ஜெம் வீரமணி வழக்கு விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவை தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அமைத்துள்ளார்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட காலகட்டத்தில் உரிய பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து முன்னாள் சென்னை கமிஷனர் அருண், சென்னை தெற்கு காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன், கோயம்பேடு உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜெம் வீரமணி வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட குழுவை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அமைத்துள்ளார்.
இது குறித்து காவல்துறை தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பெருநகர சென்னை காவல்துறையின் CCB வழக்கு எண். 174/2025 மற்றும் அது தொடர்பான விவகாரங்களை திறம்பட விசாரிப்பதற்காக, பின்வரும் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்படுகிறது
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி ஐபிஎஸ்,
சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை காவல் ஆணையர் திஷா மிட்டல் ஐபிஎஸ்,
தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலக ஊடகத் தொடர்பு அலுவலர் முத்தரசி ஐபிஎஸ்
சென்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை காவல் ஆணையர் கீதாஞ்சலி ஆகியோர் இக்குழுவில் இடம் பெறுவார்கள்.
இந்த சிறப்பு புலனாய்வுக் குழு, பெருநகர சென்னை காவல் ஆணையரின் மேற்பார்வையின் கீழ் செயல்படும். பெருநகர சென்னை காவல் ஆணையர், இக்குழுவிற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
