திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடு உள்ளது. இந்தநிலையில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இருந்து இரு குழுக்களாக வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தகவல்கள் வருகின்றன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவலை இன்னும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவிக்கவில்லை.
வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
