மனித உடலின் அடிப்படை மரபுத் தகவல்களைச் சுமந்து செல்லும் DNA-வில், இதுவரை விஞ்ஞானிகளின் கவனத்துக்கு வராத ஒரு வித்தியாசமான அமைப்பைக் கண்டுபிடிக்க Claude AI உதவியுள்ளது. சுமார் 950 Claude AI ஏஜென்ட்கள், 2 லட்சத்துக்கும் அதிகமான மரபணுத் தகவல்களை அலசி இந்த அமைப்பை அடையாளம் காண எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 21 மணி நேரம். இந்தப் புதிய அமைப்புக்கு ART (Array-Associated Reverse Transcriptases) என்று பெயரிடப்பட்டுள்ளது.
DNA-வை நமது உடலுக்கான ஒரு மிகப்பெரிய ‘வழிமுறைப் புத்தகம்’ என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட மரபணு மாற்றம் நோய்க்குக் காரணமாக இருந்தால், அந்த இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து, தேவையான திருத்தங்களைச் செய்வதுதான் மரபணுத் திருத்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை.
இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே வேகமாக வளர்ந்து வரும் நிலையில், Claude AI கண்டுபிடிக்க உதவிய ART என்ற புதிய மரபணு அமைப்பு ஏன் முக்கியமானது? வெறும் 21 மணி நேரத்தில் Claude அப்படி என்ன செய்தது? இந்தக் கண்டுபிடிப்பு எதிர்கால மருத்துவ ஆராய்ச்சிக்கு என்னென்ன புதிய வாய்ப்புகளைத் திறக்கலாம்? எளிமையாகப் பார்க்கலாம்.
Claude AI என்றால் என்ன?
நாம் கேள்வி கேட்டால் பதில் சொல்வது, கட்டுரைகளைப் படித்துச் சுருக்குவது, தகவல்களை ஆராய்வது, கணினி நிரல்கள் எழுதுவது போன்ற வேலைகளைச் செய்யும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்தான் Claude AI.
எப்படி OpenAI நிறுவனம் ChatGPT-ஐ உருவாக்கியிருக்கிறதோ, அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த Anthropic நிறுவனம் உருவாக்கிய AI தான் Claude.
Claude-ஐ நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் செயற்கை நுண்ணறிவாக மட்டும் பயன்படுத்துவதில்லை. லட்சக்கணக்கான தகவல்களை வேகமாகப் படித்து, ஒப்பிட்டு, அவற்றுக்குள் மனிதர்களின் கவனத்துக்கு வராத தொடர்புகளையும் வித்தியாசங்களையும் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிப் பணிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பணியைத்தான் இப்போது மரபணு ஆராய்ச்சியில் Claude செய்திருக்கிறது.
Claude-க்கு விஞ்ஞானிகள் என்ன வேலை கொடுத்தார்கள்?
ChatGPT-யிடம் நாம் எப்படி “ஒரு தகவலைத் தேடிக் கொடு” என்று கேட்கிறோமோ, அதேபோல Claude AI-க்கும் விஞ்ஞானிகள் ஒரு மிகப்பெரிய மரபணுத் தேடல் பணியைக் கொடுத்தார்கள்.
அதாவது உலகம் முழுவதும் சேகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான உயிரினங்களின் மரபணுத் தகவல்கள் கணினித் தரவுத்தளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த கணினித் தரவு தளங்கள் எங்கே இருக்கின்றன? இது ஒரு குறிப்பிட்ட ஆய்வகத்தில் இருக்கும் ஒரே கம்ப்யூட்டர் அல்ல. இணையத்தில் விஞ்ஞானிகள் பயன்படுத்தக்கூடிய பெரிய மரபணுத் தரவுத்தளங்கள்.
உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் கண்டறியும் DNA மற்றும் மரபணுத் தகவல்கள், இணையத்தில் உள்ள மிகப்பெரிய அறிவியல் தரவுத்தளங்களில் அதாவது இதற்கென உருவாக்கப்பட்ட வெப்சைட்டுகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட மிகப்பெரிய DNA தரவுகளை ஆராய்ந்துதான் Claude தனது தேடலை நடத்தியது.
DNA என்றால் என்ன?
ஒரு குழந்தையைப் பார்த்து,
“அப்படியே அப்பா மாதிரியே இருக்கான்!”
“கண் மட்டும் அம்மாவைப் போல இருக்கு!”
“மூக்கு தாத்தாவைப் போல!”
“முடி பாட்டியைப் போல!”
