தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை பலரது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படாததால் சுமார் 5 லட்சம் பயனாளிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வழக்கமாக மாதம் தோறும் 5-ஆம் தேதிக்குள் உதவித்தொகை வரவு வைக்கப்படும் நிலையில், இந்த மாதம் தற்போது வரை முதியோர் உதவித்தொகை விடுவிக்கப்படவில்லை. இதேபோல் கணவனை இழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையும் தற்போது வரை வராததால், அன்றாட மருத்துவச் செலவு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பணமின்றிப் பயனாளிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாத சூழலில், ஆதார் மற்றும் வங்கிக் கணக்கில் பெயர் மாறுபாடு இருப்பதால் தபால் நிலையத்தில் புதிய கணக்குத் தொடங்கி மீண்டும் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சிறப்பு முகாமில் நூற்றுக்கணக்கான முதியவர்கள் புதிய கணக்குத் தொடங்க வருகை தந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அங்கிருந்த பயனாளிகள், “முதியோர் உதவித்தொகையை வழங்காமல் அரசு அலைக்கழிக்கிறது; வயதான காலத்தில், உடல்நிலை சரியில்லாத சூழலில் எங்களால் அலைந்து திரிய முடியவில்லை. அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
அதேசமயம், மத்திய அரசின் அறிவுறுத்தல்படி செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டத்திற்கான உதவித்தொகை வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, ‘ஆதார் அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை முறை’ (Aadhaar Based Payment System) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பயனாளிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் மட்டுமே இந்த நிதி உதவி நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, இதுவரை தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத அனைத்துப் பயனாளிகளும் உடனடியாகத் தங்கள் வங்கி கிளைக்கு நேரில் சென்று ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
