திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்ட ஒருவருக்கு கழிவறை குழாயில் வந்த நீரை வைத்து தூய்மைப்பணியாளர் சிகிச்சை அளித்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று இரவு வீட்டில் இருந்த எலி மருந்தைச் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள், அவரைப் பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு லோகேஷுக்கு மூக்கின் வழியாக டியூப் பொருத்தப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்குச் செலுத்தப்பட வேண்டிய சோடியம் குளோரைடு கரைசலுக்குப் பதிலாக, மருத்துவமனை கழிவறையில் உள்ள குழாயில் இருந்து ஜக்கில் தண்ணீர் பிடித்துக் குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றப்பட்டதாக நோயாளியும் அவருடன் வந்தவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைக்கண்ட லோகேஷின் நண்பர்கள், இச்சம்பவத்தைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். பின்னர் இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் உரிய விளக்கம் அளிக்காமல் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த லோகேஷ், தண்ணீர் நிரப்பப்பட்டதாகக் கூறப்படும் குளுக்கோஸ் பாட்டிலைக் கையில் எடுத்துக்கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், பணியில் இருந்தவர்கள் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து லோகேஷ் காவல்துறையினரை வரவழைத்துச் சம்பவம் குறித்துப் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தூய்மைப் பணியாளரிடம் கேட்டபோது, “செவிலியர்தான் தண்ணீர் ஊற்றச் சொன்னார். அதனால் தண்ணீர் ஊற்றினேன்” என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர் முனிரத்தினம், செவிலியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