என்று நாம் சொல்வோம் அல்லவா?
தாத்தா, பாட்டியிடம் இருந்த சில உடல் பண்புகள் அப்பா, அம்மாவுக்கு வருகின்றன. அப்பா, அம்மாவிடம் இருக்கும் மரபுவழித் தகவல்களில் ஒரு பகுதி குழந்தைக்கும் வருகிறது.
இந்தத் தகவல்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அடிப்படை மூலக்கூறுதான் DNA.
தாத்தா, பாட்டி → அப்பா, அம்மா → குழந்தை என தலைமுறை தலைமுறையாக சில மரபுவழிப் பண்புகள் (Traits) கடத்தப்படுகின்றன. இந்தப் பண்புகளுக்கான மரபுத் தகவல்களைச் சுமந்து செல்லும் மூலக்கூறுதான் DNA.
அறிவியல் DNA-வை மரபுத் தகவல்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் மூலக்கூறு என்று வரையறை செய்திருந்தாலும், சமூகத்தில் இதற்கு வெகுகாலத்திற்கு முன்பே வேறொரு வகையான ‘மரபு விதி’ சொல்லப்பட்டு வந்தது. அதுதான் கர்மா.
“உன் அப்பன் இப்படித்தான்; நீயும் இப்படித்தான்”, “இந்தக் குடும்பத்தில் பிறந்தவன் இந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டும்”, “இந்த ஜாதியில் பிறந்தவன் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும்” என்று பிறப்பின் அடிப்படையில் மனிதனின் குணம், தொழில், சமூக நிலை ஆகியவற்றை நிர்ணயிக்கும் கருத்துகள் பல காலமாக சமூகத்தில் நிலவுகின்றன. கர்மா குறித்த சில சமூக விளக்கங்களும் இத்தகைய பிறப்பு சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு நியாயம் கற்பிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் அறிவியல் சொல்லும் மரபு வேறு. தாத்தாவின் மூக்கு பேரனுக்கு வரலாம்; அம்மாவின் கண் நிறம் மகளுக்கு வரலாம்; சில மரபணு நோய்கள்கூட தலைமுறைகளுக்குக் கடத்தப்படலாம். ஆனால் தாத்தாவின் தொழில் பேரனின் DNA-வில் எழுதப்பட்டிருக்காது. ஒருவர் எந்த ஜாதிக்குரிய தொழிலைச் செய்ய வேண்டும் என்ற கட்டளையும் DNA-வில் கிடையாது.
இப்போது அறிவியல் அதையும் தாண்டிச் சென்றிருக்கிறது. இயற்கையாக நமக்குக் கிடைக்கும் DNA-வில்கூட குறிப்பிட்ட இடங்களில் மாற்றங்களைச் செய்யும் தொழில்நுட்பத்தை மனிதன் ஏற்கெனவே உருவாக்கிவிட்டான். அதில் உலகப் புகழ்பெற்ற ஒன்றுதான் CRISPR- Clustered Regularly Interspaced Short Palindromic Repeats.
CRISPR என்றால் என்ன?
இங்கே முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
CRISPR என்று சொல்லும்போது இரண்டு விஷயங்களைப் பற்றிப் பேசுகிறோம்.
ஒன்று — இயற்கையான CRISPR அமைப்பு.
பாக்டீரியாக்களின் DNA-வில் இயற்கையாகவே ஒரு வித்தியாசமான அமைப்பு இருக்கிறது. சில DNA பகுதிகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் திரும்பத் திரும்ப அமைந்திருக்கும். இந்த இயற்கையான அமைப்புக்குத்தான் விஞ்ஞானிகள் CRISPR — Clustered Regularly Interspaced Short Palindromic Repeats என்று பெயரிட்டார்கள்.
பாக்டீரியாக்கள் தங்களைத் தாக்கும் வைரஸ்களை அடையாளம் கண்டு எதிர்த்துப் போராடுவதற்கு இந்த அமைப்பு உதவுகிறது.
இரண்டாவது — CRISPR மரபணுத் திருத்தத் தொழில்நுட்பம்.
இயற்கையில் பாக்டீரியாக்களிடம் இருந்த CRISPR அமைப்பு எப்படி வேலை செய்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள்.
அதிலிருந்து,
“இந்த முறையைப் பயன்படுத்தி நாமும் ஒரு உயிரினத்தின் DNA-வில் வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்து, அந்த இடத்தில் மாற்றம் செய்ய முடியுமே?”
