“வீட்டு வேலை பார்க்க.. சமைத்து போடத்தானா திருமணம்?” – அமைச்சர் விஸ்வநாதன் பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக ஆட்சிக்கு ஒரு 6 மாத காலம் அவகாசம் கொடுங்கள்’ என்று கேட்கும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அஞ்சறைப் பெட்டியும் தெரியவில்லை, பாலினச் சமத்துவமும் புரியவில்லை என உ.வாசுகி கடுமையாக விமர்சித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாங்கள் ஆட்சிக்கு வந்து 120 நாட்கள் தான் ஆகின்றன. ‘ஒரு 6 மாத காலம் அவகாசம் கொடுங்கள்’ என்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதல் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் கேட்டார். ஒரு பெண் திருமணம் செய்து வீட்டிற்கு வந்தால், அந்தப் பெண்ணிற்கு அஞ்சறைப் பெட்டியில் அரிசி, கடுகு, உளுந்து எங்கு இருக்கிறது எனத் தெரிவதற்கு பல நாட்கள் ஆகும். நாங்கள் வந்து 120 நாட்கள் தான் ஆகின்றன, அதற்குள் எவ்வளவு செய்துவிட்டோம். நீங்கள் முக்கியமாக ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்; லஞ்சமில்லாத, ஊழலில்லாத நல்ல அரசை அமைத்திருக்கிறோம். இதன் அடிப்படை என்னவென்றால், தேவையானதை மக்களுக்குத் தேவையான நேரத்தில் செய்துகொடுப்போம் ” என்றார்.

ADVERTISEMENT

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் சிரித்தவாறு அருகில் இருந்தார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான உ.வாசுகி தனது முகநூல் பக்கத்தில், “புதிய ஆட்சிக்கு அவகாசம் வேண்டும் எனக் கேட்பது அவர்கள் விருப்பம். ஆனால் அஞ்சறை பெட்டியில் எது எங்கே உள்ளது என்பதை புது மனைவி தேட பல நாட்களாகும் என்று அமைச்சர் விஸ்வநாதன் சொல்வது மிகவும் கொடுமை. இருக்கிற ஒரு அஞ்சறைப் பெட்டியில் எதைத் தேட இத்தனை நாளாகும் எனப் புரியவில்லை.. அது என்ன, புது மனைவி தான் தேட வேண்டுமா? அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த கணவன் அந்தப் பக்கமே வர மாட்டாரா? வீட்டு வேலை பார்க்க.. சமைத்து போடத் தானா திருமணம்?

ADVERTISEMENT

உயர்கல்வித்துறையில் இருந்து கொண்டு இப்படி பேசுவது கல்விக்கு இழைக்கிற அநீதி இல்லையா? அஞ்சறை பெட்டியில் அரிசியை தேடுவது என்று வேறு அமைச்சர் பேசுகிறார்.. யார் வீட்டில் அரிசியை அஞ்சறை பெட்டியில் போடுவோம்? அமைச்சருக்கு அஞ்சறை பெட்டியும் தெரியவில்லை..பாலின நிகர்நிலையும் புரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இணையவாசிகள், “சரியான விமர்சனம் தோழர். எம்பி ஜோதிமணி சிரிப்பது எரிச்சலாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share