கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு அடுத்தடுத்து பூகம்பங்களை கிளப்பி வரும் நிலையில், சென்னை ஆணையராக இருந்த அருண், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்
தேனாம்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த ஜெம் கிரானைட் தொழிலதிபரான வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆதிதிராவிடர் நலப் பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பான விவரங்கள் தனக்கு தெரிய வந்தபோது, 2024 நவம்பர் 22ஆம் தேதி அப்போதைய சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் கண்ணனை நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாக தெரிவித்திருந்தார்.

இப்படி ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் மற்றும் சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன் இருவரும் இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக அருணும், கோவை மாநகர காவல் ஆணையராக கண்ணனும் செயல்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கிடையே ஜெம் வீரமணி வழக்கை முன்பு விசாரித்த உதவி ஆணையர் யாஸ்மின், விபசார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