என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
இதைத்தான் இன்று பொதுவாக CRISPR Gene Editing Technology — மரபணுத் திருத்தத் தொழில்நுட்பம் என்று சொல்கிறோம்.
கொரோனா காலத்தில் ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் என்று பல வகைகள் வந்ததை நினைவில் வைத்திருப்போம். கொரோனா வைரஸின் மரபணுத் தகவல்களில் இயற்கையாக ஏற்பட்ட சிறுசிறு மாற்றங்களால்தான் இப்படிப் புதிய வகைகள் உருவாகின. இதைத்தான் mutation — மரபணு மாற்றம் என்று சொல்கிறோம். (கொரோனா வைரஸின் மரபணுப் பொருள் RNA.)
அங்கே மரபணு மாற்றம் இயற்கையாக ஏற்பட்டது.
ஆனால் CRISPR தொழில்நுட்பத்தில் ஒரு உயிரினத்தின் DNA-வில் குறிப்பிட்ட இடத்தைக் குறிவைத்து விஞ்ஞானிகள் திட்டமிட்டு மாற்றம் செய்ய முடியும்.
இதன் பயன்பாடு ஆய்வகத்தோடு நின்றுவிடவில்லை.
பரம்பரையாக வரும் Sickle Cell — அரிவாள் செல் நோய் போன்ற கடுமையான ரத்த நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு CRISPR தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. நோயாளியின் உடலில் ரத்த அணுக்களை உருவாக்கும் stem cells-ஐ வெளியே எடுத்து, அவற்றின் DNA-வில் குறிப்பிட்ட மாற்றத்தைச் செய்து, மீண்டும் அந்தச் செல்களை உடலுக்குள் செலுத்தும் CRISPR அடிப்படையிலான சிகிச்சையும் மருத்துவப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இங்கேதான் Claude AI வருகிறது
லட்சக்கணக்கான மரபணுத் தகவல்களை Claude AI ஆராய்ந்தபோது, இதுவரை தனியாக அடையாளம் காணப்படாத ஒரு வித்தியாசமான இயற்கை மரபணு அமைப்பைக் கண்டுபிடிக்க உதவியது.
அதற்கு ART — Array-Associated Reverse Transcriptases என்று பெயரிட்டுள்ளனர்.
எளிமையாகச் சொன்னால், DNA-வில் வரிசையாகத் திரும்பத் திரும்ப அமைந்துள்ள பகுதிகளுடன் தொடர்புடைய ஒரு வகை அமைப்பு.
இதைக் கண்ட விஞ்ஞானிகளுக்கு ஏன் ஆர்வம் ஏற்பட்டது?
ஒரு காலத்தில் பாக்டீரியாக்களில் இப்படித்தான் ஒரு வித்தியாசமான இயற்கை CRISPR அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆராய்ந்ததன் விளைவாகத்தான் இன்று DNA-வைத் திருத்தும் CRISPR தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
இப்போது Claude கண்டுபிடிக்க உதவிய ART-லும், இயற்கையான CRISPR அமைப்பை நினைவூட்டும் வகையில் ஒழுங்கான DNA repeat பகுதிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதனால் எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி:
“ஒரு காலத்தில் இயற்கையான CRISPR அமைப்பிலிருந்து DNA-வைத் திருத்தும் புதிய தொழில்நுட்பம் கிடைத்ததைப் போல, Claude கண்டுபிடிக்க உதவிய ART-லிருந்தும் எதிர்காலத்தில் ஏதாவது புதிய மரபணுத் தொழில்நுட்பம் கிடைக்குமா?”
இப்போதைக்கு தெரியாது.
ART உண்மையில் இயற்கையில் என்ன வேலை செய்கிறது என்பதையே விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
21 மணி நேரத்தில் Claude எப்படி ART-ஐ கண்டுபிடித்தது?
விஞ்ஞானிகள் Claude-க்கு கொடுத்த வேலை எளிமையானதுதான். “இந்த லட்சக்கணக்கான DNA தகவல்களையும் தேடிப் பார். இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காத அல்லது கவனிக்காத ஏதாவது புதிய விஷயம் இருக்கிறதா என்று கண்டுபிடி” என்பதுதான் அந்த வேலை.
சரி… என்ன நடந்தது?
இந்த வேலையை ஒரு Claude மட்டும் செய்யவில்லை. சுமார் 950 Claude AI agents தனித்தனியாகப் பிரிந்து வேலை செய்தன.
அவை 2 லட்சத்துக்கும் அதிகமான மரபணுத் தகவல்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்தன. அவற்றில் வழக்கத்திலிருந்து வித்தியாசமாகத் தெரிந்தவற்றைத் தனியாகப் பிரித்தெடுத்தன.
