மு.க.ஸ்டாலின் தோல்வி… காக்ரோச் ஜனதா கிளப்பிய ‘திடுக்’ குற்றச்சாட்டு!

Published On:

| By Mathi

MK Stalin-CJP

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததற்கும், அவரது கொளத்தூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வியை காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே எழுப்பியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் செப்டம்பர் 24ஆம் தேதி அபிஜீத் திப்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தோல்வியடைந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

மு.க.ஸ்டாலின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கம்

தமிழ்நாடு குறித்து பேசிய அபிஜீத் திப்கே, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. இந்த தேர்தலில் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இந்த இரண்டையும் தனித்தனியாகப் பார்க்க முடியுமா? என்றார்.

ADVERTISEMENT

மேலும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் தோல்விகளையும் வாக்காளர் பட்டியல் நீக்க நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தி அவர் கேள்வி எழுப்பினார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததைத் தொடர்ந்து, பிராந்திய அரசியல் சக்திகள் வலுவடைவதை உணர்ந்த பிறகே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அபிஜீத் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

இந்தத் தேர்தல் முடிவுகள் அனைத்தையும் பட்டியலிட்ட அபிஜீத் திப்கே, மாநில கட்சிகளின் தலைவர்களின் அடுத்தடுத்த தோல்விகளை வெறும் தற்செயலான நிகழ்வுகளாகப் பார்க்க முடியாது என்றார்.

இந்த வாக்காளர் பெயர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய அபிஜீத், மாநிலங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் ஏற்பட்ட வாக்காளர் பட்டியல் மாற்றங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

எந்த ஒரு குறிப்பிட்ட எதிர்க்கட்சியின் மீதும் தங்களுக்கு தனிப்பட்ட பற்று இல்லை என்று கூறிய அபிஜீத், ஒரு ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளே முற்றிலுமாக இல்லாமல் போனால் அதை சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்று எப்படிக் கூற முடியும் என்ற கேள்வியை எழுப்பினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share