தைகள் மற்றும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் குடும்பங்களுக்கு கூடுதல் சுமையாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

இந்த தற்காலிகக் குடியிருப்பில் வசித்து வந்தவர்களில் பலர் கடந்த ஆண்டுகளில் உயிரிழந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிலர் 50 முதல் 80 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறுகின்றனர். மற்றொரு குடியிருப்பாளர் ஏழு ஆண்டுகளில் சுமார் 100 பேர் உயிரிழந்ததாகக் கூறினார்.

“எங்கள் பழைய வீடுகளை இடித்துவிட்டு இங்கு அனுப்பினர்”

புல்லுக்காடு பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவர், தங்களது குடும்பம் நான்கு தலைமுறைகளாக உக்கடம் சி.எம்.சி காலனியில் வசித்து வந்ததாகக் கூறுகிறார்.

அவரது கூற்றுப்படி, பாலம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி தாங்கள் அங்கிருந்து வெளியேறி புல்லுக்காடு பகுதிக்கு வந்ததாகவும், 18 மாதங்களில் வீடு கட்டித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“இங்கு வந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் வீடு இல்லை. வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து கூறுகிறார்கள்” என மகேந்திரன் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, ஆரம்பத்தில் சுமார் 500 வீடுகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ஒரு பகுதி வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. தற்போது சுமார் 200 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சில குடும்பங்களுக்கு வீடுகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

“வாக்கு கேட்கும்போது மட்டும் வருகிறார்கள்”

மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து அரசியல் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தங்களிடம் தொடர்ந்து தொடர்பில் இல்லை என்றும் குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“ஓட்டு கேட்டு வருவார்கள். வெற்றி பெற்ற பிறகு எங்களை வந்து பார்க்கவில்லை” என ஒரு பெண் தெரிவித்தார்.

மற்றொரு குடியிருப்பாளர், தங்கள் பகுதி கவுன்சிலர் யார் என்பதுகூட தங்களுக்குத் தெரியவில்லை என்றும், தங்களது குறைகளை கேட்க அதிகாரிகள் முறையாக வரவில்லை என்றும் கூறினார்.

அதிகாரிகள் விளக்கம்

PUCL அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஒரு வீட்டுக்கு சுமார் ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பயனாளிகள் ரூ.1.5 லட்சம் பங்களிப்பு செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆரம்பத்தில் 400 சதுர அடியாக திட்டமிடப்பட்ட வீடுகள் தற்போது 300 சதுர அடியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்லுக்காடு பகுதியில் கட்டுமானப் பணிகள் நிதி கிடைக்கும் அளவுக்கு நடைபெற்று வருவதாகவும், பணிகள் நிறைவடைய இன்னும் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக PUCL அறிக்கை கூறுகிறது.

PUCL முன்வைக்கும் பரிந்துரைகள்

இந்த நிலைமைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என PUCL கோயம்புத்தூர் பிரிவு அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

  • எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர மறுவாழ்வு வீடுகளை விரைந்து வழங்க வேண்டும்.
  • அதுவரை தகரக் கொட்டகைகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான, வாழ தகுதியான தற்காலிகக் குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
  • சுத்தமான குடிநீர் மற்றும் போதுமான கழிப்பறைகளை வழங்க வேண்டும்.
  • குடியிருப்புப் பகுதிகளில் மின்விளக்குகள், எல்லைக் கதவுகள், CCTV கேமராக்கள் மற்றும் இரவு நேரக் காவல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  • மருத்துவ வசதி மற்றும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்.
  • குடியிருப்புக்கு அருகில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.
  • பள்ளி, மருத்துவமனை மற்றும் பிற அடிப்படை வசதிகளை எளிதில் அணுகக்கூடிய இடங்களில் மறுவாழ்வு வீடுகளை அமைக்க வேண்டும்.

“நில உரிமையை மீட்டுத் தர வேண்டும்”

PUCL குழுவின் கருத்துப்படி, வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்களை இடம்பெயரச் செய்வது மட்டும் போதுமானதல்ல; அவர்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய வகையில் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும்.

அப்துல் அகத்

“வசதியுள்ளவர்கள் வாடகை வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். வசதியில்லாதவர்கள் இன்றும் தகர ஷெட்டுகளில்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ள இடத்தில் புதிய வீடுகள் அமைத்துத் தர வேண்டும்” என அப்துல் அகத் தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த நிலைமைக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட தீர்வு தேவை என்பதே PUCL அறிக்கையின் முக்கியக் கருத்தாக உள்ளது.

தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கும் மக்களோ, தங்களது பழைய வீடுகளை இழந்ததற்குப் பிறகு புதிய வீடுகளுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருப்பதாகவும், இனியும் காலதாமதம் வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share