இதையெல்லாம் செய்ய Claude-க்கு எவ்வளவு நேரம் ஆனது?
வெறும் 21 மணி நேரம்.
சுமார் 950 Claude AI agents, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மரபணுத் தகவல்களை ஆராய்ந்து, அவற்றை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு, வித்தியாசமான அமைப்புகளைத் தேடின.
இப்படித் தேடிக்கொண்டிருந்தபோதுதான் Claude ஒரு வித்தியாசமான மரபணு அமைப்பை அடையாளம் காண உதவியது. அதற்குத்தான் ART என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானி பல வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை செலவிடக்கூடிய இந்தத் தரவு ஆய்வுப் பணியை, சுமார் 950 Claude AI agents இணைந்து 21 மணி நேரத்தில் செய்திருக்கின்றன.
அதனால்தான் இந்த ஆய்வு அறிவியல் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆனால் இங்கே முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.
21 மணி நேரத்தில் Claude ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை. மனித DNA-வை மாற்றவும் இல்லை. மிகப்பெரிய மரபணுத் தரவுகளுக்குள் மறைந்திருந்த ஒரு வித்தியாசமான அமைப்பை மிக வேகமாக அடையாளம் காண உதவியிருக்கிறது.
இதன் பொருள் 21 மணி நேரத்தில் முழு அறிவியல் கண்டுபிடிப்பும் முடிந்துவிட்டது என்பதல்ல. Claude கண்டுபிடித்த தடயத்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் சோதித்த பிறகே ART என்ற புதிய அமைப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
ART உறுதிப்படுத்தப்பட்டதால் நாளையே மரபணு நோய்களுக்கு புதிய சிகிச்சை வந்துவிடும் என்று அர்த்தமல்ல. ஆனால் இதுவரை நமக்குத் தெரியாத ஒரு இயற்கையான மரபணு அமைப்பு விஞ்ஞானிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், எதிர்காலத்தில் புதிய மரபணுத் தொழில்நுட்பங்களுக்கு வழி திறக்குமா என்பதே அடுத்தகட்ட ஆராய்ச்சி.
இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் DNA-வில் என்னென்ன செய்ய முடியும் என்ற புதிய சாத்தியங்கள் விவாதிக்கப்படுகின்றன.
Cut — தேவையற்ற DNA பகுதியை வெட்டி அகற்றுவது.
Copy — தேவையான மரபணுத் தகவலை நகலெடுப்பது.
Paste — தேவையான மரபணுத் தகவலை வேறொரு இடத்தில் சேர்ப்பது.
Replace — தவறான மரபணுப் பகுதியை மாற்றி, சரியான தகவலைப் பதிப்பது.
Rewrite — DNA-வின் ஒரு பகுதியைத் தேவைக்கேற்ப மாற்றி எழுதுவது.
இவையெல்லாம் சாத்தியமானால் மனித வாழ்க்கையில் என்ன மாறும்?
நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளோம்.. DNA என்பது நமது உடல் எப்படி உருவாக வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான மரபுத் தகவல்களைச் சுமந்து செல்கிறது. அதில் ஏற்படும் சில தவறுகள் மரபணு நோய்களுக்குக் காரணமாகின்றன.
DNA-வில் நோய்க்குக் காரணமான மரபணு மாற்றம் இருந்தால், அந்த இடத்தைக் கண்டுபிடித்து தேவையான திருத்தத்தைச் செய்ய முடிந்தால், பல மரபணு நோய்களுக்குப் புதிய சிகிச்சை வாய்ப்புகள் உருவாகலாம்.
அதாவது DNA-வை ஒரு பெரிய புத்தகமாக நினைத்துக்கொண்டால், அதில் A, T, G, C என்ற நான்கு வகையான ‘எழுத்துகள்’ கோடிக்கணக்கில் வரிசையாக அமைந்திருக்கின்றன. இந்த வரிசையில் சில இடங்களில் ஓர் எழுத்து மாறலாம்; சில எழுத்துகள் காணாமல் போகலாம்; சில புதிதாகச் சேரலாம். இப்படிப்பட்ட சில மாற்றங்கள் மரபணு நோய்களுக்குக் காரணமாகின்றன.
பரம்பரையாக வரும் சில மரபணு நோய்களுக்கு புதிய சிகிச்சைகள் உருவாகலாம்.
புற்றுநோய் போன்ற சில நோய்களை எதிர்த்துப் போராட நோயாளியின் செல்களையே மாற்றி அமைக்கும் சிகிச்சைகள் மேலும் முன்னேறலாம்.
ஒருவரின் மரபணு அமைப்புக்கு ஏற்றவாறு தனிப்பட்ட சிகிச்சைகளை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
இதையும் தாண்டி ஒரு மிகப்பெரிய கேள்வி வருகிறது.
நோய் வந்த பிறகு DNA-வைத் திருத்துவதற்குப் பதிலாக, அந்த நோய் அடுத்த தலைமுறைக்குச் செல்லாமல் முன்பே தடுக்க முடியுமா?
அங்குதான் இந்த அறிவியல் மருத்துவத்தைத் தாண்டி, மனித இனத்தின் எதிர்காலம், கருவிலேயே மரபணுத் திருத்தம், அந்த மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுமா, அவை பாதுகாப்பானவையா, சரியா தவறா போன்ற மிகப்பெரிய அறிவியல் மற்றும் நெறிமுறை விவாதங்களுக்குள் நுழைகிறது.
DNA- மரபு- அடுத்த தலைமுறை- கர்மா
நாம் ஆரம்பத்தில் பார்த்தது போல, தாத்தா, பாட்டியிடம் இருந்த சில மரபுவழிப் பண்புகள் அப்பா, அம்மாவுக்கும், அவர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் DNA வழியாகக் கடத்தப்படுகின்றன.
ஆனால் இப்போது அறிவியல் கேட்கும் கேள்வி இன்னும் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது.
ஒரு குழந்தைக்குப் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் DNA-வில் நோயை ஏற்படுத்தக்கூடிய மரபணுத் தவறு இருந்தால், அதை அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதற்கு முன்பே திருத்த முடியுமா?
அப்படி ஒருநாள் பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் செய்ய முடிந்தால், “பிறக்கும்போதே எல்லாம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது; அதை மாற்ற முடியாது” என்ற பழைய சிந்தனைக்கு அறிவியல் முற்றிலும் வேறொரு பார்வையை முன்வைக்கும்.
ஏனெனில் அறிவியல் சொல்லும் மரபு என்பது மாற்றவே முடியாத விதி அல்ல. மரபணுவைப் புரிந்துகொள்ளவும், சில மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் மனிதன் ஏற்கெனவே தொடங்கிவிட்டான்.
கர்மா என்பது அறிவியல் கண்டறிந்த மரபணுக் கோட்பாடு அல்ல. அது மனித சமூகத்தில் உருவான தத்துவ, மதக் கருத்து. அது ஒரு நம்பிக்கை அல்லது கற்பிதம். ஆனால் DNA என்பது அறிவியல் ஆய்வுகளால் கண்டறியப்பட்ட உயிரியல் உண்மை.
“உன் அப்பன் இப்படித்தான்; நீயும் இப்படித்தான்”, “இந்தக் குடும்பத்தில் பிறந்தவன் இந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டும்”, “இந்த ஜாதியில் பிறந்தவன் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும்” என்று பிறப்பின் அடிப்படையில் மனிதனின் குணம், தொழில், சமூக இடத்தை நிரந்தரமாகத் தீர்மானிக்கும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு DNA அறிவியல் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
தாத்தாவின் மூக்கு பேரனுக்கு வரலாம். தந்தையின் தொழில் DNA வழியாக மகனுக்கு வராது.
அம்மாவின் கண் நிறம் மகளுக்கு வரலாம். ஜாதி DNA வழியாக அடுத்த தலைமுறைக்கு வராது.
மனிதனின் உடலில் தலைமுறை தலைமுறையாகப் பயணிப்பது மரபணுத் தகவல்கள். மனிதன் உருவாக்கிய சமூக ஏற்றத்தாழ்வுகள் அல்ல.
DNA-வில் இருப்பது மரபணு. அதில் எழுதப்பட்டிருப்பது ஜாதியோ, தொழிலோ, கர்மாவோ அல்ல.
மரபணுவையே படித்து, அதில் ஏற்படும் சில தவறுகளைத் திருத்தும் அளவுக்கு அறிவியல் வளர்ந்து நிற்கும் இந்தக் காலத்தில், Claude AI கண்டுபிடிக்க உதவிய ART இப்போது திறந்திருப்பது ஒரு புதிய மரபணு அமைப்பின் கதவை மட்டுமல்ல; மனிதன் தனது மரபைப் புரிந்துகொள்ளும் அடுத்தகட்ட அறிவியல் பயணத்தின் கதவையும்தான்.
